நான் எப்போதும் விடுதலைப்புலிகள் ஆதரவாளன்தான்; தில்லி உயர்நீதிமன்றத்தில் வைகோ.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் தடை மீதான விவாதத்தில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்பியுமான வைகோ கலந்துகொண்டுள்ளார்.
அங்கு   நான் என்றைக்கும் விடுதலைப் புலிகள் ஆதரவாளன்தான்  என  வாதம் செய்துள்ளார்,

காலையில் தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக மாநிலங்களவையில் முழங்கிய வைகோவின் குரல் மாலையில் தில்லி உயர்நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்காக ஒலித்தது.

இது குறித்து மதிமுக தரப்பில் எமக்கு அனுப்பிவைத்த செய்தி குறிப்பு;

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாயத்தில் இன்று (26.07.2019) நடைபெற்ற விசாரணையில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். அப்போது அவர் எடுத்துரைத்த வாதம்:-

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 19 மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். அதே குற்றச்சாட்டின் பெயரில் என் மீது 124ஏ பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது. அந்த வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கின்றேன்.

இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தச் சட்டப் பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒரே நபர் நான்தான். எனவே விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் என்ற முறையில், விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து நடைபெற்று வருகின்ற தீர்ப்பாய விசாரணைகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்று வருகின்றேன்.

2010 ஆம் ஆண்டு நீதிபதி விக்ரமஜித்சிங் சென் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையிலும், 2012 ஆம் ஆண்டு நீதிபதி வி.கே.ஜெயின் மற்றும் 2014 ஆண்டு நீதிபதி ஓ.பி.மிட்டல் ஆகிய மூன்று விசாரணைகளிலும் பங்கேற்று உள்ளேன்.

அந்தத் தீர்ப்பாயங்கள் என்னுடைய வாதங்களைப் பதிவு செய்துள்ளன.

எனவே விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளன் என்ற முறையிலும், அதனால் சிறைத் தண்டனைப் பெற்றவன் என்ற வகையிலும் இந்தத் தீர்ப்பாயத்தில் என்னுடைய வாதங்களை எடுத்து வைக்க மாண்புமிகு நீதிபதி அவர்கள் அனுமதிக்க வேண்டுகிறேன்.

மாண்புமிகு நீதிபதி: முந்தைய தீர்ப்பாயங்களில் நடைபெற்றுள்ள விசாரணையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்ப்பாயம் விசாரணை மேற்கொள்ளும். ஆகஸ்டு 16, 17, 18 ஆகிய தேதிகளில் இந்தத் தீர்ப்பாய விசாரணை சென்னையில் நடைபெறும். அங்கே உங்கள் வாதங்களை எடுத்துக் கூறலாம்.
 என குறிப்பிட்டார்.

No comments