"தமிழர் நிலம் திருடும் பௌத்த மயமாக்கல்"-பிரகாஸ்

பௌத்தத்தின் ஆக்கிரமிப்பு தமிழர் பகுதிகளில் எப்படியெல்லாம் நடைபெறுகிறது என்பதை (06.07.2019) அன்று முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் நேரடியாக கண்ணுற்றிருப்பார்கள்.

பௌத்த மயமாக்கலுக்கு எதிரான எமது குரலை எப்படியெல்லாம் நசுக்குவார்கள் என்பதையும் (16.06.2019) அன்று திருகோணமலை - கன்னியா, வெந்நீருற்று பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றவர்கள் பட்டுணர்ந்திருப்பீர்கள்.

மதம் கடந்து தமிழராய் ஒன்றிணைந்த இளைஞர்களின் முயற்சியினால் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலய அரங்காவலர் சபையுடன் கைகோர்த்து இறைவழியில் "தமிழர் திருவிழா" எனும் பெயரில் பொங்கல் மூலம் தமிழரின் நிலவுரிமையை நிலை நிறுத்தி பௌத்த மயமாக்கல் சதிகாரர்களுக்கு அதனைக் காண்பிக்க அன்றைய நாள் பெரும் திரளான மக்கள் ஒன்று திரண்டிருந்தனர்.

அப்படித் திரண்டு வந்த மக்கள் பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருக்கும் புத்தரின் சிலையைக் கண்ணுற்ற போது பெளத்த மயமாக்கலின் அராஜாகம் கண்டு ஒரு நொடி மனம் நொந்திருப்பார்கள். என் மனம் கூட அதைக் கண்ட நொடியில் கோபம் கொண்டது.

இன்று, நேற்றல்ல எப்போதோ இரகசியமாகத் தொடங்கிய இந்தப் பௌத்த மயமாக்கல் திட்டம் இன்று வெளிப்படையாக உச்சம் தொட்டிருப்பதை தான் நீராவியடிப் பிள்ளையார், வெந்நீருற்று பிள்ளையார் உள்ளிட்ட ஆலயங்களில் நிகழ்த்தப்படும் பௌத்த மயமாக்கல் வெளிக்காட்டி நிற்கின்றது.

புத்தர் இன்று இந்நாட்டில் மீளப் பிறப்பெடுப்பாராக இருந்தால் தன்னை வைத்து ஏனைய இனங்களுக்கு எதிராக செய்யப்படும் அராஜகம் கண்டு "தன்னை வணங்காதீர்கள்" என்று கூறத்தான் நினைப்பார். ஏனெனில் தன் அன்புப் போதைனைகள் விட்டுவிட்டு தன்னை வைத்து ஏனைய இனங்களின் நிலம் அபகரிக்கப்படுவதை அவர் விரும்ப மாட்டார்.

இது இப்படியிருக்க கன்னியாவில் போராட்டம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகளில் சென்ற மக்கள் மீது பாதுகாப்பு படைகளின் கெடுபிடி திட்டமிட்டு திணிக்கப்பட்டது. பேருந்து ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் காற்றுப் போன சம்பவம் கூட நடைபெற்றது. இவை பௌத்த மயமாக்கலுக்கு எதிரான உரிமைக் குரலை! நசுக்கும் வேலையாவே அமைந்திருந்தது.

இப்போது வடக்கு, கிழக்கைத் தாண்டி மலையகத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு அங்கமே நேற்றைய தினம் கந்தப்பளையில் பௌத்த கொடி நாட்டல் மூலம் நிகழ்ந்தேறியிருந்தது. எனவே இதற்கு எதிராக வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படி இந்து ஆலயங்கள், தமிழர்களின் பாரம்பரியம் மிக்க இடங்கள், வெற்றுக் காணிகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து புத்தர் சிலைகைளை வைத்து செய்யப்படும் பௌத்த மயமாக்கல் என்பது மதவாதம் கடந்த இனவெறிச் செயல். புத்தர் சிலைகளை அங்கு நிர்மானித்து பின்னர் அது சிங்கள மக்களுக்குரிய பிரதேசம் என்ற மாயையை உருவாக்கி "பௌத்த நாடு" அல்லது (ஒன் நேசன்) என்ற தமது இனவெறிக் கூற்றை நிலை நிறுத்திக் கொள்ளும் திட்டமிட்ட அதிகாரம் கொண்ட பௌத்த மயமாக்கலே (தமிழ்நில அழிப்பு) இவை.

பௌத்த மயமாக்கலை கண்ணுற்றும், குரல் எழுப்பல் தடுக்கப்படுவதை பட்டுணர்ந்தும் என்ன பயன் எம்மால் குரலை எழுப்பி எதிர்ப்பை காண்பிப்பதை விட வேறொன்றும் செய்துவிட முடியாது. ஏனெனில் எம்மை அடக்க இயந்திரக்கைகள் குறிபார்த்துக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் இனி எப்போதும் குரலை மட்டும் எழுப்பித் தான் எமது உரிமைகள் பறிபோகாமல் இருக்க நாம் போராட வேண்டும் அதற்கு மதம், சாதி, மாகாணம், பிரதேசம் கடந்து தமிழராய் ஒன்றித்துச் செயற்படும் அவசியத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும் அதுவே பௌத்த மயமாக்கலை தடுக்க, எமது நிலங்களை காக்க நாம் செய்யக் கூடிய ஒரேயொரு வேலை!.

18.07.2019
#பிரகாஸ்

No comments