தாமதிக்கும் அமெரிக்கா: தற்கொலைக்கு முயலும் அகதிகள்


ஆஸ்திரேலிய - அமெரிக்கா இடையே கையெழுத்தாகியுள்ள அகதிகள் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் தற்கொலைக்கு முயல்வது அதிரத்து வருகின்றது.

இந்த ஒப்பந்தம், நவுரு மற்றும் மனுஸ்தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியேற்ற அனுமதிக்கின்றது. இந்த நிலையில், அமெரிக்காவில் மீள்குடியேற்றம் செய்யப்படும் அகதிகளை பரிசீலப்பதை அமெரிக்க குடிவரவுத்துறை தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றது.

“அமெரிக்க அதிகாரிகளால் நேர்முகம் செய்யப்பட்ட பின்னர் தனது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதை அறிய ஒன்றரை ஆண்டுகளாக ஒரு சூடானிய அகதி காத்துக்கொண்டிருக்கிறார்,” எனக் கூறுகிறார் மனுஸ்தீவில் உள்ள தமிழ் அகதியான சமிந்த கணபதி.

“அந்த அகதி தன்மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொள்ள முயன்றார். குடிவரவுத்துறை அதிகாரிகள் தலையிட்டு கூடியவிரைவில் அமெரிக்காவின் முடிவை பெற்றுத்தருவதாக சொல்லிய பின்னர் அவர் தற்கொலை முடிவை கைவிட்டிருக்கிறார்,” என கணபதி தெரிவித்திருக்கிறார்.

இப்படி,  தடுத்து வைக்கப்பட்ட அகதிகளில் நான்கில் மூவர் கடும் மன அழுத்தத்தில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் தேர்தல் முடிந்த பின்னர், 70 க்கும் மேற்பட்ட மனுஸ்தீவு அகதிகள் தற்கொலை அல்லது தங்களை வருத்திக்கொள்ள முயன்றிருக்கின்றனர்.

இந்த சூழலில், 300 அகதிகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது என்றும், 95 அகதிகள் அமெரிக்க செல்ல மறுத்திருக்கின்றனர் என்றும் ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையேயான அகதிகள் ஒப்பந்தத்தின் படி, இதுவரை சுமார் 530 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1250 அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியேற்றுவது, மத்திய அமெரிக்க அகதிகளை ஆஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்தவது என்ற உடன்பாட்டின் கீழ், 2016ல் இரு நாடுகளுக்கிடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது.

No comments