ஊடகங்கள் உள்ளே:வெளியே?


முல்லைத்தீவு அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தனியார் ஊடகங்களை வெளியேற்ற பணித்த ஆளுநரின் செயற்பட்டால் சர்சை ஏற்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது .

குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ,மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களை பார்த்து ஆளுநர் சுரேன் இராகவன் தனியார் ஊடகங்கள் யார் என கேட்டு தனியார் ஊடகங்களை வெளியேறுமாறும் ,பின்னர் கூட்ட தீர்மானங்களை வழங்குவதாகவும் அரச ஊடகங்கள் மட்டும் இருக்குமாறும் கேட்டுகொண்டார்.இது அரச கூட்டம் அரச விடயங்கள் பற்றி மக்கள் பிரதிநிதிகளுடன் அரசு ஊழியர்கள் கலந்துரையாடும் விடயம் எனவும் ஊடகங்கள் இருக்கத்தேவையில்லை எனவும் தனியார் ஊடகங்களை வெளியேறுமாறு பணித்தார்..

இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதுவரை காலமும் ஊடகங்களின் முன்னிலையில்தான் இந்த கூட்டம் நடைபெற்றது .அந்த வழமையை மாற்றவேண்டாம் ,மற்றும் அரசாங்க ஊடகங்களை அனுமதித்து தனியார் ஊடகங்களை வெளியேறவேண்டும் என கூறுவது பொருத்தமல்ல என தெரிவித்தார். இதன்போது குறுக்கிட்ட ஆளுநர் அப்படியானால் அனைத்து ஊடகங்களையும் வெளியேற்றுவோம் என தெரிவித்தார் . இடையில் குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா ஊடகங்கள் அனுமதிக்கப்படவேண்டும் .அவ்வாறு வெளியில் அனுப்ப முடியாது ,ஊடகங்களுக்கு பயப்படவேண்டிய தேவையில்லை இந்த அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நடைபெறும் விடயங்களை மக்கள் அறியவேண்டும் நாங்கள் என்ன பேசுகின்றோம் என்பதை மக்கள் அறியவேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது மீண்டும் சிவசக்தி ஆனந்தன் 19ஆவது திருத்த சட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது .ஒவ்வொருவருக்கும் தகவல் அறியும் உரிமை இருக்கின்றது  என தெரிவித்தார் .

இடையில் குறுக்கிட்ட ஆளுநர் சிவசக்தி ஆனந்தன் எம்.பியிடம் ஆம் அவ்வாறு சட்டம் இருக்கின்றது.உண்மை ஆனால் ஒவ்வொரு கூட்டத்தையும் ஒவ்வொரு பேச்சுவார்தையையும் அறிய வேண்டும் என இருக்கின்றதா என கேட்டார் ?

அதற்கு பதிலளித்த சிவசக்தி ஆனந்தன் ஆம் கட்டாயம் அவ்வாறு அறியவேண்டும் இங்கே நடைபெறும் விடயங்களை இங்கே பேசப்படும் விடயங்களை இந்த மாவட்டத்தின் மக்கள் அறியவேண்டும்.அந்த மக்களுக்கு அது தெரியவேண்டும் , நாங்கள் இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியை பற்றித்தான் பேசுகின்றோம் ,வேற ஒருவிடயங்களை பற்றியும் பேசவில்லை. எனவே இந்த விடயங்களை மக்கள் அறியவேண்டும் ஆகவே ஊடகங்களை அனுமதியுங்கள்.

இந்த அரசாங்கத்தில் வெளிப்படை தன்மை இருக்கவேண்டும் ,தகவல் அறியும் உரிமை எல்லோருக்கும் இருக்கின்றது. இந்த நிலையில் தனியார் ஊடகங்களை மட்டும் வெளியேற்றுவது தவறானது என தெரிவித்தார்.
தொடர்ந்தும் பாராளுமண்ற உறுப்பினர்களின் விவாதங்களையடுத்டு ஊடககங்கள் தமது பணியை மேற்கொள்ள இடமளிக்கப்ட்டது .

No comments