ஐந்து மாதங்களில் புதிய அரசாங்கம்! இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வு! யாரை யார் நம்புவது? பனங்காட்டான்

ரணில் அரசை வீழ்த்தினால் மகிந்த தரப்பு ஆட்சிக்கு வந்துவிடுமென்பதால் ரணில் தரப்புக்கு ஆதரவாக இயங்குவதாகக் கூறும் சம்பந்தன், அடுத்த தேர்தலில் மகிந்த அணியே ஆட்சியைக் கைப்பற்றுமென்று நம்புகிறாரென்றால், இரண்டு வருடத்துள் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்போவதாக ரணில் யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்ததை எவ்வாறு நோக்குகிறார்?


இந்து சமுத்திரத்தின் முத்து என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இலங்கை, இப்போது பல வாதம்களுக்குள் சிக்குண்டு தள்ளாடுகிறது.

இலங்கையை ஆட்சி புரிவது எந்தக் கட்சி, எந்த அணி, எந்தக் கூட்டு அல்லது நாட்டின் தலைவர் யார் என்று தெரியாதவாறு அப்பாவி மக்கள் திண்டாடுகின்றனர்.

ஒருகாலத்தில் இலங்கையில் ஒரு வாதம் மட்டுமேயிருந்தது. இலங்கைத் தேசியவாதம் என்பது 1958 தமிழின அழிப்பு ஆரம்பித்ததோடு இல்லாமற் போய்விட்டது.

தமிழர்கள் தமிழ்த் தேசியவாதத்தை நிலைநாட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். சிங்களவர்கள் இனவாதத்தைக் கையிலெடுத்து, சனத்தொகையால் குறைவானவர்களை சிறுபான்மையினர் என அடையாளப்படுத்தி அடக்கியொடுக்கி அழித்தொழிக்க முற்பட்டனர்.

இ;வ்வருட உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் என ஒன்றிருப்பதை வெளிக்காட்டியது.

தமிழ்த் தேசியவாதம், சிங்கள இனவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பவற்றுக்கப்பால் இன்னொரு வாதம் தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளது. அதுவே பௌத்தவாதம்.

பௌத்தவாதம் என்பது இலங்கைத் தீவுக்கு இப்போதுதான் அறிமுகமான ஒன்றல்ல.

1959ல் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவை அவர் கைகூப்பித் தொழுது வணங்கி வளர்த்த பௌத்தமத துறவிகள் (பிக்குகள்) சோமராம தேரோவும், புத்தரகித்த தேரோவும் சுட்டுக் கொன்றதே இதன் தோற்றுவாய். இலங்கையில் அரசியல் தலைவரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டதும் இதுவே முதலாவது சம்பவம்.

தன்னை நேருக்கு நேர் நின்று சுட்டது ஒரு பௌத்த பிக்கு என்று தெரிந்தும், பௌத்த மதத்துக்கு அவரால் இழுக்கு வரக்கூடாதென்பதற்காக, பிக்குகளின் அங்கி அணிந்த ஒருவர் தம்மைச் சுட்டதாக பண்டாரநாயக்க தமது வாக்குமூலத்தில் தெரிவித்ததை மறக்க முடியாது.

இக்கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற சோமராமதேரோ தமது கடைசி விருப்பமாக தம்மை கிறிஸ்தவராக மாற்றி தூக்குத் தண்டனையைப் பெற்றுக் கொண்டார். பௌத்த பிக்கு ஒருவர் தூக்கிலிடப்பட்டாரென்பது வரலாற்றில் இடம்பெறக்கூடாதென்பதே இந்த மதமாற்றத்துக்குக் காரணம்.

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னைய இந்தச் சம்பவங்களை இங்கு நினைவுகூருவதன் நோக்கம், இந்த வரலாற்றுப் பின்னணியை தெரிந்துகொண்டால் மட்டுமே இன்று மீண்டும் எழுச்சி கொண்டுள்ள பௌத்தமதவாதத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்பதுவே.

அன்றைய சோமராததேரர், புத்தரகித்ததேரர் ஆகியோரின் மறுவடிவங்களாக இப்போதைய ஞானசாரதேரரையும், அத்துரலிய ரத்னதேரரையும் பார்க்க முடிகிறது.

சில நாட்களுக்கு முன்னர் கண்டி போகம்பரை மைதானத்தில் ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகளையும் ஆதரவாளர்களையும் கொண்ட பேரணியொன்றை ஞானசாரதேரர் நடத்தினார். அன்றைய தினம் இஸ்லாமிய மக்களை வீட்டுக்கு வெளியே செல்ல வேண்டாமெனவும், அவர்களின் வர்த்தக நிறுவனங்களை திறக்க வேண்டாமெனவும் முஸ்லிம் தலைவர்கள் முற்கூட்டியே அறிவித்து எதிர்பார்க்கப்பட்ட ஓர் அபாயத்தைத் தவிர்த்துக் கொண்டனர்.

முஸ்லிம்களின் உணவகங்களில் உண்ண வேண்டாமெனவும், அவர்களின் வர்த்தக நிறுவனங்களைப் புறக்கணிக்குமாறும் மல்வத்த பௌத்த உயர்பீடம் அறிவித்ததை, ஜனாதிபதி மைத்திரி வரவேற்க, ஞானசாரதேரர் வழிமொழிந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்த ஞானசாரதேரருக்கு கருணை விடுதலை வழங்கி வெளியே விட்டவர் மைத்திரிதான். பல தரப்பிலிருந்தும் இவ்விடுதலைக்கு எதிர்ப்புக் கிளம்பியபோதிலும் மைத்திரி அதனைக் கண்டுகொள்ளவில்லை.

விடுதலை பெற்று வெளியே வந்தபின்னர் இவரது மதவெறிச் செயல்கள் வீரியம் பெற்றன. இப்படியெல்லாம் ஞானசாரதேரர் இயங்க வேண்டுமென்பதற்காகவே மைத்திரி இவரை விடுதலை செய்ததாகவும் பலருக்குச் சந்தேகமுண்டு.

அரசியல் ரீதியாக மைத்திரியுடன் மோதிக் கொண்டிருக்கும் ரணில், மகிந்த மற்றும் ஜே.வி.பி.யினர் கூட ஞானசாரதேரரின் செயற்பாடுகளை கண்டிக்காதிருப்பது மறைமுக ஆதரவு வழங்குவதாகவே அமைந்துள்ளது. இதனை தமக்கான ஆசீர்வாதமாக ஞானசாரதேரர் எடுத்திருக்கலாம்.

முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சிலும் செயலிலும் தீவிரமாக ஈடுபட்டிருப்பவர் அத்துரலிய ரத்னதேரர். கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் சாகும்வரை(?) உண்ணாவிரதமிருந்து முஸ்லிம் அமைச்சர்களை கூண்டோடு பதவி துறக்கச் செய்த பற்றற்ற துறவி இவர்.

குற்றமெதுவும் நிரூபிக்கப்படாத முஸ்லிம் அமைச்சர்கள், தங்களின் பதவிகளால் முஸ்லிம் சமூகத்துக்கு தீங்கெதுவும் ஏற்படக்கூடாதென்பதற்காக பதவிகளைத் துறக்க நேர்ந்தது.

ரத்னதேரர் இன்னொருபடி மேலே சென்று, உயர்தரப் பரீட்சையில் சித்தி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டுமென இலவச ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனைத் தமிழ் மாணவர்கள் ஏற்க மறுத்தால் அவர்கள் பல்கலைக்கழகம் புகுவதைத் தடுக்கும் புதுவகைத் தரப்படுத்தல் ஒன்றுக்கான ஆரம்பப் புள்ளியாக இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

மக்களிடையே இனபேதமற்று அன்பு, இரக்கம், காருண்யம், சமாதானம் ஆகியவைகளை விதைக்க வேண்டிய பிக்கு ஒருவர் அதற்கு மாறாக மாணவர்களிடையே ஆயுத கலாசாரத்தை விதைக்க முற்படுகிறார். சிங்கள பௌத்த மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்குவதில் உள்நோக்கம் ஏதாவது இருக்கக்கூடும்.

சைவ வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைத்து கடந்த சில நாட்களாக நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்கதையாகும் அறிகுறி காணப்படுகிறது.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் பகுதியில் பௌத்த விகாரையயொன்றை நிறுவும் முயற்சி பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலய வழிபடுவோர் 108 பானைகளில் நடத்திய பொங்கலுடன் இணைந்த தமிழர் திருவிழாவுக்கு எதிரான செயற்பாடுகளை பௌத்த பிக்குகள் மேற்கொண்டுள்ளனர். ஆலய முகப்பில் பறந்து கொண்டிருந்த நந்திக்கொடி இவர்களால் கிழிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் (கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் தொகுதி) இராவணேஸ்வரன் வரலாற்றுடன் தொடர்புடைய கன்னியா பிள்ளையார் ஆலயத்தை அழித்து அங்கு விகாரையொன்றை நிறுவும் முயற்சி நடைபெறுகிறது.

இங்கு திரண்ட ஆலய நிர்வாகிகள்மீது பிக்குகள் எச்சில் தேநீர் ஊற்றி அவமரியாதை செய்தபோது, காவற்துறையினர் பிக்குகளுக்கு பாதுகாப்பு வழங்கினர்.

நுவரெலியாவிலுள்ள கந்தப்பளை மாடசாமி கோவிலுக்குச் சென்ற பிக்கு ஒருவர் அங்கு பௌத்த கொடியேற்றி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வடக்கில் 500 வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்படுமென நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததை அங்கீகரித்து அவருக்கு ஆதரவாக வாக்களித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தொடர்ந்தும் அந்த ஆட்சியைக் காப்பாற்றி வருகிறது.

இந்த அரசை வெளியேற்றிவிட்டு தமிழரைத் துவாம்சம் செய்த மகிந்த அரசை ஆட்யிலமர்த்த அனுமதிக்கக்கூடாது என்பதற்காகவே ரணிலுக்குத் தாங்கள் ஆதரவு வழங்குவதாக தர்க்க ரீதியான விளக்கம் கொடுத்துள்ளார் சம்பந்தன்.

இவரது நியாயப்படுத்தல் வாதம், இன்னொரு யதார்த்தத்தை மறைபொருளாகக் கொண்டுள்ளதென்பதை இவர் அறிவாரா?

ரணில் அரசை பதிவியிலிருந்து நீக்கினால் நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் மகிந்த அணிதான் ஆட்சியைக் கைப்பற்றுமென்று சம்பந்தர் திடமாக நம்புவதையே இவரது தர்க்க ரீதியான வாதம் வெளிப்படுத்துகிறது. அப்படியெனில், அடுத்த பொதுத்தேர்தல்வரைதான் ரணிலின் ஆட்சி இடம்பெறுமென்பதை கூட்டமைப்பு முடிவு செய்துவிட்டதென்பதே உண்மை.

இவ்விடத்தில், அரசியல் தலைவர்கள் இருவரின் அண்மைய முக்கிய அறிவிப்புகளை கவனத்தில் எடுக்கவேண்டியது அவசிமாகிறது.

இன்னும் ஐந்த மாதத்துக்குள் புதிய அரசொன்று ஆட்சிக்கு வருமென்றும், ஊழலற்ற நேர்மையான அரசாக அது அமையுமெனவும் ஜனாதிபதி மைத்திரி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

2015ல் மகிந்த அரசை துரத்திவிட்டு ரணில் அரசை பதவிக்குக் கொண்டுவந்த தேர்தலிலும் இப்படித்தான் மைத்திரி கூறினார். இப்பேர்து ரணிலை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மகிந்தவை பதவிக்குக் கொண்டுவர விரும்புவதை அவரது தற்போதைய அழைப்பு காட்டுகிறது.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதமர் ரணில், மேடையில் தமிழரசுக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருக்க ஓர் அறிவித்தலை விடுத்தார். இதுவரை மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாததால் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் அரசியலமைப்பை நிறைவேற்ற முடியவில்லையென்றும், அடுத்த இரண்டு வருடத்துக்குள் இதனைத் தம்மால் நிறைவேற்ற முடியுமெனவும் உறுதி கூறினார்.

இங்கு சில கேள்விகள் எழுகின்றன!

அடுத்த பொதுத் தேர்தலில் தமது ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சியமைக்குமென ரணில் நம்புகிறாரா? மீண்டும் தாமே பிரதமராக வந்து ஜனாதிபதிப் பதவியில் அமர முடியுமென நம்புகிறாரா? தமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அடுத்த தேர்தலில் கிடைக்குமென நம்புகிறாரா? இரண்டு வருடங்களுக்குள் அரசியல் தீர்வென்ற புலுடாவை நம்பி தமிழ் மக்கள் தமக்கே வாக்களிப்பர் எனவும் நம்புகிறாரா?

அப்படியானால், ரணில் ஆட்சி கவிழ்ந்தால் மகிந்த அணி ஆட்சிக்கு வந்துவிடுமென சம்பந்தன் கூறியதை ரணில் எவ்வாறு பார்க்கிறார்?

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் துணிவு யாரிடமுண்டு?



No comments