"கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம்" தீர்வு?- பிரகாஸ்

அப்பாறை - கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை செயலகமாக தரமுயர்த்த வேண்டும் எனும் கோரிக்கை பல ஆண்டு காலமாக அரசிடம் முன்வைக்கப்படும் தீர்க்கப்படாத விவகாரம் ஆகும். 30 ஆண்டுகளுக்கு முன்னிருந்து இன்றுவரையில் இக்கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. 1993ம் ஆண்டு கல்முனை வடக்கு உட்பட 22 உப பிரதேச செயலகங்களை தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது. அதில் 21 உ.பி. செயலகங்களை தரமுயர்த்திய அரசு கல்முனை வடக்கு உ.பி. செயலகத்தை மட்டும் 28 ஆண்டுகள் கடந்தும் தரமுயர்த்தாமல் இருக்கின்றது. இதற்கு காரணம் என்ன என்பது பற்றி நாம் எழுதப் போனால் இனவாதி என்றொரு பட்டம் வழங்கப்பட்டும். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரே இதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர் என்பது தான் உண்மை. முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் த.தே. கூட்டமைப்பிற்கும் இடையில் இவ்விவகாரம் தொடர்பில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்தும்சரியான இணக்கம் ஏற்படவேயில்லை. 
பிரதேச செயலகம் - சபை, நகர சபை, தேர்தல் தொகுதி இவை எல்லாத்தையும் அபிவிருத்தியை நோக்காக கொண்டு மக்களின், அரசியல் பிரதிநிதிகளின் கோரிக்கை அடிப்படையில் அல்லது அரசின் தீர்மானத்தின்படி பிரித்து தரமுயர்த்துவது வளக்கமாக நடைபெறக் கூடிய விடயம். அதுபோலத்தான் கல்முனை வடக்கு உ.பி பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை 1993ம் ஆண்டில் அரசும் ஏற்றுக் கொண்டுவிட்டது.

அப்படியிருக்கும் போது அதனை நிலத் தொடர்பற்ற முறையில் இனரீதியில் முன்வைக்கப்படும் கோரிக்கை என்று எதிர்ப்பு வெளியிடப்படுகின்றது. இது ஏற்புடையதில்லை. இரு இனங்கள் வாழ்ந்துவரும் பிரதேசம் என்பதால் ஒரு இனத்தின் கோரிக்கையை இன்னொரு இனம் எதிர்த்துக் கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினையை தீர்த்துவிட முடியாது. இவ்விடயத்தில் தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானதாகவே இருக்கின்றது. அதை முஸ்லிம் மக்கள் தமக்கு நியாயமில்லை என்று சில காரணங்களை கூறி முழுமையாக நிராகரித்துவிட முடியாது. இதனால் தமக்கு பாதிப்பு ஏற்படும் என்று முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் நினைத்தால் அது தொடர்பில் த.தே.கூ மற்றும் அரசுடனும் பேசி தமக்கு பாதிப்புக்கள் இல்லை என்பதை உறுதி செய்து ஏனைய மக்களின் அபிவிருத்திக்கு வாய்ப்பை ஏற்படுத்த உதவ வேண்டுமே தவிர விடாப்பிடியாக அதற்கு தடையாக நிற்கக்கூடாது. அது அமைதியாக ஒன்றித்து வாழும் இரு சமூகங்களுக்குமே பாதிப்பாக அமையும்.

இந்த உ.பி. செயலகம் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் எதிர்ப்பினால் இழுபறி நிலையில் காணப்படுவதனால் தான் தமிழர்கள் சிலர் பேரினவாத சக்திகளான பௌத்த தேரர்களுடன் இணைந்து கொண்டு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எழுந்த தமிழ் மக்கள் மீதான வெறுப்பை காண்பிக்க அதற்கு போட்டியாக கல்முனை மக்கள் எனும் பெயரில் முஸ்லிம்கள் சிலர் தரமுயர்த்த முனையும் பிரதேச செயலகத்தை தடை செய் எனக்கோரியும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், இரு தரப்பிலும் அரசியல் பிரதிநிதிகளும் இவற்றுக்கு ஆதரவாக இருத்தனர். ஏட்டிக்கு போட்டியாக போராட்டங்கள் நடைபெற்றதால் இரு இன இளைஞர்களின் உணர்வுகளும் தூண்டப்பட்டு போராட்டங்களுக்கு ஆதரவு அதிகமாக்கச் செய்யப்பட்டதே தவிர இணக்க நிலை ஏற்படுத்தப்படவில்லை.

இனியேனும் இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் சரியான முடிவை எடுத்து அரசாங்கம் அறிவித்துள்ள மூன்றுமாத காலத்திற்குள் தமிழ் அரசியல் பிரநிதிகளுடன் கலந்துரையாடி இந்த விடயத்தை மேலும் நீண்டு செல்ல விடாது சிறந்த தீர்வை பெற முன்வர வேண்டும். அண்மையில் பாராளுமன்றில் பேசிய ஸ்ரீநேசன் எம்பி "எமக்குள் இருந்த பிரச்சினையை நாமே பேசித் தீர்த்திருந்தால் அதற்குள் மூன்றாவது நபர்கள் நுழைந்திருக்க முடியாது" என்றொரு கருத்தை முன்வைத்திருந்தார். உண்மையும் அதுவே இந்நாட்டில் சிறுபான்மையாக இருக்கும் தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்குள் இருக்கும் பிரச்சினைகளை தாமாக பேசி முடிவுறுத்திக் கொண்டால் அதுவே இரு இனங்களுக்கும் நன்மை பயக்கும். அதுபோல் அரசும் தாம் கூறியது போல் மூன்று மாதத்தில் இதற்குரிய தீர்வாக இரண்டு இனங்களும் பாதிக்கப்படாத வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய முறையில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்திக் கொடுக்க சரியாக செயற்பட வேண்டும்.

போராட்டம் பற்றி -

உ.பி. செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் எனும் கோரிக்கையில் எனக்கு முழுமையான உடன்பாடு இருக்கின்றது. ஆனால் தேரர்களுடன் இணைந்து கொண்டு போராடியதில் எவ்வித உடன்பாடும் கிடையாது. அவர்கள் இன்று தமிழர்களை ஆதரிக்கும் காரணம் என்ன? ரத்ன தேரர், சுமரத்ன தேரர், ஞானசார தேரர் போன்றவர்கள் யார்? என்று தெரிந்து கொண்டும் அவர்களை ஆதரித்தால் அது நாம் செய்யும் தவறாகும். எத்தனையோ நாட்களாக வீதிகளில் போராடிக் கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஆதரிக்க தேரர்கள் வரமாட்டார்கள். ஏன் அம்மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடாது என்று எதிர்ப்பவர்களும் தேரர்கள் தான். காணிகளை அபகரிப்பதும் தேரர்கள் தான். அப்படியான நிலையில் தான் இத்தேரர்கள் முஸ்லிம்கள் மீது ஏற்பட்டுள்ள குரோதத்தை காண்பிக்க எம்மை ஆதரிக்கிறார்களே தவிர எம் மீது அவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது.

எமது பிரச்சினைகளை தீர்க்க நாம் போராடத்தான் வேண்டும். தமிழர்களினால் போராடாமல் எதனையும் கேட்டுப் பெற முடியாது என்பது உண்மை. அதனை நாம் தனித்து நின்று ஒன்றுபட்டு போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர இனவாதிகளுடன் இணைந்தால் தான் தருவார்கள் என்று நாம் தவறான எண்ணப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாது.

25.06.2019
#பிரகாஸ்

No comments