ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் ?


ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் எதிர்வரும் 8ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி திங்கட்கிழமை மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்தே கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனத் தெரியவருகின்றது.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஜனாதிபதி வேட்பாளருக்கு சஜித் பிரேமதாசவின் பெயரை பங்காளிக் கட்சிகள் முன்மொழியக்கூடும் என்றும், இதற்கு ஐ.தே.கவிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவளிக்கக்கூடும் என்றும் அறியமுடிகின்றது.

அதேவேளை, ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.

No comments