"ஹெச்.ராஜா கட்டுத்தொகை இழக்கச் செய்யுங்கள்" வைகோ வேண்டுகோள்!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் திமுக கூட்டணி சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் வேட்ப்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து நேற்று மதிமுக பொதுச்செயலாளர் பேசியிருந்தார்.

அங்கு பேசிய அவர் “நாடாளும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒவ்வொரு நாளும் ஆபத்தான அதிர்ச்சிதரத்தக்க அறிவிப்புகளை, தவறான தகவல்களை, உண்மைக்கு மாறான செய்திகளைச் சொல்லி வருகிறார். இந்து மதத்தை யாரும் இங்கே குறைத்துப் பேசவில்லை. ஆனால், ‘இந்து தீவிரவாதி’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்துகிறார்.

ஏதாவது ஒரு வன்முறை சம்பவத்தில் இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளனவா என்று மோடி கேட்கிறார். போர்பந்தரிலே பிறந்த காந்தியடிகளை கோட்சே சுட்டுக்கொன்றான் என்ற செய்தி உங்களுக்குத் தெரியாதா? எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்று சொல்கிறீர்களே. கோட்சேவுக்கு ஊர் ஊராகச் சிலை வைப்போம் என்று சொன்னது நெஞ்சை நடுங்க வைத்ததே. காந்தி குஜராத்துக்கு மட்டும் சொந்தமல்ல. அவர் இந்திய நாட்டுக்கு மட்டும் சொந்தமல்ல. உலகுக்கே சொந்தமானவர்.

திராவிட இயக்கத்துக்கும் தலைவர், காங்கிரஸ் இயக்கத்துக்கும் ஒரு காலத்தில் தலைவர் எங்கள் அறிவாசான் தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிய ஹெச்.ராஜாவை  நீங்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். ஆட்சிக்கு வந்தபின் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி உறுதியளித்தார். 15 ரூபாய் கூட வரவில்லையே.

மோடி அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டியால் ஏராளமான மளிகைக் கடைகள், வணிகர்களின் வாழ்க்கை பாழாகிவிட்டது. ஒவ்வொருவரும் ஆடிட்டர் வைத்துக்கொள்ள முடியுமா? தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நமது மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்று மாநில உரிமைகளை மீட்கப் பாடுபடுவார்கள் என்றார்.

No comments