கைதுகள் தொடர்கின்றது?


உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த அமெரிக்க அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
செல்சியா டிகமினாடா எனப்படும் நபரே, ஷங்கிரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டுச்செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார்.
எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காத்தான்குடியைச் சேர்ந்த, தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான – நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஏழு தற்கொலைக் குண்டுதாரிகள் அம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் நெருங்கிய உதவியாளர்களாவர்.சஹ்ரானின் சகோதரர்களில் ஒருவரே, இவர்களை அம்பாந்தோட்டைக்கு அழைத்து வந்துள்ளார்.இவர்களுக்கு மிகவும் புத்திசாலித்தனமான முறையில் அம்பாந்தோட்டையில் ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி நீண்ட நாட்களாக அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு, மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலை நடத்திய மொகமட் நசார் மொகமட் ஆசாத், பயிற்சிகளை வழங்கி வந்துள்ளார்.காத்தான்குடியில் இருந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் குழுவொன்றே இவர்களைக் கைது செய்து விசாரணைகளை நடத்தி வருகிறது.

No comments