விக்கி-கஜன் கூட்டணி பேச்சுக்கள் தோல்வி

வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை இணைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

வடக்கு முன்னாள் முதல்வரின் தலைமையிலான கூட்டணி இந்த மாத நடுப்பகுதியில் இறுதி செய்யப்படும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அதற்குள் சமரசம் செய்து கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் சில புலம்பெயர் புத்திஜீவிகள் ஈடுபட்டனர்.

அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் வரலாற்றிஞரான முருகர் குணசிங்கம் இந்த இணைப்பு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். தமிழ் மக்கள் கூட்டணிக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இம்மாத தொடக்கத்தில் கைச்சாத்தாக இருந்த நிலையில், அதை மாத நடுப்பகுதி வரை தள்ளிவைக்கும்படியும், அதற்குள் முன்னணியை இந்த கூட்டுக்குள் அழைத்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

எனினும், சுரேசை பங்காளியாக வைத்துக்கொண்டு விக்கி கூட்டணிக்குள் இணையமுடியாதென முன்னணி திட்டவட்டமாக அறிவித்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

நேற்றையதினம், இந்த கூட்டணி சாத்தியமில்லையென உத்தியோகபூர்வமாக- இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த முருகர் குணசிங்கத்திடம் முன்னணி தெரிவித்தது.

அதேவேளை,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஒரு தரப்பு, விக்னேஸ்வரனுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதேபோல, கட்சியின் மாவட்ட மட்ட தலைவர்களில் கணிசமானவர்களும் இதேவிதமான அபிப்பிராயத்துடன்தான் உள்ளனர். இந்த அப்பிராயங்களையெல்லாம் கருத்தில் எடுக்காமல், தலைமையிலுள்ள சிலர் எடுக்கும் முடிவு கட்சிக்கும், இனத்திற்கும் ஆபத்தை விளைவிக்கலாம்“ என முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் ஆதங்கப்பட்டார்.

No comments