மைத்திரியை சந்தித்த முஸ்லீம் தரப்புக்கள்?


நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தை, இனியும் நீடிக்கப்போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், ஏ.எச்.எம். பௌஸி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா உள்ளிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (09) இரவு இடம்பெற்றது.
இதன்போது, நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இலக்கு வைக்கப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும், ஜனாதிபதியிடம்  எடுத்துரைக்கப்பட்டது.
இதன்போதே​, அவசரகாலச் சட்டத்தை இனியும் நீடிக்கும் எண்ணமில்லை என்று, ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு, அவர்களின் பிரசவத்துக்குப் பின்னர், மீண்டும் கர்ப்பம் தரிக்க முடியாத வகையில் கர்பத்தடைச் சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்த குருநாகல் வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்தியர் ஷாபி, குற்றமற்றவர் என்று, அவர் தொடர்பான விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும், ஜனாதிபதியினால் இதன்போது உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள் முஸ்லிம் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், மௌலவிமார்கள் 36 பேரை, இன்றைய தினம் (09) விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இவர்களின் விடுதலை குறித்து, சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர், இராணுவத் தளபதி ஆகியோருடன் பேசி, உடன் நடவடிக்கை எடுக்குமாறு தான் கூறியதாகக் கூறுமாறு, பைஸர் முஸ்தபா எம்.பியிடம், ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்திக்கு எதிராகவும் இந்நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு எதிராகவும், மோசடியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய முஸ்லிம் எம்.பிக்கள்,​ தேரரை ஜனாதிபதியே விடுவித்துள்ளதால், இது விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு, இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

No comments