மகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண!

“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மருமகனுக்கு சொல்லி விட்டு தன் மூச்சை
நிறுத்திவிட்டார் அந்த உயரமான பருமனான உடலமைப்புக் கொண்ட அந்த விடுதலை விரும்பி. அவரை கோமகன் என்று அறிந்தவர்களை விட சிங்கண்ண என்று அறிமுகம் கண்டவர்கள் தான் அதிகம். சாதாரண போராளிகள் முதல் மூத்த தளபதிகள் வரை சிங்கண்ண என்றால் அறிமுகம் அற்றவர்கள் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் அவ்வாறான புனிதமான பணியில் இருந்தார்.
மாவீரர்கள் தமிழ்த் தேசத்துக்காக தமது இன்னுயிர்களை ஆகுதி ஆக்கி விசுவமடு துயிலும் இல்லம் வரும்போது இந்த மனிதனை சந்திக்காமல் குழிக்குள் போவதில்லை. விசுவமடு துயிலும் இல்லத்தில் தனது இறுதிக்கால பணியைச் செய்த சிங்கண்ண என்ற கோமகன் திடமானவராகவும், தேசம் மீதும் மாவீரர்கள் மீது எவ்வளவு நேசத்தை கொண்டிருந்தார் என்பதை அவரோடு பழகிய அனைவரும் நிச்சயமாக அறிந்திருப்பர். விசுவமடு மாவீரர் துயில்கின்ற இல்லத்தை தனது குல தெய்வங்களின் கோவில் போலவே நேசத்தோடு பராமரித்து வந்தார் கோமகன். இறுதி காலங்கள் விசுவமடு துயிலுமில்லம் அவரது வீடாகிப் போன போது அவரது வாழ்வும் அதுவே ஆகிவிட்டது.
கோமகனின் போராட்ட வாழ்க்கை இன்று நேற்று ஆரம்பித்ததல்ல, பிறந்த காலம் தொட்டு தனது சாவடைந்த நாள் வரை போராட்டமே வாழ்வாகி கொண்டவர் ( ஈழ விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல சாதியப் போராட்டத்துக்கு எதிராகவும் ) மிருதங்க வாத்தியக் கலைஞரான முருகனின் மூன்றாவது பிள்ளையாக பிறந்த சிங்கராஜா சிறுவயதாக ஓடியாடி விளையாடிய பருவத்திலையே தனது தந்தையை இழந்து தவித்த போது தாயின் அரவணைப்புக்குள் வளரத் தொடங்கிய போது, அவரது கிராமத்தை சாதிய வெறியர்களின் பேயாட்டம் சீர்குலைக்கத் தொடங்கியது. திரும்பும் இடமெங்கும் அடக்கியாள பேரினவாதமாக சாதியவாதிகளின் ஆணாதிக்க சக்திகள் பரவிக் கிடந்தன.
அப்போது சாதியத்துக்கு எதிரான போராளியாக, அவ்வூரின் காவல்காறர்களாக அன்றைய இளைஞர்கள் மாறிய போது, கந்தவனம் என்ற பெயரைக் கொண்ட மூத்த சகோதரன் கரங்களில் ஆயுதங்களை ஏந்தி இருந்தார். இன்னொரு சகோதரனனான இரத்தினம் ( பெரியதாய் மகன்) ஒரு கரத்தில் ஆயுதமும், மறு கரத்தில் பேனாவையும் தூக்கி இச் சாதி வெறியர்களின் அடக்குமுறைக்கு எதிராக போர் புரிந்தனர். ஆனால் அப் போர் ஓயும் முன்பே அக் கிராமத்துக்கு பேரிடியாய் ஒரு சாவு விழுந்தது. கோமகனின் மூத்த சகோதரன் திட்டமிட்டு வெட்டிச் சாகடிக்கப்பட்டார்.
இந்த சாவுடன் ஆரம்பித்தது இக் குடும்பத்தின் போராட்ட வரலாறு. இந்திய வல்லாதிக்க சக்திகள் அமைதிப்படை என இலங்கை வந்திருந்த போது, இந்தியப்படையின் கொடூரமுகத்தை முன்னமே ஊகித்துக் கொண்ட தேசியத் தலைவர் இந்தியாவை எதிர்த்து போராட முடிவெடுத்த போது , தமிழீழ விடுதலைப்புலிகளின் இளம் போராளியாக இருந்தார் சுருளி என்கின்ற சிவராசா. அவரையும் அவர் சார்ந்த அணியையும் பாதுகாக்கும் பணி அதிகமாக கோமகனை சார்ந்ததாகவே இருக்கும். ஒரு இடத்தில் தாக்குதல் நடந்தால் அல்லது அப்பகுதி தேடுதல் வேட்டைக்கு உட்படுத்தப்பட்டால், அப்பகுதியில் மதிவண்டியோடு காத்திருப்பார் கோமகன்.
இந்திய இராணுவம் மீதான அத் தாக்குதலை முடித்துவிட்டு / சுற்றிவளைப்பை முறியடித்து பின்வாங்கும் புலி அணிகளை பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தி பாதுகாப்பு தருவார் கோமகன். இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் வடமராட்சி பிரதேச அணிகளை பாதுகாத்துக் கொண்டிருந்த சிங்கண்ணனால் தனது தம்பியான சுருளியை அன்று காப்பாற்ற முடியவில்லை. இன்று தாம் நல்லவர்கள் என்ற பெயரில் அரசியலில் இருக்கும் ஒரு ஒட்டுக்குழு ஒன்று சிங்கண்ணனை காட்டிக் கொடுத்து கைது செய்து சித்திரவதை முகாம் ஒன்றில் அடைத்திருந்தது.
அதே நேரம் அக்கிராமத்தை சுற்றிவளைத்து சுருளியை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டும் செயற்பட்டது. கரவெட்டி கிராமம் முற்றுமுழுதாக சுற்றிவளைக்கப்படப் போவதை அறிந்த சுருளி தனது அண்ணன் கைதாகி விட்டதால்,  மற்ற சகோதரனான இரத்தினத்தையும் கைது செய்து விடுவார்கள் என அஞ்சினார். அதனால் அப்பிரதேசத்துக்கு போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதையும் தாண்டி தனது சகோதரனுக்கு அத்தகவலை தெரிவித்து உடனடியாக கிராமத்தில் இருந்து வெளியேற்றுவதற்காக கரவெட்டி மத்திப் பகுதியில் இருந்து கிழக்கை நோக்கி செல்கிறார்.
அப்போது ஏற்கனவே திட்டமிட்ட பொறிக்குள் சுருளி வருகிறார். அக்கிராமத்தை சேர்ந்த காட்டிக்குடுப்பாளன் ஒருவனால் கச்சிதமாக போடப்பட்ட இக்கொலைத்திட்டம் நிறைவேறிய போது இந்தியன் இராணுவத் தாக்குதலில் காயமடைந்தும், பக்கத்து மதில் பாய்ந்து ஓடிய போது ஒரு துரோகி வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார். வழி தெரியவில்லை உயிருடன் பிடிபடக் கூடாது என்பதால் குப்பி கடித்தார். சகோதரனை காப்பற்ற வேண்டும் என்ற நினைப்பில் வந்த சுருளி லெப்டினன் சுருளியாக வீரச்சாவடைந்தார்.
அதன் பின்பான காலம் அதிகமான சண்டைகளை இந்தியப் படைகளோடு புலிகள் செய்த காலம். அதே நேரம் கைதாகி சித்திரவதைகளுக்குள்ளான சிங்கண்ண விடுதலை செய்யப்பட்ட போது முழு உடலும் அடி காயங்களாலும், உள் காயங்களாலும் வலியாலும் நிரம்பிக் கிடந்தது. அவரது துணைவியான சரஸ்வதியும், சகோதரிகளும் அவரை மருத்துவத்தாலும், கவனிப்பாலும் மீண்டும் சாதாரணமானவராக மீட்டெடுத்தனர். அவர் சாதாரணமானவராக நடமாடியத் தொடங்கிய போது இவரது மைத்துனனான மேஜர் செங்கதிரும் வீரச்சாவடைந்திருந்தார்.
தம்பியையும், மைத்துனனையும் தமிழீழத்தை அபகரிக்கும் நோக்கில் வந்த இந்திய படையிடமும் சிங்கள வல்லாதிக்க இராணுவத்திடமும் பறிகொடுத்த சிங்கண்ணனாலும், இரத்தினத்தாலும் இன விடுதலைக்காக போராடாமல் வீட்டுக்குள் முடங்கிப் போய் கிடந்து வீடும் குடும்பமும் தனி வாழ்க்கையும் என்று இருந்துவிட முடியவில்லை. அதையும் தாண்டி அவர்கள் விடுதலைக்கான பயணத்தில் தம்மை போராளிகளாக்கினர் இரத்தினம் 1991 ஆம் வருடத்தில் இருந்தும் சிங்கண்ண 1994 ஆம் வருடத்தில் இருந்தும் பயணிக்கத் தொடங்கினர்.
அரசியல்த் துறையில் சிங்கண்ண கோமகனாகவும்,
இரத்தினம் பாரிமகனாகவும் இணைக்கப்படுகிறார்கள். களமும், அரசியலும் என்று பயணித்த கோமகன் தனது இறுதி நாட்கள் வரை இந்த தேசத்தை நேசித்த ஒரு உன்னதமான போராளி. அரசியல்த்துறைப் போராளியான கோமகனுக்கு அங்கே பல பணிகள் காத்திருந்தன. சண்டைப் பணி மட்டுமல்லாது, பரப்புரை, மனிதநேயப்பணிகள், என்று பல பணிகள் கொடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தை இனவழிப்புப் படைகள் முழுமையாக கைப்பற்றுவதற்கு சந்திரிக்கா தலமையிலும், அனுரத்வத்தவின் முயற்சியிலும் ஈடுபட்டு வந்த நேரத்தில் சில ஊர்களுக்குள் மீண்டும் குழு மோதல்கள், சாதிய வெறிச் சண்டைகள் என மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், அவ்வாறான பிரச்சனைகளை கையாளவும், இச்சண்டியர்களை கட்டுப்படுத்தவும் வேண்டிய தேவை எழுகிறது. அதனால் வடமராச்சியில் பணியில் இருந்த பலர் ஒருங்கிணைக்கப்பட்டு சண்டைகளில் ஈடுபட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புவபர்கள் இனங்காணப்பட்டனர்.
அவர்களை கைது செய்து மக்கள் வாழ்க்கையை இயல்புக்கு கொண்டு வருவதற்கு இட்ட கட்டளையை நிறைவேற்ற சென்றபோது ஓர் இடத்தில் கோமகனின் கழுத்தை நோக்கி வீசப்பட்ட கத்தி அவரது மூக்குப் பகுதியில் காயத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றது. இவ்வாறு இனவழிப்புப் படைகளுடன் மட்டுமல்லாது, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தீங்கிழைக்கும் எவரையும் எதிர்த்து நிற்பார் கோமகன்.
யாழ்மாவட்டத்தை விட்டு எமது அமைப்பு பின்நகர்ந்த போது ஒட்டிசுட்டான் பகுதியில் வீட்டை அமைத்த கோமகன் குடும்பத்தை விட்டு பணிக்காக போய்விட்டார். பின் அங்கிருந்து வள்ளிபுனம் நோக்கி நகர்ந்துவிட்டார். கோமகனின் மனைவி, பிள்ளைகளை பாதுகாத்து, பராமரித்து கல்வியூட்டி வளர்த்து வந்தார். அப்போது இவர்களின் மூன்றாவது பிள்ளையான பரிமளா தந்தை வழியில் போராட வேண்டும் என்று மாலதி படையணியில் இணைந்து கொண்டாள். கோமகனின் மகள் கோமகள் என்ற பெயரில் காவல் காத்தாள்.
அவள் சண்டை அணியில் நின்ற போது பின்களப் பணிக்காக மக்களை அழைத்துக் கொண்டு சென்ற கோமகன் கவலரன் ஒன்றில் மகளை காண்கிறார். வரி உடையில் அப்பாவும் மகளும் களமுனையில் நின்ற அக்காட்சி எம் விடுதலைப் போராட்டத்துக்கு மட்டுமே உரியது. அங்கிருந்த பொறுப்பாளரிடம் மகளோடு உரையாடுவதற்கு அனுமதி கேட்ட போது பொறுப்பாரின் கண்கள் பனித்தன.
எத்தனையோ வீடுகளில் ஒருவர் கூட போராட்டத்துக்காக பங்கெடுக்காத நிலையில் இக்குடும்பத்தால் மட்டும் இவ்வாறு வாழ எவ்வாறு முடிந்தது? மகளுக்கு பொறுப்பாக நின்ற பெண் போராளி உடனியாக காவலரனில் இருந்து பின்நகர்த்தி தந்தையோடு பேசுவதற்கு அனுமதித்தாள். ஆனால் இருவருமே களப்பணியில் நிற்பதால் நீண்ட நேரம் பேசவில்லை. விழிகள் கலங்கினாலும் விடைபெற்றுக் கொள்கிறார்கள்.
6 பிள்ளைகளை பெற்றெடுத்த கோமகனுக்கு முதல் பிள்ளை சாதாரணமான பிள்ளையாக வளர்ந்தும் 14 வயதில் இருந்து உடல்நலம் குன்றியவனாக போனது மனவேதனை. என்றாலும் அப்பிள்ளையை சிறப்பாக கவனித்து வந்தார். 2000 ஆண்டளவில் அப்பிள்ளை சாவடைந்து விட துடித்துப் போனார்கள் பெற்றவர்கள். ஆனாலும் மக்களின் வாழ்வுக்காக போராளியானவரல்லவா அவர். அவ்விழப்பில் இருந்து மீண்டு வந்தார். ஆனால் அடுத்த இழப்பும் அவர்களுக்கு வரப்போவதை அறியவில்லை.
யாழ்ப்பாணத்தை நோக்கி பெரும் திட்டமிட்ட சண்டை ஒன்றை விடுதலைப்புலிகளின் படையணிகள் செய்கின்றன. குடாரப்பு ஊடாகத் தரையிறங்கி யாழ்ப்பாணத்தில் குந்தி இருந்த இராணுவத்தை முடக்குவதற்கான பெரும் சண்டை. அத் தரையிறக்க சண்டைக்கு படையணிகள் கடல் வழியாக நகர்ந்த போது, தரைவழியாக நகர்ந்த படையணிகளுக்கான பின்னணி வழங்கலுக்காக சிங்கண்ண அனுப்பப்படுகிறார். திறமையான சாரதி, கடுமையான உழைப்பாளி. எதற்கும் அஞ்சிடாத துணிந்தவர். இவர் இப்பணியில் இருந்த போது கோமகள் முன்னணியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அப்பாவும், பிள்ளையும் ஒரே களமுனையில் இனவழிபு அரசை எதிர்த்து நின்றனர்.
ஒரு நிலையில் முன்னணியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த கோமகள் வீரச்சாவடைய அக் குடும்பம் மீண்டும் பேரிழப்பை சந்திக்கிறது. அதே நேரம் மகள் மகள் வீரச்சாவடைந்ததைக் கூட அறியாதவராக, பின்களப் பணியில் இருந்து மீண்ட அவர் நேரடியாக தியாகசீலத்துக்கு சென்றார். (தூண்டி) அங்கே பணி செய்த அவருக்கு மகள் வீரச்சாவடைந்தது கூட தெரியவில்லை. அவர் அங்கே வந்திருந்த வித்துடல்களை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களோடு இணைந்து அவ்வேலையை செய்துகொண்டிருந்தார். அதனால் மகள் வீரச்சாவடைந்ததை கூட அறியவில்லை. வித்துடல் வீட்டுக்கு வந்த பின் தான் அறிந்து கொண்டார். வீட்டுக்கு வர தாமதமும் ஆனார். அதே நேரம் அவர் பணியாற்றிய விசுவமடு துயிலும் இல்லத்திலையே உறங்கினாள் அவரின் மகளும்.
ஆனாலும் துவண்டு விடவில்லை. தன் பணியில் உறுதியாகவே இருந்தார். அவர் மாவீரர்கள் மீது வைத்திருந்த பாசம், அவர்களை உறங்க வைக்கும் துயிலுமில்லங்களை மேம்படுத்துதல், புனரமைத்தல் என்று பணி கொடுக்கப்பட்டு மாவீரர்பணிமனைப் பொறுப்பாளர் பொன்தியாகம் அப்பாவின் பொறுப்பில் பணியமர்த்தப்படுகிறார்.
இதன் பின்பான காலமே எப்போதும் அவர் நேசிக்கும் மாவீரர்களோடு அவர் அதிகமாக வாழத் தொடங்கினார். அவ்வாறான ஒரு நிலையில் தான் சமாதானம் என்ற பெயரில் எம்மீது நடாத்தப்படவிருந்த இனவழிப்புக்கான தயார்ப்படுத்தல்களை சிங்கள தேசம் தொடங்கியிருந்தது. அப்போது கொடிகாமம், சாட்டி போன்ற துயிலும் இல்லங்களை உடனடியாக புனரமைக்கும் பணி கோமகனுக்கு கொடுக்கப்பட்ட போது அதை சரியாக செய்து முடித்தார். பின் நாட்களில் சமாதான காலம் முறிவடைந்த போது விசுவமடு துயிலும் இல்லம் கோமகனின் வீடானது. அப்புனித இடம் அவரது கோவிலானது. தினமும் அக் கோவிலை பூசித்து வந்த கோமகனால் துயிலும் இல்லத்தை விட்டு பிரிந்து விட முடியவில்லை. இறுதிவரை அங்கேயே பணிசெய்தார்.
விடுதலைப்புலிகளின் போராளிகளைப் பொறுத்தவரையில் சாவினை எதிர்பார்த்த வாழ்வினைத் தான் ஒவ்வொருவரும் வாழ்ந்தார்கள். அங்கே விதைக்கப்பட்ட ஒவ்வொரு மாவீரனின் கனவுகளையும் சுமந்த ஒட்டுமொத்த உருவமாக கோமகன் துயிலுமில்லத்துக்குள் வாழ்ந்தார். இறுதி யுத்தம் என்ற பெயரில் இனவழிப்பு நடவடிக்கை தொடங்கிய போது, தினமும் வித்துடல்கள் வந்து கொண்டிருந்தன. இரவு பகல் என்றில்லாது வித்துடல்கள்
விதைக்கப்பட்டன. தளபதிகள் சாதாரண போராளிகள் என்றில்லாது அத்தனை பேரும் விதையாகிய பொழுதுகளில் எல்லாம் மனம் வலித்தாலும் எதிரி மீது கோவம் வந்தாலும் தான் செய்யும் பணியை நேசித்தார் கோமகன்.
பிள்ளைகளுடன் நண்பனாக பழகும் அவரால் எளிதில் எல்லோரையும் கவர்ந்து கொள்ளவும் முடிந்திருந்தது. என்ன சிங்கண்ண தியாகம் அப்பா டபிள் பட்ஜட்டா தாறார் உங்கட ஆக்கள் எல்லாரும் ஒரே மாதிரி இருக்கிறீங்களப்பா என அவரின் தொப்பையை நக்கலடிக்கும் போராளிகளை திருப்பி நக்கலடித்து வாய் திறக்காமல் செய்து அனுப்பும் அவரால் அப் போராளி வித்துடலாக மீண்டும் அங்கே வந்தால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்? ஆனால் அவர் தாங்கினார். தன் உறவுகளுக்கு கூட அவர் கண்கலங்க மாட்டார். உறவுகளின் என்றாலும் வித்துடல்கள் விதைக்கப்படும் முன் உறுதியுரை வாசிக்கும் போது எந்த பிசிறும் இருக்காது. குரலில் தடுமாற்றம் இருக்காது. உறுதியாகவே தன் பணியாற்றினார்.
இவ்வாறான பொழுதுகளை எல்லாம் கடந்து வந்த கோமகன் இறுதிப் போர் என்ற இனவழிப்புத் தாக்குதலால் தான்நேசித்த விசுவமடு துயிலும் இல்லத்தை விட்டு பின் நகர வேண்டி இருந்தது. அவரால் முடியவில்லை. ஆனால் சிங்கள தேசமே அவரை அங்கிருந்து நகர்த்தியது. இறுதியாக அத் துயிலுமில்லத்துக்கு வந்திருந்த ஒரு வித்துடலை விதைப்பதற்காக முயன்ற போது, சிங்களப்படையின் எறிகணை ஒன்று வீழ்ந்து வெடிக்கிறது. அவ்வெறிகணை உடல் முழுவதும் காயங்களை உண்டு பண்ணி குருதி பெருக்கெடுத்த நிலையில் துயிலுமில்லத்தை விட்டு வெளியேற்றியது. அன்று தான் அவர் இறுதியாக தன் குலகோயிலை பார்த்தது.
இனவழிப்புச் சண்டை முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற போது கலங்கிப் போன சிங்கண்ணையால் எதுவும் செய்ய முடியவில்லை. காயங்களின் கோரம் இயங்குவதில் கொஞ்சம் கடினம். ஆனாலும் இறுதியாக வித்துடல்கள் விதைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லம் வரை அப்பணியை கைவிடவே இல்லை.
மே 12 ஆம் திகதி இரவு 2 மணி சிங்களப்படையின் கொடூரமான தாக்குதல்களின் உச்சம் நடந்து கொண்டிருக்கிறது. நந்திக்களிப் பகுதியில் பங்கரும் வெட்ட முடியவில்லை. வெற்றுத் தரையில் எல்லோரும் படுத்திருந்தார்கள். ஊர் முழுக்க அழுகுரல்கள். திரும்பும் இடமெங்கும் நாற்றமெடுத்த நிலையில் வெற்றுடல்கள். இரத்தச் சிதறல்கள் என முள்ளிவாய்க்கால் முடங்கிக் கொண்டிருந்தது. சிங்கண்ணையின் குடும்பமும் விதிவிலக்கல்லவே.
ஆட்லறி எறிகணை ஒன்று அருகில் வீழ்ந்து வெடிக்கிறது. அவரின் குடும்பம் சார்ந்த 20-25 பேர் காயமடைகிறார்கள். அதில் மீண்டும் காயமடைந்த சிங்கண்ண படுகாயமடைந்த தன் மகளை தூக்கிக் கொண்டு இறுதியாக இயங்கிய மருத்துவமனைக்கு ஓடுகிறார். ஆனால் அம்மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவரால் அப்பிள்ளையை காப்பாற்ற முடியவே இல்லை. மறுபடியும் ஒரு பிள்ளையை இழந்த நிலையில் கோமகன் என்ற சிங்கண்ண சிங்களத்தின் கொடூரங்களுக்குள் வாழ வேண்டிய நிலையில் சரணடைகிறார்.
18-19 வயது வரை வளர்த்தெடுத்த 3 பிள்ளைகளை இழந்த மனிதன் உடைந்து போகவில்லை. ஆனால் முள்ளிவாய்க்காலில் எம் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட போது உண்மையில் உடைந்து போனார். அவரால் சாதாரணமாக இயங்க முடியவில்லை. மனம் சுக்கு நூறாகிக் கிடந்தது. இந்த நிலையில் ஓமந்தையில் வைத்து காட்டிக் கொடுப்பாளன் ஒருவரால் ( கோமகனுக்கு நன்கு அறிமுகமானவன் ) காட்டிக் கொடுக்கப்பட்டாலும் கைதில் இருந்து தப்பி ஆனந்தகுமாரசாமி முகாமுக்குள் கொண்டு செல்லப்படுகிறார். அங்கு ஒரு மாதத்துக்கு மேல் வாழ்ந்த அவரால் காட்டிக் கொடுப்பாளர்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. இனங்காணப்பட்டு கைது செய்யப்படுகிறார். கடுமையான சித்திரவதைகள் நடந்தேறின.
ஏற்கனவே காயமடைந்திருந்த அவரால் சித்திரவதைகளை தாங்க முடியவில்லை. ஆனாலும் தாங்கினார். ஒரு வருடத்துக்கு பின் விடுதலை செய்யப்பட்ட பின் ஒட்டிசுட்டானில் நடந்த மரணவீடொன்றுக்காக பேருந்தில் பயணித்த சிங்கண்ண, விசிவமடுத் துயிலும் இல்லத்தடியை பேருந்தில் இருந்தபடி ஏக்கத்தோடு பார்த்தபடி போகிறார். அசைவில்லை. பரமை பிடித்தவராய் இருந்தார். குறிப்பிட்ட தூரம் கடந்த போது அவர் மயங்கி சரிகிறார். பின்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற உறவினர்களுக்கு மருத்துவர் அதிர்ச்சி கொடுத்தார்கள்.
“சிங்கண்ணைக்கு பாரிசவாதமாம்.” உடைந்த உறவுகள. வீட்டுக்கு கொண்டு வந்த போது அவர் ஒன்றைக் காலும் கையும் இழுத்த நிலையிலே கிடந்தார். குறுகிய கால மருத்துவத்தின் பின் சாதாரணமாக இல்லை எனிலும் மெதுவாக நடமாடத் தொடங்கியவரை குறுகிய காலத்தில் முழுமையாக படுக்கையில் கிடத்தியது பாரிசவாதம்.
நீண்ட கால படுக்கையில் அவரின் நினைப்பு முழுவதும் மாவீரர்கள் சார்ந்ததாகவே இருந்தது.
இவ்வாறு அவர் படுத்த போது 2014 இறுதி நாள்வரை ஒரு கரத்தில் பேனாவும், மறுகரத்தில் துப்பாக்கியுமாக பயணித்த அன்பு அண்ணன் பாரிமகனும், நோயினால் மடிந்து போக இன்னும் இன்னும் உடைந்து போகிறார் கோமகன். அண்ணனை துயிலும் இல்லத்தில் உறுதியுரை செய்து விதைக்க வேண்டிய சிங்கண்ண படுக்கையில் கிடக்க சாதாரண சுடரை ஒன்றில் குழி வெட்டி புதைத்ததும் அவரால் ஏற்க முடியவில்லை. அவருக்குப் பக்கத்திலையே தானும் தூங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தன்னை பராமரித்து வந்த மருமகனிடம் “ அண்ணாக்குப் பக்கத்தில என்னை விதைச்சு விடப்பு எரிக்காத” என்ற வேண்டுகோளோடு விழி மூடிப் போய்விட்டார்.
இறுதிக் காலத்தில் கூட தேசியத் தலைவரை அழைத்தபடியே இருந்திருக்கிறார். தூங்கும் போது தவிர மற்ற நேரத்தில் எல்லாம் அவர் பணியாற்றிய பிரிவின் தொலைத்தொடர்பு நிலையங்களை கூப்பிட்டபடி இருந்திருக்கிறார். இவரைப் பார்க்க வரும் நண்பர்களிடம் தனது துப்பாக்கி ரூமுக்குள்ள கிடக்கிற அலமாரிக்குள்ள வைச்சுப் பூட்டிட்டுத் தான் வந்தனான் திறப்புத் தாறன் எடுத்து வாறியா என்றெல்லாம் தான் நேசித்தவற்றைப் பற்றியே கதைச்சிருக்கிறார். அதனாலோ என்னவே எங்கள்
தேசத்தை நேசித்த வேங்கை, தமிழீழ விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009 வைகாசி 18 ஆம் நாளில் இருந்து சரியாக 10 வருடங்களின் முடிவில். 2019 வைகாசி 18 அன்று இரவு 11.50 மணியளவில் தன் விழிகளை மூடி தனது அண்ணன் அருகிலையே வெட்டப்பட்ட குழியில் துயில்கின்றார்.

-இ.இ. கவிமகன்-

No comments