கைகொடுத்தார் வடக்கு ஆளுநர்!


யாழ்ப்பாணம் நகர மத்திய பேருந்து நிலையத்தைச் சூழவுள்ள 68 வியாபார நிலையங்களை இந்த மாதத்துடன் அகற்றுமாறு யாழ்ப்பாண மாநகர சபை விடுத்த கட்டளையைப் புறந்தள்ளிவிட்டு பேருந்து நிலைய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பமாகும்வரை வியாபார நடவடிக்கைகளைத் தொடருமாறு வடக்கு மாகாண ஆளுநர் அனுமதியளித்துள்ளார்.

இந்த தகவலை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தைச் சூழ வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவோர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பேருந்து நிலைய அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவுள்ளதால் அதனைச் சூழவுள்ள தற்காலிக கடைகளை வரும் 30ஆம் திகதியுடன் அகற்றுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபையால் வியாபாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வியாபாரிகள் சார்பில் ஒரு குழுவினர் இன்று வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தனர். வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நிகழ்வு ஒன்றுக்காக சென்றிருந்ததால் அவரது செயலாளர் வியாபாரிகளைச் சந்தித்தார்.

இதன் போது தமது வாழ்வாதாரமான யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலுள்ள தற்காலிக கடைகளை அகற்ற யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும் சபையும் பணித்துள்ளதாகவும் அதனைத் தடுத்து நிறுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினர்.

அதுதொடர்பில் ஆளுநருடன் உரையாடிய செயலாளர் வியாபாரிகளுக்கு ஆளுநரின் பதிலைக் கூறினார்.


“யாழ்பாணம் பேருந்து நிலைய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பமாகும் வரை அங்கு வியாபார நடவடிக்கைகளைத் தொடர முடியும். அத்துடன், அங்கிருந்து வியாபாரிகளை அப்புறப்படுத்துவதாக இருந்தால் மாநகர சபையால் மாற்று இடம் வழங்கப்படவேண்டும். எனவே மாநகர சபையின் அறிவித்தலைப் புறந்தள்ளிவிட்டு வியாபார நடவடிக்கைகளைத் தொடர முடியும்” என்று ஆளுநரின் சார்பில் வியாபாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

No comments