கோத்தாவிற்காக தயாராகும் ஆப்புக்கள்?


கோத்தபாயவின் அரசியல் பயணத்திற்கு முட்டுக்கட்டை போட ஏதுவாக பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டுவருகின்ற நிலையில் 2008ஆம் ஆண்டில், கொழும்பிலும் அதனை அண்டிய சன நெருக்கடிமிக்க பிரதேசங்களிலிருந்தும் 11 இளைஞர்கள் கடத்திக் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படை அதிகாரி, கடும் நிபந்தனைகளுடன் இன்று (14) விடுவிக்கப்பட்டார்.

சஞ்ஜீவ பிரபாத் சேனாரத்ன என்ற கடற்படை அதிகாரியே, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால், இவ்வாறு விடுவிக்கப்பட்டார்.

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து சட்டமா அதிபர் திணைக்களம் விசாரணை அறிக்கைகளை அவசர அவசரமாக கோரியுள்ளது.

இதேவேளை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் நீதிமன்றில் தெரிவித்திருந்தது.

குறித்த விசாரணைகளை உடனடியாக நிறைவு செய்து, சட்ட மா அதிபரிடம் கையளிக்கவுள்ளதாகவும், வழக்கின் 12 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மன்றுக்கு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments