தமிழர் திருவிழா வெற்றி!



பௌத்த மயமாக்கலினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும் 108 பானைப் பொங்கலும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக வடக்கு, கிழக்கில் இருந்து வருகைதந்த ஆறு மாவட்டங்களின் மக்கள் திரளுடன் வெகு விமர்சையாக இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் "தமிழர் திருவிழா" எனும் தொனிப்பொருளில் 108 பானைப் பொங்கலுக்கு ஆலய அறங்காவலர் குழுவும் சமூகவலைத்தள நண்பர்களும் இணைந்து ஆலயத்தின் இருப்புக்காகவும், தமிழ் மக்களின் நிலவுரிமைக்காகவும் மதம் கடந்த தமிழராய் அணி திரளுமாறு தாம் விடுத்த வலியுறுத்தலை ஏற்றுக்கொண்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான தமிழர்களின் பலத்தை காண்பிக்க தொலை தூரங்களில் இருந்தும் சிரமம் பாராது திரண்டுவந்த அத்தனை மக்களுக்கும் சிரம்தாழ்த்திய நன்றியை கூறிக்கொள்வதாக ஏற்பாட்டுக்கு குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அவ்வறிக்கையில் மேலும், "பௌத்த மயமாக்காலினால் அழித்தொழிக்கப்படும் நிலையில் இருக்கும் பழைய செம்மலை, "நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் எமது தொன்மை, நீராவியடி மண் எமது சொந்த மண்" என்பதையும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு காண்பிக்கும் நோக்கத்துடன் நல்லுள்ளங்களின் நிதி உதவியையும் பெற்று 108 பானைப் பொங்கலை வெற்றிகரமாக நடாத்தி முடித்திருக்கிறோம்.
அதற்காக ஒத்துழைப்பு வழங்கியவர்கள், உதவியளித்தவர்கள் மற்றும் எமது வலியுறுத்தலை ஏற்றுக்கொண்டு திரண்டுவந்த மக்களுக்கு நன்றியைக் கூறிக்கொள்ளும் அதேவேளை எமக்கு பூரண ஒத்துழைப்பை நல்கிய வடக்கு, கிழக்கு வாழ் உறவுகளுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்". என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments