குடுமிப்பிடி குழாயடி சண்டையில் ஆசிரிய சங்கங்கள்?


வடமாகாண கல்வித்துறையில் இலங்கை தமிழர் ஆசிரிய சங்கம் மற்றும் இலங்கை ஆசிரிய சங்கமென இரண்டு அமைப்புக்கள் செய்துவரும் அலப்பறைகளால் கல்வி துறை திண்டாடிவருகின்றது.

கல்விப்பணிப்பாளர் நியமனங்கள் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்த இளங்கோ எனும் தீவக கல்விப்பணிப்பாளரை ஒரு சிலரை தூண்டிவிட்டு போராட்டமொன்றை ஆளுநர் அலுவலகம் முன்பதாக நிறுத்தி  இலங்கை தமிழ் ஆசிரிய சங்கம் நடத்தியிருந்தது. இப்போராட்டத்திற்கு ஊடக ஆதரவு தரக்கோரி ஊடகவியலாளர்களை அதன் தலைவர் சரா புவனேஸ்வரன் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் கல்வியமைச்சில் உள்ள  சிக்கல்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் நேற்று (6) வெளியிட்ட ஊடக அறிக்கையிலே வெளிப்படுத்தியுள்ளார்.

அண்மையில் தீவ கல்வி வலயத்தின் பணிப்பாளருக்கு எதிராக, சில உத்தியோகத்தர்கள் வழங்கிய நிர்வாகரீதியான முறைப்பாட்டுக்கெதிராக வரிந்து கட்டிக்கொண்டு, வடக்கு மாகாண கல்வியமைச்சு, ஆளுனர் செயலக அதிகாரிகள் சிலர களமிறங்கியதன் பின்னணியில் 'சில பல காரணங்கள்' உள்ளதாக விமர்சனங்கள் வலுத்து வரும் நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில், வடக்கு கல்வித்துறை அதிகாரிகளின் பாரபட்சமான நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்-

யாழ்ப்பாணம் தீவக கல்வி வலயத்தில் நிலவுவதாகக் கூறப்படும் நிர்வாக முரண்பாடுகள் தொடர்பாக வடமாகாண கல்வியமைச்சு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் – குறித்த ஒருவரை வேண்டுமென்றே இலக்கு வைத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடாக உள்ளதோ என்னும் சந்தேகம் கல்வியியலாளர்கள் மட்டத்தில் எழுந்துள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

நிர்வாக முரண்பாடுகள் என்பது அவ்வப்போது சகல மட்டங்களிலும் எழுந்ததுண்டு. அதனை வடமாகாணக் கல்வியமைச்சு மிகப்பொறுப்புடனும் பாரபட்சமின்றியும் கையாள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

முறைமைசார் விசாரணைகளுக்கு நாம் எதிரானவர்களல்ல. ஆனால் – ஒருவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விசாரணைகள் திட்டமிட்டு அமையக்கூடாது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் தனது கீழ் பணியாற்றும் பெண் உத்தியோகத்தருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றபோது – குறித்த வலய ஊழியர்கள் அனைவருமே பணியை புறக்கணித்து குரல் எழுப்பியிருந்தனர்.

ஆயினும் பாதிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தருக்கே வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு இடமாற்றம் வழங்கியிருந்தனர். குறித்த வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

2016 ஆம் ஆண்டு வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றில் அதிபரின் நிதி முறைகேடு மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து அந்தப் பாடசாலை ஆசிரியர்கள் கையொப்பமிட்டு வடமாகாண கல்வியமைச்சுக்கு முறையிட்டிருந்தனர்.
பின்னர் விசாரணைக்குழு அமைத்து விசாரித்தபோது முறைகேடுகள் அம்பலமாயின. ஆயினும் முறைப்பாடு செய்த ஆசிரியர்களையே இடமாற்றியிருந்தனர்.

இதனைவிட – தற்போது இதே தீவக கல்வி வலயத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபருக்கெதிராக – அப்பாடசாலையின் ஆசிரியர்கள் கையொப்பமிட்டு கௌரவ ஆளுநருக்கு முகவரியிட்டு 11.03.2019 திகதியிட்டு அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தின் பிற்குறிப்பில் – வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு 16.01.2019 நேரில் சென்று தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். கடிதத்தின் பிரதி வடமாகாண கல்வி பணிப்பாளருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. இன்றுவரை இவ்விடயம் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

இத்தகைய ஆசிரியர்களின் பாரிய முரண்பாடுகளுக்கும் முறைகேடுகளுக்கு எதிராகவும் அக்கறை காட்டாத வடமாகாண கல்வியமைச்சும் வடமாகாண கல்வி திணைக்களமும் தீவக கல்வி வலயத்தின் நிர்வாக சிக்கலொன்றை தீர்ப்பது என்ற பெயரில் கூட்டுச் சதியில் இறங்க முயல்வது ஆரோக்கியமான கல்வி தலைமுறையை உருவாக்கும் செயற்பாட்டுக்கு உகந்ததல்ல. இதன்மூலம் தவறான முன்னுதாரணங்களையும் ஏனைய கல்வி வலயங்களை உள்ளடக்கிய வடமாகாணத்துக்கு கல்வியமைச்சு ஏற்படுத்தாது இப்பிரச்சினையை மிக அவதானமாகக் கையாளவேண்டும்.

தீவக வலயக் கல்விப் பணிப்பாளரை இடம்மாற்றி விசாரணையை செய்வதே பொருத்தமானது என வடமாகாண கல்விப்பணிப்பாளர் தெரிவித்ததாக ஊடகமொன்று செய்திவெளியிட்டிருந்தது.

அப்படியாயின்- முன்னாள் துணுக்காய் வலய கல்விப்பணிப்பாளருக்கெதிராக -ஊழல், மோசடி, முறைகேடுகள் செய்துள்ளதாக ஆதாரங்களை வடமாகாண கல்வியமைச்சுக்கு வழங்கியும் -துணுக்காய் வலய ஆசிரியர்கள் பலமுறை ஆர்ப்பாட்டம் செய்தும் அவரை மாகாணத்தில் இணைத்து விசாரிக்க மாகாண கல்விப்பணிப்பாளருக்கு அப்போது ஏன் மனமில்லாமல் இருந்தது? ஆயினும் ஆசிரியர்களின் தொடர் போராட்டங்களாலேயே விசாரணைகளில் முறைகேடுகள் அம்பலமாகியிருந்தன.

ஊழல், நிதிமோசடிகள், முறைகேடுகளை விட – நிர்வாக முரண்பாட்டை மோசமானதாக வடமாகாண கல்விப்பணிப்பாளர் கருதுவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

அண்மையில் யாழ் வலய பாடசாலையொன்றின் முறைகேடுகள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் முறையிட்டிருந்தும் – அவர்களை ஏன் இடமாற்றி விசாரிக்கவில்லை? என்ற வினாவும் எழுகின்றது.

தனிப்பட்ட ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சியைக்காட்டும் நடவடிக்கையின் மூலம் வடமாகாணத்தின் கல்வி கட்டமைப்பை நாசமாக்க அனுமதிக்கவேண்டாம் என கௌரவ ஆளுநர் உட்பட சகல தரப்பினரையும் கேட்டு நிற்கின்றோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments