நாடு வழமைக்கு-ரணில்:பாதுகாப்பில்லை -ஹிஸ்புல்லா?


இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு பெருமளவிலான முஸ்லீம்கள் தயாராகுவதாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ள கருத்து அரச மட்டத்தில் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் நாட்டைவிட்டு வெளியேற விண்ணப்பித்துள்ளதாக,; எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்திய பிரதமர் மோடியின் வருகை இலங்கையில் இயல்புநிலை திரும்பியிருப்பதை காண்பிப்பதாக ரணில் கருத்து வெளியிட மறுபுறம் முஸ்லீம்கள் நாட்டைவிட்டு வெளியேறப்போவதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ள கருத்தே அரச மட்டத்தில் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

இதேவேளை ஹிஸ்புல்லா முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாட்டிலேதான் சிறுபான்மையினர். ஆனால் உலகில் நாங்கள் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். இலகுவாக எங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று, யாரும் நினைத்து விடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 125 பேர் வரையில்தான் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. மீதி அனைவரும் அப்பாவிகள். தொழுகைக்குப் பிறகு ஓதும் பிரார்த்தனைகளை எழுதி வைத்திருந்தவர்கள் கூட, ஊவா மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதே போன்று குரான் மற்றும் ஹதீஸ் பிரதிகளை வைத்திருந்தவர்களும் பல மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமது ஜுப்பா ஆடையில் சௌதி அரேபியாவின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததற்காக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, மூன்று வாரங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான வீடுகளையும், கடைகளையும் எரித்தவர்கள், வீதிகளில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களெல்லாம், எந்தக் காரணமும் இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எனவே, கைதாகியுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுவிப்பதற்கான பணிகளை செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளோம்.

No comments