மைத்திரிக்கெதிராக முல்லையில் போராட்டம்:பதுங்கிய சிவமோகன்!


முல்லைத்தீவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வருகை தந்துள்ள நிலையில் தங்களுடைய பிள்ளைகளை கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை அங்கு முன்னெடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரியும் தமது போராட்டத்தை கண்டுகொள்ளாத இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு நகர் பகுதியில் அவர்கள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் பிரதி அமைச்சர் மஸ்தான்,தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஆகியோர் இராணுவ பாதுகாப்புடன் வருகை தந்து நிகழ்வில் இணைந்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக இன்றைய தினமும் 824 ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறுதி யுத்தம் நிறைவடைந்த போது இராணுவத்தினரிடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ,யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ,வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த கோரியும் அவர்களை மீட்டுத் தருமாறு கோரியுமே இன்றுடன் 824 ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்டத்தில் போராடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments