கருணா குழு உறுப்பினர் தற்கொலைக்கு முயற்சி!

சிறீலங்கா தமிழ்க் காவல்துறை ஒருவரைக் கொலை செய்ததசெய்தது தொடர்பில் கைதான கருணா குழு உறுப்பினர் ஹாப்பீக் என்ற மலசலக் கூடம் சுத்தப்படுத்தும் மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்போது அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பகுதியில் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற காவலதுறை உத்தியோகஸ்தர், கருணா குழு உறுப்பினர்கள் எனச் சந்தேகப்படும் சிலரால் கடத்தி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் முனைக்காடு மையானத்தில் புதைக்கப்பட்டதாக அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் தெரியவந்தது.

இக்கொலை குற்றச்சாட்டில் கருணா குழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிழன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல், அஜதீபன் மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை ஓட்டமாவடி களுவாஞ்சிக்குடி கல்லடி ஆகிய இடங்களில் வைத்துக் கடந்த மார்ச் மாதம் கைது செய்திருந்தனர்.

இதனடிப்படையில் சடலத்தைத் தோண்டி எடுப்பதற்கு மட்டக்களப்பு நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது சந்தேக நபர்களில் ஒருவரான லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் அவ்விடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு நீதிவானின் நீண்ட விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

இருந்த போதிலும் மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்கள் குறிப்பிட்ட இடங்களில் புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தரின் சடலம் மீட்கப்படவில்லை.

இந்நிலையில் தற்காலிகமாகக் குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இத் தற்கொலை முயற்சி இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments