கைது செய்யப்படவில்லை:மகன் மறுப்பு!


இலத்திரனியல் உபகரணங்களுடன் ஜேர்மன் பிரஜையான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என் வெளியாகிய செய்தி தொடர்பாக குறித் பெண்ணின் மகன் மறுப்பு வெளியிட்டுள்ளார்.

தனது தாயார் ஜேர்மன் பிரஜை அல்ல எனவும் அவர் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருக்கவில்லை எனவும் கூறிய அவர், தனது தாயார் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்று (15) காலை 10 மணிக்கே வீடு திரும்பிவிட்டார் எனவும் அவர் கூறினார்.

அவர் கொண்டுவந்தது மகிழ்ச்சிகரமான கற்றல் உபகரணம் எனவும் அது கட்டுநாயக்கா விமான நிலையத்திலேயே சோதனை செய்யப்பட்ட பின்னரே யாழ்ப்பாணம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டது எனவும் கூறிய அவர், அந்த உபகரணம் பாடசாலைகளிலும் கற்றலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் கூறினார்.

இது தொடர்பாக குறித்த பெண்மணியின் மகனான சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் திட்ட இணைப்பாளராக பணியாற்றும் எஸ்.மொன்ரினி மேலும் தெரிவிக்கையில்,ஜேர்மனியின் வசிக்கும் எனது சகோதரியின் குழந்தைப் பேற்றுக்காக கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் அங்கு சென்ற எனது தாயார் நேற்றைய தினம் நாட்டுக்கு வந்திருந்தார். அவர் ஜேர்மன் பிரசாவுரிமை பெற்றவர் அல்லர்.

வரும்போது பேரப்பிள்ளைகளுக்கு சில விளையாட்டு உபகரணங்களைக் கொண்டுவந்தார். மூன்று பேரப்பிள்ளைகளுக்கும் மூன்று உபகரணங்கள் இருந்தன. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அதனைச் சோதனையிட்டே நாட்டுக்குள் அனுமதித்தனர். கோட்டே புகையிரத நிலையத்திலும் சோதனையிட்ட பின்னரே புகையிரதத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், யாழ். புகையிரத நிலையத்தில் சோதனையிடப்பட்டவர்களுக்கு அது தடை செய்யப்பட்ட பொருளாகத் தெரிந்தது ஆச்சரியமளிக்கின்றது. உண்மையிலேயே அது பாடசாலைகளில் மகிழ்ச்சிகரமான கற்றலுக்காக பயன்படுத்தப்படும் உபகரணம்.

புகையிரத நிலையப் பாதுகாப்பு பிரிவினர் எனது தாயாரை விசாரணைக்காக யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அங்கு இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டு இன்று காலை 10 மணிக்கே வீட்டிற்கு வந்துவிட்டார்.

எனினும், குறித்த உபகரணங்களை, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சோதனைக்கு பின்னர் அவர்கள் அனுமதித்தால் மீள வழங்கப்படும் எனக் கூறி பொலிஸார் வைத்திருக்கின்றனர் என தெரிவித்தார்.

No comments