தனிமனித அரசியல் அபிலாசைகளால் தமிழ் சமூகத்தின் நன்மைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன - கானட் ஜெனஸ்

சமூக அக்கறையை விட, தனிமனித அரசியல் அபிலாசைகள் மேலோங்கிய காரணத்தால் தமிழ் சமூகத்தின் நன்மைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

கடந்த மூன்று மாதங்களுக்குள் கனடிய நாடாளுமன்றத்தில்நான்கு பிரேரணைகள் கொண்டுவரப்பட்ட போதிலும்,நான்குமே தோற்றுப்போயுள்ளன.

கடந்த பெப்ரவரி-மார்ச் மாதங்களில், ஐநா மனித உரிமைப் பேரவையில் ஈழப்பிரச்சனையில் மனித உரிமை மீறல்கள், போரக்குற்றங்கள் மற்றும் இனஅழிப்பு பற்றி மீண்டும் விவாதத்திற்கு வந்தபோது, அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கானட் ஜெனஸ் ஒரு முக்கிய பிரேரணையை முன்மொழிந்தார். மிகவும் கனதியான அந்தப் பிரேரணையை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அங்கீகரித்திருந்தால்,ஈழத் தமிழர்களுக்கு அது நிட்சயம் நன்மை பயக்கும் வகையில் ஐநா மனித உரிமைச் சபையை நகர்த்தியிருக்க வாய்ப்பிருந்தது. ஏற்கனவே அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் முன்கொண்டுவரப்பட்ட அந்தப் பிரேரணையை எப்படியாவது தடுக்கும் முயற்சியில் இறங்கிய லிபரல் கட்சி உறுப்பினர்கள், அதற்கு முன்னர் திடீரென ஒரு கனதியற்ற பிரேரணையை முன்கொண்டு வந்ததால், இரு பிரேரணைகளும் அங்கீகாரம் பெறத் தவறின.

இப்போது கானட் ஜெனஸ் முன்மொழிந்த பிறிதொரு பிரேரணையும் அனைத்துக் கட்சியின் அங்கீகாரத்தைப் பெறத் தவறியதால் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

கௌரவ கானட் ஜெனஸ் அவர்கள் முன்வைத்த பிரேரணையில் பின்வரும் விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன:

தமிழரைக் குறிவைத்து நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கானட் ஜெனஸ் முன்வைத்த பிரேரணையில்,பத்து வருடங்களுக்கு முன்னர் இழைக்கப்பட்ட இனப்படுகொலை பற்றிய குற்றச்சாட்டுக்களை கனடிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகார அலுவல்களுக்கான குழு விசாரித்து, அதன் அறிக்கையை ஐநா சபையில் ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று கோரப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்த வேண்டுமென்று கடந்த பத்து வருடங்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மீண்டும் தமிழரை ஏமாற்றும் வகையில் அதே போன்றதொரு பிரேரணையைக் கொண்டுவருவது எந்தப் பலனையும் தரப் போவதில்லை. இந்நிலையில், கானட் ஜெனஸ் கொண்டுவந்த பிரேரணையில், காலக்கெடுவுடன் கூடிய வகையில் கனடிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகார அலுவல்களுக்கான குழுவே ஆராய வேண்டுமென்று கோரப்பட்டிருந்தது மிகவும் கனதியானதே.

1.            சிறீலங்காவில் போரிலும் பயங்கரவாத தாக்குதலிலும் பாதிப்படைந்தோருக்கு அனுதாபங்கள்.

2.            உயிர்ப்பு ஞாயிற்றுக்கிழமை சமய வழிபாட்டின்போது சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

3.            ஐநா மனித உரிமைச் சபையின் தீர்மானங்களான 30ஃ1 மற்றும் 40ஃ1 போன்றவற்றை சிறீலங்கா அமுல்படுத்த வேண்டும். அத்துடன் அந்நாட்டின் அனைத்து இனங்களின் அமைதியை உறுதி செய்வதுடன்,பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மீளுறுதி செய்தல்.

4.            2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்த காலத்தில் தமிழர் மீது நடைபெற்றிருப்பதாகக் கூறப்படும் இனப்படுகொலைக்கு ஐநா சபை சுதந்திரமான சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும்.

5.            இறுதி யுத்த காலத்தில் தமிழர் மீது நடைபெற்றிருப்பதாகக் கூறப்படும் இனப்படுகொலைகள் பற்றி, உரிய விசாரணைகளை கனடிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகார அலுவல்கள் மற்றும் சர்வதேச முன்னேற்றத்திற்கான குழு உரிய விசாரணைகளை விரைவாக நடாத்தி, அதன் அறிக்கையை இவ்வருடம் யூன் 19ம் திகதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

6.            சிறீலங்காவில் மேற்கொள்ளப்படுவதாக நம்பப்பட்டு, தொடர்ச்சியாக கனடிய அரசால் வழங்கப்படும் நிதி, உரியை வகையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்டறியும்படி சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சைக் கோர வேண்டும்.


உலகில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களில் எப்போதும் கொன்சவ்வேட்டிவ் கட்சி முழுமையாகக் குரலெழுப்பும். அதே கொள்கையுடன் கொன்சவ்வேட்டிவ் கட்சி முன்வைத்த பிரேரணையை லிபரல் கட்சி தோற்கடித்திருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கானட் ஜெனஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments