தேரர் உடல்நிலை மோசமாம்:மகிந்த தரப்பு பிரச்சாரம்!


அதுரலியே ரத்தன தேரரின் உடல்நிலை மோசமடைவதாக பிரச்சாரங்களை முன்னெடுத்து தெற்கில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிகளை மகிந்த தரப்பு ஆரம்பித்துள்ளது.

ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரரின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

அதன்படி கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று  மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. எனினும் அவரது உடல்நிலை சீராகவே உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவரை சில மணித்தியாலங்களுக்கு ஒருமுறை வைத்தியர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

இரத்த அழுத்தம் உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டதில் உடல் நிலை நன்றாகவே இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளுடன் தொடர்பில் இருந்தனர் என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கின் ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு எதிரான கோஷமும் தற்போது நாடளாவிய ரீதியாக வலுவடைந்து வருகிறது.

இந்தநிலையில், இந்த மூவரையும் ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ரத்ன தேரர் நேற்று முன்தினம் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்தார்.

குறித்த மூவரை பதவி நீக்கம் செய்வதோடு, குருநாகல் வைத்தியர் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

அவரது கோரிக்கை தொடர்பில் ரணில் மற்றும் மைத்திரி கண்டுகொள்ளாத நிலையில் தற்போது மகிந்த தரப்பு உடல்நிலை மோசமடைந்துள்ளதாக பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது.

No comments