தீவிரவாதிகளை விடுவிக்க இராணுவத் தளபதியுடன் டீல் பேசிய றிசாத்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கைது செய்யப்பட்டவரை விடுவிக்க அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன்”

இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக தெரிவித்தார்.

அமைச்சர் றிசாத் கோரிக்கையையே முன்வைத்தார். அதனை அழுத்தமென கூற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இராணுவ தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க.

“ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாத தாக்குதலின் போது கைதுசெய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி அமைச்சர் றிசாத் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்படுகின்றதே, இது குறித்த உண்மை என்ன? என ஊடகவியலாளர் வினவினார்.

அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“அமைச்சர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் இன்னாரின் உறவினர், இவர்கள் எல்லாம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள், ஆகவே அவரை விடுதலை செய்ய முடியுமா? என கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார்.

முதலில் எனக்கு கைதுசெய்யப்பட்ட நபர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. பின்னர் இரண்டாவது தடவையும் தொடர்புகொண்டு என்னுடன் இந்த விவரங்கள் குறித்து பேசினார். மூன்றாவது  தடவையும்  அமைச்சர்  தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த நபரை விடுவிக்க கோரிக்கை விடுத்தார்.

எனினும் அப்போது அவர் குறிப்பிடும் நபர் குறித்து என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. ஆகவே இன்னும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து எனக்கு மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள், அப்போது உங்களின் கோரிக்கையை நான் ஆராய்கின்றேன் என்று கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டேன்.

இதனை ஊடகங்கள் பிரசுரித்ததை  நான் அவதானித்தேன்.  அமைச்சர் எனக்கு அழுத்தம் கொடுத்தார் என அதில் கூறப்பட்டது. ஆனால் அவர் அழுத்தம் கொடுக்கவில்லை. கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார்.

அவ்வாறு கோரிக்கை முன்வைக்கும் உரிமை அவருக்கு உள்ளது. இதனை ஊடகங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை. கோரிக்கையாகவும் பார்க்கலாம், அல்லது அழுத்தமாகவும் பார்க்கலாம். ஆனால் நான் அவரது கோரிக்கைக்கு ஏற்ற பதிலை கூறிவிட்டேன்” என்று இராணுவத் தளபதி பதிலளித்தார்.

கேள்வி:- யாரை விடுவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார் ?

பதில்:- ஹ்ம்ம், அவர் கூறிய பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை, அங்கு எல்லாம் முகமெட்டுகளாக இருந்தனர். அவர்களின் உரிய பெயர் எனக்கு தெரியவில்லை – என்றார்.

No comments