தேவதாசன் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!
தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசனினால் மெகசின் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டு வந்த சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் கைதிகள் விடுவிப்புத் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை, இன்னும் இரு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக அரச அமைச்சர் மனோ கணேசன் வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே இந்த உண்ணாவிரதம் நிறைவுக்கு வந்திருக்கிறது. ஆரச அமைச்சர் மனோ கணேசனுடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதனும் கோடீஸ்வரனும் மெகசின் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தனர்.
அரசியல் கைதிகள் விவகாரத்தை கூட்டமைப்பு முற்றாக கைவிட்டுள்ள நிலையில் தமது விடுதலைக்கான நடவடிக்கைகளினை முன்னெடுக்க மனோகணேசனிடம் அவர்கள் கோரிக்கைகளினை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி மனோகணேசன் பகிருகையில் சற்று முன் மெகசின் சிறைச்சாலை சென்று, தேவதாசனின் சாகும்வரை உண்ணாவிரதத்தை முடித்து வைத்தேன்.
தமிழ் கைதிகள் விடுவிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்றை, இன்னும் இரு வாரங்களுக்குள், அமைச்சரவையில் நான் சமர்பிக்க உள்ளேன்.
எனது இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்டு, நான் தந்த ஒரு கிண்ணம் நீரை அருந்தி, தேவதாசன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட சம்மதித்தார்.
வரலாற்றில் முதன் முறையாக, சமர்பிக்கப்பட உள்ள, இத்தகைய ஒரு அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக்கொள்ள செய்ய அனைத்தையும் நான் செய்வேன்.
இதற்கு தேவையான அரசியல் சூழல் நாட்டிலும், அரசுக்கு உள்ளேயும், வெளியேயும் ஏற்படும் விதத்தில் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமென அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகிறேன்
Post a Comment