ஆப்கானிய அகதிகளுக்கு தமிழ் மக்கள் உதவி!


வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆப்கானிய அகதிகளிற்கான ஒரு தொகுதி நிவாரணத்தை முல்லைதீவு தமிழ் மக்கள் வழங்க முன்வந்துள்ளனர்.
கொழும்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களை சிங்கள மக்கள் தாக்குவார்கள் என்ற அச்சத்தினால் இலங்கை அரசாங்கம்; வவுனியா - பூந்தோட்டம் முகாமில் தங்கவைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் இந்த மக்களை வேறு பிரதேசங்களுக்கு மாற்றுமாறு கோரி நீர்கொழும்பில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அம்பாந்தோட்டையில் தங்க வைக்கப்பட்டபோதும் அங்கும் சிங்கள மக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். 

சிங்களப் பிரதேசங்களில் இந்த அகதிகளைத் தங்கவைத்தால் பௌத்த சிங்களக் கடும் போக்காளர்கள் இவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடும். அவ்வாறு தாக்கப்பட்டால் அது சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தும். எனவே தமிழ் பிரதேசங்களில் இந்த அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் இந்த அகதிகளைத் தாக்கமாட்டர்கள் என்ற நம்பிக்கையும் இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு.

அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உலர் உணவு பொதிகளை வழங்க திட்டமிட்டிருந்தனர்.

அவர்களை உலர் உணவு கொடுக்கவிடாமல் அங்கு நின்ற இலங்கை இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று உலர் உணவுகளை வழங்குமாறு இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

இதேவேளை முப்பது ஆண்டுகால போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏதிலிகளாக வவுனியாவில் தங்கியுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களை மனிதாபிமான ரீதியில் பராமரிக்கவும் அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

உலர் உணவுகளைக் கையளிப்பதற்கான அனுமதியை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பெற அவர்கள் முற்பட்டுள்ளனர்.

இந்த அகதிகளின் செலவுகளுக்கு தலா 20 ஆயிரம் ருபாய்களை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் வழங்கி வருகின்றது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து ஐநூறு அகதிகள் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments