பல்கலை மாணவர் கைது - இனக்குரோத மனநிலையின் வெளிப்பாடே


உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களை ஏற்கமுடியாதோ, கண்டிக்கத்தக்கதோ அவ்வாறே அதனைத் தொடர்ந்து நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினதும் உணவுச்சாலை ஊழியரினதும் கைது நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாத வன்மையான கண்டத்திற்குரியது.

உயர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளையும் அதனுடன் தொடர்புடையவர்களையும் கைது செய்யும் நோக்குடன் மீண்டும் இந்த நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம் கடந்த காலங்களைப்போல் மீண்டும் அப்பாவி தமிழர்கள் மீது பாய்ந்துள்ளது.

சிங்கள தேசத்தில் உள்ள பலருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் தான் எமது இனத்தின் உரிமைப்போராட்டத்தின் மகத்துவம் விளங்கியது. அவ்வகையில் அவசரகாலசட்டம் நடைமுறையில் உள்ள நிலையிலும் அதனை நடைமுறைப்படுத்திய சிங்கள தேசத்தில் உள்ள அரச தலைவர்கள் , சிங்கள பேரினவாதத்தை வளர்த்து விட்டவர்கள் எனப் பலரும் எமது இனத்தின் உரிமைப்போரட்டத்தின் மகத்துவத்தையும் அந்த உரிமைப்போராட்டத்தினை வழிநடத்திய தமிழ்த்தேசத்தின் தலைமகனின் அறத்தையும் புகழ்ந்து தள்ளுகின்ற நிலையில், எந்நாளும் எம் மனதினுள் இருக்கும் அத் தலைமகனின் உருவப்படத்தை சுவரில் புகைப்படமாக வைத்திருப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்ற வினாவும் எழாமல் இல்லை.

2016 ஆண்டு போரின் அனுபவங்கள் தொடர்பாக மேஜர்ஜெனரல் கமால் குணரட்ண எழுதிய புத்தகத்தில் மிகவும் தெளிவாக தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை அச்சிட்டு வெளியிட்டு இருந்தார். ஆனால் யாழ்.பல்கலைக்கழகத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஒரு தெளிவில்லாத புகைப்படம் காணப்பட்ட காரணத்திற்காக அதனுடன் எவ்விதத்திலும் சம்மந்தம் இல்லாத மாணவர்கள் கைது செய்யப்பட்டது ஏற்புடையதா? அதே நேரம் கிழக்கு மாகாண முதல் குடிமகனின் அலுவலகத்தில் இருந்து ஆயுத உபகரணங்கள் கைப்பற்றபட்டன ஆனால் இது தொடர்பில் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

பொலிசார் இம் மாணவர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் ஒன்று இனகுரோதத்தை விளைவித்தனர் என்பது. தமிழ்மக்களின் பூர்விகமான நிலங்களை நானே பறித்தேன், நானே கோவில் நிலத்தைப் பறித்து கட்டடம் கட்டினேன். முஸ்லீம் இளைஞர்களுக்கு நானே ஆயுதங்கள் வழங்கினேன். வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று கூறிய வார்த்தைக்கள் இனகுரோதத்தை விளைவிக்க கூடியவை அல்ல ஆனால் பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட படமும் பாதகையும் இனகுரோதத்தை விளைவிக்க கூடியவை என்று கூறுவது நகைப்பிற்குரியது

இம் மாணவர்களுடன் உணவுச்சாலை ஊழியரின் நிலமை படு பரிதாபமானது. தியாக தீபம் திலீபன் அகிம்சையால் எமது இன விடுதலைப்போராட்டத்திற்கு உரமூட்டியவன். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அவ் மாணவன் அவன் தியாக மரணமடைந்த பின்பு தனது உடலை யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் படிப்பிற்காக வழங்கியவன். இவ்வாறு பல தியாகங்களைப் புரிந்த யாழ்.பல்கலைக்கழக மருத்த பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவனின் உருவப்படம் அவ் மருத்துவ பீட உணவுச்சாலையில் இருப்பதில் என்ன தவறு உள்ளது. அத்துடன் அப் படம் இருந்தற்காக அவ் உணவுச்சாலை ஊழியர் கைது செய்யப்பட்டது நியாயம் தானா?

ஆக பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தேடுதல் மேற்கொண்ட இராணுவத்தினரும் பொலிசாரும் நகைப்பிற்குரிய இக் காரணங்களுக்காக மாணவர்களை கைது செய்தமை அவர்கள் மாணவர்களின் பாதுகாப்பை என்ற போர்வையில் வேறு காரணத்திற்காக யாழ்.பல்கலைக்கழகத்தினுள் சென்றதனை உறுதிப்படுத்தி நிற்கின்றது.

உண்மையில் இராணுவத்தினரினதும் பொலிசாரினதும் இச் செயல்கள் தான் இனகுரோதத்தினை விளைவிக்கும் செயல்களாகும்

எமது மக்களையும் தமிழ்த் தேசத்தினையும் தொடர்ச்சியாக அச்சநிலையில் இராணுவ அடக்கு முறைகளுக்குள் வைத்திருக்க வேண்டும் , எமது மக்கள் தங்கள் இனசார்ந்து சிந்திக்க முடியவர்களாக பற்றுதியை வெளிக்காட்ட முடியாதவர்களாக தனித்துவமற்றவர்களாக வைத்திருக்க வேண்டும் என்கின்ற அரசினதும் அரச படைகளினதும் நிகழ்ச்சி நிரலுக்கு வலுச் சேர்க்கவே இக் கைது இடம் பெற்றது.

அந்தவகையில் மிகவும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இவ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக சமூகம் மேற்கொள்ளுகின்ற எல்லா நடவடிக்கைகளுக்கும் எமது தார்மீக ஆதரவு என்றும் உண்டு.

நன்றி

வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

No comments