விக்கி ஏன் 13 ஐத் தூக்கிப்பிடிக்கிறார்



தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அன்றே நிராகரித்து விட்டிருந்த நிலையில் குறித்த ஒப்பந்தத்தில் தமிழர் தரப்பிற்காக இந்தியா ஒப்பம் இட்டது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியிருப்பது கவலையளிப்பதாக குறிப்பிட்டிருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்.

முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கும்  தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபில் 13 ஆவது திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதே சட்ட மூலத்தை கொண்டு வர வேண்டும் என அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது எனவும் கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இலங்கை - இந்திய உடன்படிக்கையில் 13 ஆவது திருத்த சட்டம் தான் தீர்வு என குறிப்பிடப்படவில்லை. குறித்த ஒப்பந்தத்தை அன்றைய காலத்திலேயே ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு மட்டுமே ஆதரித்தது. மாறாக விடுதலைப்புலிகள் உட்பட ஏனைய அனைத்து தமிழ் தரப்பும் அதனை எதிர்த்தன.

இந்நிலையில் இலங்கை -இந்திய உடன்படிக்கையில் தமிழர் தரப்பின் சார்பில் இந்தியா கையொப்பம் இட்டது என நீதியரசர் விக்னேஸ்வரன் அண்மையில் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

அவரின் இந்த கருத்து அபத்தமான கருத்து. இந்த கருத்தை தெரிவித்தமைக்காக வெட்கித் தலை குனிகின்றோம்.

அன்றைய காலகட்டத்தில் அரச தரப்பு இந்தியாவிடம் ஓர் கோரிக்கையை வைத்தது. அதாவது ஆயுதம் ஏந்தி போராடுபவர்களை முடக்க வேண்டும், அவர்களின் தனி நாட்டுக் கோரிக்கையை இல்லாது செய்ய வேண்டும் என இந்தியாவிடம் இலங்கை அரசு கேட்டது. அதன் ஓர் நடவடிக்கையாகவே இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

எனினும் அந்த ஒப்பந்தத்தை ஓர் அமைப்பை தவிர ஏனையவர்கள் எதிர்த்தனர். குறித்த ஒப்பந்தம் ஊடாக 13 திருத்த சட்ட்டமூலம் உருவாக்கப்பட்டு ஒற்றையாட்சிக்குள் தீர்வு என கூறப்பட்டது. தமிழர்கள் சமஷடி தீர்வினையே கோரி வருகின்றனர்.

தமிழர்கள் இன்றுவரை தாயகம், தேசியம் சுய நிர்ணயம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்துக்காக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் முதல்வரின் கருத்து தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்திய ஏற்படுத்தியுள்ளது. அவரது சமீபகால செயற்பாடுகள் அவர் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் பாதையில் பயணிப்பதை போலவே அமைந்துள்ளது" - என்றார்.

No comments