இனப்படுகொலையில் ஈழம் சிந்திய குருதிப்புனலுக்கு தகுந்த நீதியை தந்திட…



இனப்படுகொலையில் ஈழம் சிந்திய குருதிப்புனலுக்கு தகுந்த நீதியை தந்திட…

இனப்படுகொலையில் ஈழம் சிந்திய குருதிப்புனலுக்கு தகுந்த நீதியை தந்திட யாருளரோ...!

இலங்கை தேசத்தில் பௌத்தம் வேரூன்ற முன்பே தமிழர்கள் வாழ்ந்தாக மகாவம்சம் கூறுகின்றது.
இருந்த போதும் தாமே முதற்குடிகளென சிங்கள பேரினவாதமும் வாதிடுகிறது. இருப்பினும் வரலாறுகள் சீரழிகப்பட்டு, தமிழர் கலாச்சார ஆதாரங்கள் அழிக்கப்பட்ட பின்னணியில் சிங்கள பௌத்த மக்கள் தமக்கான வரலாற்றை புனைந்திருப்பது மிகவும் பிற்போக்கான மனிதநேயத்தையே காட்டி நிற்கின்றது.

போதிமர புத்தன் கொடுத்த போதனை வேறு அதனை பின்பற்றும் தேரவாத மதக்கொள்கை வேறு என்பதனை சிங்கள பௌத்தர்கள் தமது வாழ்நாள் முழுவதும் நிருபித்த வண்ணமுள்ளனர். ஆரம்பத்தில் தமிழர்களும் பௌத்தமத போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்தனர் என்பதற்கு பல பல சான்றுகள்
உள்ளன. ஏனெனில் பௌத்த மதக்கருத்துக்கள் யாவும் அறஞ்சார்ந்து, அகிம்சை வழி செல்லும் தர்ம கருத்துக்களை மக்களிடையே பரப்பி, மானிடப்பிறவியின் அர்த்தத்தை கூறி மனித பிறவி வீடுபேறடையும் நெறிகளை விளக்கும் பொக்கிசமாக எல்லோராலும் மதிக்கப்பட்டது.

உயிர்களிடத்தில் அன்பாக இருக்க பௌத்தம் மதம் போதனை செய்த போதும் அந்த பௌத்த கருத்துக்களை பின்பற்றிய சிங்களவர்கள் உயிர்களை பலியெடுக்கும் புதிய நுட்பங்களை கையிலெடுத்தனர். எமது தேசியத்தலைவரின் சிந்தனைப்படி “ ஜே ஆர் ஜெயவர்த்தனா உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தியிருக்க மாட்டேன்” எனும் சிந்தனையானது தமிழர்கள் பௌத்த நெறி மீது கொண்டுள்ள ஆழமான, மிக நேர்த்தியான நம்பிக்கையை பிரதிபலிக்கின்றது.

போர்த்துக்கேய, ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களின் அடிமை வாழ்விலும் கூட தமிழர்கள் தமக்கான பாரம்பரிய விழுமியங்களோடும் வீரமிகு வாழ்வை வாழ்ந்தும், தமது பண்பாட்டை பேணியும் வாழ்ந்து வந்தனர். தமக்கான தேச எல்லை நிர்ணயத்தோடும் தமக்கான ஆட்சி, அதிகார சுயநிர்ணயத்தோடு வாழ்ந்தனர் என்பது அந்த அந்நிய அதிகார வர்க்கங்களின் வரலாற்று ஏடுகளில் மிகத்தெளிவாக பதியப்பட்ட ஒன்றாக இன்று வரை கூறப்படுகிறது.

அந்நிய வல்லாதிக்க சக்திகளிலிருந்து விடுபட்ட நாள் தொட்டு இன்று வரை ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாக தமிழினம் தமக்கான சுயநிர்ணயமிக்க வாழும் உரிமைக்காக போராடியவண்ணமுள்ளனர். அதனை தமிழீழதேசத்தை அமைத்திட அகிம்சை அறவழியில் போராட்டமும், ஆயுத போராட்டமும் துல்லியமாக உலத்தினருக்கு பறைசாற்றி நிற்கின்றன. இருந்த போதும் தமிழ் மக்களுக்கான ஆட்சி அதிகாரம் மறுக்கப்பட்டு அவர்தம் வாழ்வுரிமை நசுக்கப்படும் நிகழ்ச்சி நிரலையே சிங்கள பௌத்த அரசுகள் நித்தமும் நடைமுறையில் கொண்டுள்ளன.

எண்பதுகளின் ஆரம்ப காலங்களில் இனவன்முறை மிகவும் திட்டமிடப்பட்டு கட்டவிழ்க்கப்பட்டமைக்கு அப்பாவி தமிழர்களின் படுகொலையான எண்பத்து மூன்றில் நடந்தேறிய யூலை கலவரத்தை கூறலாம். அந்த மனித அவலத்தை நினைக்கையில் மனசெல்லாம் பதறுகின்றது. அதன் பின்னரே தமிழரின் தாயகப்பகுதி எங்கும் சிங்கள இராணுவமும், சிங்கள ஊர்காவல் படையும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய கைக்கூலிகளான முஸ்லீம் தீவிரவாத அமைப்புக்களும் இணைந்து பல்வேறுபட்ட படுகொலைகளை செய்து, தமிழர்களின் இரத்தம் சிந்திய வலியை கொண்டாடி மகிழ்ந்தனர் என்றால் யாரும் மறுப்பதற்கில்லை.

தமிழர் தாயகப்பகுதி எங்கும் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழினப்படுகொலையை செய்து தம் இனவாத, மதவாத அரசை சிங்களம் நிலைநிறுத்த பாடுபட்டது எனலாம். எங்ஙனம் தமிழர்களின் பாரம்பரியங்களை அழித்தொழிக்கலாம் என்பதற்கு நன்கு கல்வி கற்ற சிங்கள தலைவர்களும் பின்நிற்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சிங்களத்தின் மிக மிக கீழ்த்தரமான செயலாக யாழ்ப்பாண நூல்நிலைய அழித்து அந்த நூல்கள் எரியும் போது வெளிவந்த நூலின் வாசத்தை நுகர்ந்தே தமது இனவன்முறைக்கு மேலும் மேலும் தூபம் இட்டுக் கொண்டனர். இதுவே சிங்கள அரசின் உச்சக்கட்ட இனத்துவேசத்தை உலகெங்கும் படம்பிடித்து காட்டியது எனலாம்.

சம்பூரில் 07.07.1990 இல் இடம்பெற்ற தமிழினப்படுகொலை

சம்பூர் பெருநிலப்பரப்பானது புவிசார் அரசியியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பாக இந்திய மற்றும் பிற வல்லரசுகளாலும் தெளிவாக நோக்கப்படும் ஒரு விடயமாகும். காரணம் யாதெனில் திருகோணமலை இயற்கை துறைமுகமே ஆகும். அந்த இயற்கை துறைமுகத்திற்கு மிகவும் பாதுகாப்பரணாகவும், மிகமிக ஆபத்து நிறைந்த நிலமாகவும் சம்பூரணம் எனும் சம்பூர் கிராமம் மிளிர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பூர் கிராமம் அறுபத்துற்கும் மேற்பட்ட குளங்கள், வயல்கள் மற்றும் பசுமை காடுகளை கொண்ட வளமிக்க பெருநிலமாகும். நால்வகை நிலங்களும் செழித்திருக்கும் கிராமாகவும் அத்தோடு எங்கும் கிடைத்திடாத நீர்வளம் கொண்ட கிராமம் என்பதோடு இம்மக்கள் தற்சார்பு பொருளாதாரத்தை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தவர்கள் என்பதே மிகச்சிறப்பாகும். அவ்வாறே இம்மக்கள் தமிழீழ போராட்ட குணம் குறையாதவர்களாவும், வீரஞ்செறிந்தவர்களாகவும் வாழ்ந்துவந்தனர்.

தொன்னூறுகளில் மிக கொடூரமான இனவன்முறையில் சிங்கள பேரினவாதம் பெரிதும் ஈடுபட்டு கொண்டிருந்தது. அதற்கமைய ஈழப்போராட்டமும் மிகவும் உக்கிரமாக வளர்ச்சி பெற்றே இருந்தது. இக்காலங்களில் தமிழீழ இராணுவம் அதன் ஆட்சி அதிகார நிலப்பரப்பை விரிபுபடுத்தும் நோக்கோடு பல சண்டைகளும் நிகழ்ந்தேறின. இதன் ஒரு முனைப்பாகவே கொட்டியாரப்பற்று எனும் சிறுநகரை கைப்பற்றி தமது ஆளுகைக்கு கீழ் தமிழீழ இராணுவம் வைத்திருந்தது. இழந்த அந்த நிலப்பரப்பை மீண்டும் மீட்க அரச இயந்திரம் பல முனைப்புக்களில் இராணுவத்தை இறக்கி சண்டை இட்டது. அனைத்தும் முறியடிக்கப்பட்டவே, பெரும் ஏமாற்றத்தை அடைந்தது அரச இயந்திரம்.

தமிழீழ இராணுவத்திற்கான வழங்கல் தளமாக சம்பூர் பெருநிலப்பரப்பு இயங்கியமை குறிப்பிடத்தக்கது. நாட்கள் நகர நகர தமிழீழ இராணுத்தின் வழங்கல், ஆட்பற்றாக்குறை மற்றும் கைப்பற்றிய நிலத்தை பாதுகாக்க போதிய படையணி இல்லாது போக அப்பிரதேசத்தை கைவிட்டு பின்னகர முற்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி சிங்கள பௌத்த அரசும், அவர்களோடு இயங்கிய முஸ்லீம் ஊர்காவல் படையினரும் பெரும் படையெடுப்பை சம்பூர் பெருநிலப்பரப்பின் மீது நடத்தியது.

சம்பூர் பெருநிலப்பரப்பு பல கிராம மக்களுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த அந்தக் காலப்பகுதியில் தான் இத்தகைய சுற்றிவளைப்பும், காட்டிக்கொடுப்பும், கடத்தலும் மற்றும் படுகொலைகளும் நடந்தேறின. அதாவது இனவன்முறை சம்பூரல்லாத ஏனைய அரச கட்டுப்பாட்டில் உள்ள தமழ்க்கிராமங்களில் நிகழ்ந்தேற அக்கிராம மக்கள் சம்பூரை நோக்கி இடம்பெயர்ந்து வாழத்தலைப்பட்ட காலத்தில் தான் இத்தகைய பேரவலத்தை அரச இயந்திரமும் அதனோடு இயங்கிய முஸ்லீம் ஊர்காவல் படையினரும் நிகழ்த்தி இன்புற்றனர்.

பொதுவாக சம்பூர் பெருநிலப்பரப்பின் மீது அரச இயந்திரம் படையெடுப்பதும், மக்களது சொத்துக்களை சூறையாடுவதும், எரிப்பதுமாக செயற்பட்டு பின்னர் ஓரிரு நாளில் அப்பகுதியை விட்டுச்செல்வதுமாக அமையும். ஆனால் அன்றைய தினம் கடல், தரை மற்றும் வான்வழியாகவும் படைகள் நகர்த்தப்பட்டு ஏறக்குறைய மூன்று நாலு நாட்கள் தங்கியிருந்து மனித வேட்டையை சிங்கள அரசு நிகழ்த்தியது.

அரச இயந்திர படையெடுப்பின் போது ஆண்கள் காடுகளில் சென்று மறைவாக வாழ்வதும், பெண்களும் பிள்ளைகளும் பாடசாலை மற்றும் கோவில்களில் தஞ்சம் புகுந்து பயத்தின் காரணமாக இருப்பதுமாக அமைந்துவிடும். அன்றும் அவ்வாறே மக்கள் பயபீதியில் ஒன்றாக இருக்க, ஆண்களும் இளைஞர்களும் காடுகளில் தலைமறைவாக இருந்தனர். ஆனால் சிங்கள அரசின் திட்டப்படி படுகொலைக்கான நிகழ்ச்சி நிரலில் இயங்க அரச இயந்திரம் தயாரானது.

காடுகளில் மறைந்திருந்தவர்களுக்கு தாகத்திற்கு தண்ணீரில்லை, பசிக்கு உணவில்லை போன்ற பெரும் கொடுமையோடு, கானகமும் இலையுதிர்த்து நின்றது. குறிப்பிட்ட காடுகளிடையே தேடுதலை மேற்கொண்ட சிங்கள மற்றும் முஸ்லீம் படையணி கண்ணில் பட்ட அப்பாவி தமிழர்களை வெட்டியும் கொத்தியும் துப்பாக்கியால் வெடிவைத்தும் கொன்று குவித்தனர். அதுமட்டுமின்றி அவர்களது உருவமைப்பு தெரியாவண்ணம் உடல்களை எரியூட்டியும் சென்றனர். ஏறக்குறைய இருநூறுக்கும் மேற்பட்ட உறவிரை பலியெடுத்து மகிழ்ந்தது அரச இயந்திரம்.

காடுகளிடைய இரத்தவெறி முடிந்தவுடன் காளிகோவில் மற்றும் பிள்ளையார் கோவிலில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்களை காட்டிக்கொடுத்து பிடிக்கும் பாதகச் செயலில் இறங்கியது துரோக கூட்டம். இதனடிப்படையில் எமது அன்பான பாடசாலை அதிபர், பாதுகாப்பு உத்தியோகத்தர், பாசமிகு தாய் மற்றும் ஒன்றுமறியாத பலரை எம் கண்முன்னே களவாடிச் சென்றது அரச இயந்திரம். இன்றுவரையில் அவர்களின் தகவல்கள் எமக்கு கிடைக்கவில்லை என்பது வலிமிகு வேதனையே.

படுகொலை செய்யப்பட்டவர்களுள் கிராம வைத்தியர், பாடசாலை மாணவர்கள், பிரதேச தபால் உத்தியோகத்தர், கோயில் அர்ச்சகர் மற்றும் அன்றாடம் கூலிக்கு போய் வாழ்வை நடத்தும் அப்பாவிகள் என பலரது சோகமான நிகழ்வு எம்மை விட்டகலாத கடும் துயரமே ஆகும். இந்த படுகொலையின் பின்னர் பல பெண்கள் விதவைகளாயினர். சில குடும்பங்கள் மொத்தமாகவே படுகொலை செய்யப்பட்டனர். இன்னும் பன்னிரண்டு வயது மாறாத மகனும் தந்தையும் ஒன்றாக கொல்லப்பட்ட பெரும் துயரம் இந்த மண்ணில் நிகழ்ந்தேறியதே மிகப்பெரும் துயரம்.

சம்பூரில் நடந்தேறிய படுகொலைக்கு இதுவரை எந்தவித நீதியும் கிடைக்கவில்லை. மாறாக இவர்கள் யாவரும் இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டனர். என அரசு மரணச்சான்றிதழ் வழங்கி ஒரு தொகை பணத்தை விட்டெறிந்து தனது அதிகார கரங்களால் அப்படுகொலைக்கான நீதியை தரமறுத்து அடக்கி ஆட்சி செய்துகொண்டுருக்கின்றது எனலாம்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இனப்படுகொலை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

நல்லாட்சி அரசை சமைத்து அதனை சர்வதேசம்திற்கு காட்டிய பெரும்பாக்கியவான்கள் இவர்களே, இவர்களுக்கு தமிழ் மக்களது கண்ணீரை விட சிங்கள அரசின் புன்னகை அதிகம் விரும்பும் பக்குவத்தை கொண்டவர்கள். இவர்கள்தம் பதவிகளுக்கும், சுகபோகவாழ்வுக்கும் மற்றும் சொத்து குவிப்புக்குமாக சிக்களத்தின் கால்களை கழுவி சேவகம் செய்து முக்தி பெறத்துடிக்கும் மகான்களாவர்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தைக் கூட சர்வதேசம் வரை வந்து பிரகடனப்படுத்த திராணியற்றவர்களாவர். இவர்களால் தமிழினத்திற்கு பெரும் சாபமே அன்றி விமோசனம் இல்லை என்பது கடந்த காலத்தில் நாம் கண்ணுற்ற கசப்பான உண்மைகளாகும். இவர்கள் தமிழ்மக்களை உணர்வுப்பூர்வமான அணுகி, அவர்களின் உரிமைப்போராட்டத்தை பெருமைப்படுத்தி வாக்குகளை பெற்றதும் இந்தியா போன்ற நயவஞ்சக அரசிடம் சென்று ஆசி பெற்று, அந்த இந்திய அரசின் பேச்சுக்கேற்ப தலையாட்டும் பொம்மைகளாக பதவிக்காலம் வரை வாழ்வார்கள். பதவிக்காலம் அண்மிக்கும் தருவாயில் மீண்டும் வேதாளம் முருங்கை மரமேறும் கதையாக இவர்கள் தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக மிக உணர்வு பூர்வமாக பேசி ஏமாற்று வேலைகளை செய்து வாக்குப்பிச்சை கேட்டு வெல்வார்கள். ஒவ்வொரு முறையும் மக்கள் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்து பழக்கப்பட்டவர்களாக கவலையோடு வாழ்வார்கள்.

இப்பெருநிலப்பரப்பில் நிகழ்ந்த படுகொலை கிட்டத்தட்ட முப்பது வருடங்களை எட்டியபோதும், இதுவரை காலமும் எந்த பாராளுமன்ற அமர்விலும் கூட இது தொடர்பான விவாதங்களை தமிழர்களுக்கான அரசியியலை முன்னெடுத்த அரசியியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தம் தரும் விடயமாகும். மேலும் இமக்களுக்கான எந்தவித நிவராண பணிகளையும் முன்னெடுக்காது தமது அரசியியல் வாழ்வை இனிதே நகர்த்தி செல்கின்றது.

கடந்த 2017இல் ஒருசில மனிதநேயமிக்க இளைஞர்களால் படுகொலை செய்யப்பட்ட அந்த புனித ஆன்மாக்களை நினைவு கூற ஒரு நினைவுத்தூபி கட்டுவதற்காகவும், அவர்கள் தொடர்பான ஞாபகங்களையும் சேகரித்து ஓர் நினைவேந்தலை மிக எளிமையாக செய்து முடித்தனர். அதற்கடுத்த வருடம் அந்த நினைவுத்தூபியை நன்றாக அமைப்பதற்கான செயற்பாட்டை தொடங்கிய போது சில இரண்டகர்களால் அச்செயற்பாடு இடதிறுத்தப்பட்டதோடு மட்டுமின்றி எந்த நினைவேந்தல் நிகழ்வும் அந்த ஆன்மாக்களுக்காக நிகழ்த்தப்படவில்லை என்பது மிகப்பெரும் துன்பமாய் போனது.

சம்பூரில் படுகொலையான மக்களுக்கான நினைவேத்தல் தடைப்பட்டுள்ளது என்பதை தெரிந்தும், அதை தெரியாதது போல அன்றைய எதிர்க் கட்சி தலைவர் திருவாளர் சம்பந்தன் அவர்கள் பாராமுகமாக இருந்தார். இன்னொரு பாராளுமன்ற உறுப்பினருடன் இது தொடர்பாக பேசியபோது தான் உதவுவதாக கூறி ஏமாற்றி சென்றுவிட்டார்.
இவற்றுக்கெல்லாம் தடையாக அரச இயந்திரம் மதிப்பளிக்கும் பதவி வகிக்கும் ஒரு சில உத்தமர்களே காரணகர்த்தாவாக, இரண்டகனாக இருந்து செயற்பட்டார் என்பதும் மன்னிக்க முடியாத செயலே அன்றி வேறில்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் வாக்குகளை பெற்று பதவி வகித்த போதும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற தவறிய அல்லது மறந்த ஒரு கட்சியாகவே மக்களால் பார்க்கப்படுகின்றனர். அந்த புனித ஆன்மாக்களின் உறவினர்கள் அவர்களை நினைந்துருகி, அழுது தொழுவதற்கு ஒரு நினைவுக்கல்லை நடுவதற்கு கூட உரிமை மறுக்கப்பட்ட மக்களாகவே இம்மக்கள் தவிக்கின்றறர்.

ஈழதேசத்தில் நடந்தேறிய எல்லா படுகொலைக்கும் ஏதோ ஒருவகையில் நினைவுத்தூபியும், நினைவேந்தலும் நடந்திடும் அதேவேளையில் சம்பூர் மக்களது நினைவேந்தல் தடைபடுவதற்கான தகுந்த காரணங்கள் என்ன என்பதே கேள்வியாக உள்ளது. சிலரது சுயநலத்திற்காக இதை தடுக்கிறார்களா? அல்லது அவர்களை காட்டிக்கொடுத்த துரோகிகளின் கைங்கரியமா? அல்லது சில குடும்ப பகையால் விளைந்த இன்னலா? என்பது புரியாத புதிராக உள்ளது.

எனவே இப்படுகொலைக்கான நீதியை வேண்டியும், அந்த புனித ஆன்மாக்களுக்கான ஒரு நினைவுத்தூபியை எழுப்பவும் நல்லுள்ளங் கொண்ட சமூக ஆர்வலர்களை ஒன்றாக்கி இந்நினைவேந்தலை வருங்காலங்களில் வருடந்தோறும் நிகழ்த்தி அந்த புனித ஆன்மாக்கள் சாந்திபெறவும், அவர்கள்தம் உறவினரின் வலியை போக்கவும் முன்னின்று உழைக்க ஒன்றாவோம்.

- சுபாகரன் -

No comments