நாவற்குழியை தொடர்ந்து கன்னியாவையும் கைவிடும் தமிழரசு!


நாவற்குழியினை தொடர்ந்து கன்னியா வெந்நீருற்று பகுதியையும் தாரைவார்க்க தமிழரசு தரப்பு களமிறங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

கன்னியாவைக் கையகப்படுத்தும் சிங்களப் பேரினவாதிகளின் நடவடிக்கையின் பின்னே சூழ்ச்சிகள் நிகழ்வதை அவதானிக்க முடிவதாக தற்போது திருமலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் முன்னோடி நடவடிக்கையாக சர்ச்சைக்குரிய வில்கம் விகாரைப் பிக்குவுடன் நடைபெற்றுவரும் இரகசிய பேச்சுக்கள் பற்றி செய்திகள் வெளியாகியுள்ளது.

இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்டத்தமிழரசுக் கட்சியின் தலைவரும் ரணில் அரசின் அபிவிருத்தி இணைப்பாளருமான குகதாசன் தலைமையில் சந்திப்புக்கள் நடந்துள்ளன.

ஏற்கனவே நாவற்குழி,முல்லைதீவு நீராவியடி போன்று அருகாக சிங்கள விகாரைகள் அமைக்கப்பட்டு நல்லிணக்கத்துடன் இரு இனங்களையும் வாழும் நடவடிக்கை ரணில் -தமிழரசு ஆலோசனைகயுடன் கன்னியாவிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

கன்னியாப் போராட்டத்தை முன்நின்று நடாத்திய தென்கைலை ஆதினமோ அல்லது ஏற்பாட்டாளர்கள் ,களமிறங்கிய இளைஞர்கள் எவரும் இக்கலந்துரையாடலிற் கலந்துகொள்ளாமல் இருப்பதும் வடக்கு-கிழக்கு இணைப்பை இல்லாதொழித்துத் தமிழர் தாயகத்தைத் துண்டாடிய வழக்கு விசாரணையை முன்னெடுத்த ஜே.வி.பி கட்சியின் திருகோணமலை மாவட்ட தமிழ் இணைப்பாளர் அருண் ஹேமச்சந்திராவின் பெற்றோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருப்பதும் மிகப் பெரும் சந்தேகத்தைத் தோற்றுவித்திருக்கின்றதென முன்னணி செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் வழக்கு போட்டுள்ளதாக ஒருபுறம் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகையில் சட்ட நடவடிக்கைகள் சரியாக முன்னெடுக்கப்பட்டிருப்பின் இச்சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஏன் தேவைப்படுகின்றன எனவும் அவை கேள்வி எழுப்புகின்றன.

கன்னியாவை மீட்கும் சட்ட நடவடிக்கைகளைத் தாமே முன்னெடுத்துத் தமிழர்களுக்குக் கன்னியாவைப் பெற்றுத் தந்துவிட்டதாகத் தம்பட்டம் அடிப்பவர்கள் திரைமறைவில் கன்னியாவைக் கையகப்படுத்தியுள்ள வெல்கம் விகாரைப் பிக்குவுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வது ஏன் எனவும் அத்தரப்புக்கள் கேள்விகளை முன்வைத்துள்ளன.

ஏற்கனவே கன்னியா வெந்நீறூற்றைக்கையகப்படுத்தும் பேரினவாதத் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இராவணசேனை தரப்புக்கள் இச்சதிக்குள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிள்ளையார் ஆலயத்தினை இடித்தகற்றி  அங்கு விகாரை கட்ட அனுமதிப்பதும் பதிலுக்கு அங்கு சிவன் ஆலயத்தை நிறுவ இலங்கை அரசிடமிருந்து நிதி பெறுவதுமே இவ்வமைப்பின் பின்னணி செயற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments