இராணுவ சீருடைக்கு ஒத்ததான ஆடைகளுக்குத் தடை

இராணுவ சீருடைக்கு ஒத்ததான ஆடைகளைப் பயன்படுத்தல், வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தலைத் தடை விதிக்கும் வகையிலான சட்ட திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற விதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இராணுவ சீருடைக்கு ஒத்ததான ஆடைகளை வைத்திருப்பதானது, தேசிய பாதுகாப்புக்கு சிறந்ததாக அமையாது என்ற அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சீருடை கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இராணுவ சீருடைகளை வைத்திருப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றமையினால், காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, இராணுவ சீருடைக்கு ஒத்ததான ஆடைகளை வைத்திருத்தல், ஆடைகளை அணிதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான சட்டதிருத்த வரைவு நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதும் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்தின் பின்னர் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைளின் போது இராணுவ சீருடைக்கு ஒத்ததான பல ஆடைகளை படையினர் கைப்பற்றியிருந்தனர்.

இந்த பின்னணியிலேயே அரசு இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பின்னர் முகத்தை முழுமையாக மறைத்து ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments