பிரான்சில் சிறப்படைந்த தமிழ்க்கலைப் பட்டமளிப்பு நிகழ்வு!

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் நேரடி நெறிப்படுத்தலில் இருக்கும் இன்னியம் அணி நடனத்துடன் பட்டமளிப்பு பெறும் மாணவர்கள், மதிப்பளிப்பு பெறும் ஆசிரியர்கள், மற்றும் பிரதம விருந்தினர், ஏனைய விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. மங்கல விளக்கினை முதன்மை சிறப்பு விருந்தினர் கலாபூசணம் திருவாட்டி யோகானந்தம் திரிபுரசுந்தரி அவர்களும், அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத் தலைவர் திருமிகு செகசோதி அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு.மகேஸ் அவர்களும், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமாரன் கார்கோணேஸ் முதல்வர், மற்றும் குசன்வில் மாநகர முதல்வர் மற்றும் மாநகர முக்கியஸ்தர்களும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. மாநகர முதல்வர்கள் மற்றும் பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர், மற்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக பிரான்சில் மிழ் இணையவழிப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்புப் பொறுப்பாளர் முனைவர் திரு.தனராஜ் அவர்களும், கலைப்பொறுப்பாளர் காணிக்கைநாதன், தேர்வுப்பொறுப்பாளர் திரு.அகிலன், பொருளாளர் திரு. மூர்த்தி ஆகியோரால் வரவேற்பளிக்கப்பட்டனர்.
வரவேற்புரையைத் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமாரன் அவர்கள் ஆற்றியிருந்தார். செவரோன் தமிழ்ச்சோலை மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. தலைமை உரையினை அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத் தலைவர் திருமிகு. ஆறுமுகம் செகசோதி அவர்கள் வழங்கி நிகழ்வின் முதன்மை விருந்தினர் கலாபூசணம் திருவாட்டி திரிபுரசுந்தரி யோகானந்தம் அவர்களை மதிப்பளிப்பும் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினர் கலாபூசணம் திருவாட்டி திரிபுரசுந்தரி யோகானந்தம் அவர்களின் தந்தையார் சங்கீதமேதை வி.எம் .குமாரசாமி அவர்கள் 1935இல் வட இலங்கை சங்கீத சபையை ஆரம்பித்துவைத்தவர். இவர் பரதநாட்டியத்தை பத்மசிறி வழுவூர் இராமையா பிள்ளையிடம் முறைப்படி கற்றதோடு அவர்மூலம் யாழ்ப்பாணத்தின் மாணவியாக யாழ். மண்ணிலேயே முதன்முதலாக தனது அரங்கேற்றம் கண்டவர். அன்று தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் பல நூறு மாணவர்களை உருவாக்கி அரங்கேற்றம் செய்தவர். தனது வாரிசுகளாக யாதவன் என்ற கர்நாடக சங்கீதப் பாடகரையும், 1992 இல் கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் பல இசை, நடனக் கலைஞர்கள் மத்தியல் தனது கலைவாரிசாக தன்னுடைய மகளுக்கு நட்டுவாங்கம் செய்து தன்னுடைய மகனை பாடவைத்து புகழ் சேர்த்தவர். இன்றும் பரதத்தில் பல மாணவர்கள் உருவாவதற்கு தன்னுடைய உழைப்பை எட்டு தசாப்தங்களை எட்டிய போதும் இத்தனை வயதிலும் தளராது வழங்கிவருபவராகும்.
நிகழ்வில் மதிப்பளிப்பு சிறப்பு விழாமலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் வெளியிட்டுவைக்க முதன்மை விருந்தினர் கலாபூசணம் திரிபுரசுந்தரி அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளரும் பெற்றுக்கொண்டனர்.
இசைவேளையை சோதியா கலைக்கல்லூரி மாணவர்கள் வழங்கியிருந்தனர்.
தொடர்ந்து உரையினை தமிழ்ச்சோலை தலைமைப்பணியகக் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திருமிகு காணிக்கைநாதன் அவர்களும், வாழ்த்துரையை முதன்மை விருந்தினர் கலாபூசணம் திருவாட்டி திரிபுரசுந்தரி யோகானந்தம் அவர்கள் வழங்கினார்கள். அவர் தனது உரையில் எமது கலைகளும் பண்பாடுகளும் பேணிப்பாதுகாத்து வருவதையிட்டு தான் பெரும் சந்தோசம் அடைவதாகவும். ஆதில் முன்னனி நாடாகப் பிரான்சு இருந்து வருவதும் அதை முன்னெடுப்பவர்களை தான் மதிப்பளிக்கக் கிடைத்த பெருமை தனக்கு கிடைத்த பெரும் பேறாகவும் கூறியிருந்தார்.
தொடர்ந்து மதிப்பளிப்பு நடைபெற்றது. பத்தாண்டு கலைப்பணியாற்றிய கலையாசிரியர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கான மதிப்பளித்தலை முதன்மை விருந்தினரான கலாபூச ண ம் திருவாட்டி திரிபுரசுந்தரி யோகானந்தம் அவர்கள் செய்திருந்தார். தொடர்ந்து பத்தாண்டு, இருபது ஆண்டு, இருபத்தி ஐந்து ஆண்டு கலைப்பணியாற்றிய கலையாசிரியர்கள் அனைவரும் முதன்மை விருந்தினரால் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.
சிறப்பு உரையை அனைத்துலக தமிழ்க்கலை நிறுவக தேர்வுப் பொறுப்பாளர் திருமிகு சங்கர் அவர்கள் ஆற்றியிருந்தார். எம் புகழுக்கும் வலிமைக்கும், உயர்வுக்கும் வழிகோலிய மாவீரர்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு கேணல் பரிதி அவர்களை நினைவில் நிறுத்தி உரையாற்றியிருந்தார். தேசியத் தலைவரின் கலைரீதியான உயர்ந்த இன, பண்பாட்டு, கலாசாரத்தின் தூரநோக்கத்தைக் கவனத்திற் கொண்டு அதற்கு வடிவம் கொடுக்கப்பட்டதும் அதற்கு பேருதவியாக இருந்த மறைந்துபோன பேராசிரியர்களுக்கும் கல்விமான்களையும் நினைவுகொள்வதுடன் அவர்கள் இட்ட பணியைத் தற்பொழுது எமது குழந்தைகளுக்கு பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களைப் பாராட்டியதோடு அவர்களின் பணி போற்றுதலுக்குரியது என்றும் அனைத்துலக தமிழ்கலை நிறுவகம் ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களை எட்டுகின்றவேளை இந் நிறுவனத்தோடு கைகோர்த்து இன்று வரை பணியாற்றி வரும் கலை ஆசிரியர்களையும், அவர்களின் சேவைக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களை நன்றியுடன் மதிப்பளித்தலை செய்வதையிட்டு அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகம் பேருவகையடைகின்றது என்றும் சமச்சீரான நீரோட்டத்தில் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்திலும் சில ஆசிரியர்கள் சற்று திசைமாறி மாற்றுத்திசையாக பயணிக்கும் காரணத்தால் இந்த நிகழ்வில் அவர்களுக்கான முக்கியத்துவத்தை அளிக்க முடியாததையிட்டு மனவருத்தம் அடைவதாகவும் அதேவேளை தமிழ்க் கலைக்காய் தமிழ்க்கலை நிறுவனத்துடன் அதன் வளர்ச்சிக்காகவும் ஆற்றிய சேவையை நன்றியுடன் நோக்குவதாகவும் குறிப்பிட்டார். அதேநேரம் தமிழ் த்தேசியத்திற்கு எதிராக எவர் பாதைமாறிப் பயணப்பட்டாலும் அவர்களை அனைத்துலக தமிழகக்லை நிறுவகம் ஒருநாளும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் வேற்று மொழி கலை பண்பாட்டு சூழமைவில் எமது குழந்தைகள் மொழியையும், கலையையும் ஆர்வத்துடன் கற்றுவருவது, இன்று பட்டயச்சான்றிதழை பெறுகின்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்து அடுத்துவரும் சந்ததிக்கு தமிழ்க்கலையை முன்னெடுக்க நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைத் தயார்படுத்தவேண்டும் என்றும், இவர்களுக்கு உறுதுணையாக இப்போது போல எப்போதும் பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவருடைய உரையில் கலைப்பாடமும் கலைத்தேர்வும் அதன் பெறுமதியும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பல ஆசிரியர்கள், பெற்றோர்களின் கேள்விகளுக்கு சரியான பதில்களாக அவரின் பேச்சு தொடர்ந்து இருந்தது.
இசைவேளையை சோதியாக் கலைக்கல்லூரி மாணவர்கள் வழங்கினர்.
தொடர்ந்து பரதக்கலைமாணி, இசைக்கலைமாணி மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். ஒவ்வொரு மாணவர்களுக்கும் பட்டயமும், சான்றிதழ்களும் வழங்கியதோடு, பெற்றோர்களையும் சேர்த்து பெருமையளித்தனர்.
நன்றியுரையை தமிழ்ச்சோலை தேர்வுப்பொறுப்பாளர் திரு.ச.அகிலன் அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து சிறப்பு மதிப்பளிப்பு ஐரோப்பிய மட்டத்தில் அதிகூடிய புள்ளிகள் கலைத்துறையில் பெற்ற மாணவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திருமிகு. து. மேத்தா அவர்களாலும், தமிழ்ச்சோலை தலைமைப்பணியகக் கலைப்பிரிவு பொறுப்பாளர், செயலாளர் திருமிகு. காணிக்கைநாதன் அவர்களாலும், தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திருமிகு. ஜெயக்குமாரன் அவர்களாலும் மதிப்பளிக்கப்பட்டனர். நிகழ்ச்சிகளை தமிழாலும், பிரெஞ்சு மொழியாலும் திரு.குருபரன், செல்வி சிந்து ஆகியோர் இனிதே தொகுத்து வழங்கினர். மண்டபம் நிறைந்த பெற்றோர்கள் ஆசிரியர்கள், உறவுகளுடன் பட்டயததைப் பெற்ற மாணவர்களின் உற்சாகத்தையும், சந்தோசத்தையும், பூரிப்பையும் காணக்கூடியதாக இருந்தது. பல பெற்றோர்கள் தங்கள் வாழ்வில் அனுபவிக்காததை தங்கள் குழந்தைகள் அனுபவிப்பதையிட்டு பெருமிதமும் சந்தோசமும் அடைவதாகவும், இவ்வாறான செயற்பாட்டை செய்கின்ற தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தையும், அது சார்ந்தவர்களையும் பாராட்டவேண்டும் என்றும் கூறியிருந்தார்கள்.
நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் பட்டய மதிப்பளிப்பு நிகழ்வு நிறைவுபெற்றது.
Post a Comment