வீதிப் பிணக்கு - பொலிஸார் மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக முறைப்பாடு


கொழும்புத்துறை மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வீதி ஒன்று  தானியார் சிலரது கோரிக்கையின் அடிப்படையில் யாழ் மாநகரசபையினால் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள நிலையில் அவ் விவகாரத்தோடு தொடர்புபட்டு காணி உரிமையாளர் மற்றும் கிராமச் சங்க உறுப்பினர்களை வாக்குமூலம் பெறுவதற்கு என அழைத்த யாழ்ப்பாணம் பொலிஸார்  சிங்களத்தில் எழுதிய வாக்குமூலத்தில் தம்மை மிரட்டி கைஒப்பம் வாங்கியதாகவும் இன்று (03) இரவுக்குள் குறித்த வீதியை மூடாது விட்டால் கைது செய்யப்படுவீர்கள் என அச்சுறுத்தியதாகவும் தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களின் பாவனைக்காக 2015 ஆம் ஆண்டு தனது காணியின் ஒரு பகுதியை சட்டரீதியான முறையில் உப பிரிகையிடல் செய்து பொதுமக்களுக்கு வீதிப் பாவனைக்கு வழங்கிய காணி உரிமையாளர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் ஆகியோரே தம்மை பொலிசார் மிரட்டி கைஒப்பங்கள் வாங்கியதாகவும் கைது செய்வோம் என அச்சுறுத்தியதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் குறிப்பிட்ட அவர்கள்,
குறித்த காணிப் பிரச்சனை தொடர்பில் எதிராளிகளால் செய்யப்பட்ட பொலிஸ் முறைப்பாட்டிற்காக வாக்குமூலம் பெற வருமாறு தாம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அங்கு தமது கருத்துக்களைக் கேட்டுவிட்டு சிங்களத்தில் எழுதிவிட்டு அதில் கைஒப்பமிடுமாறு தாம் அச்சுறுத்தப்பட்டு கைஒப்பம் பெறப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து சட்டத்தரணி மணிவண்ணனை  தாம் அணுகிய நிலையில் முதற்கட்ட நடவடிக்கையாக தமது பாதுகாப்புக் கருதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டத்தரணிகளுடன் ஆராய்ந்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இச் சம்பவம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த யாழ் மாநகர பிரதி முதல்வரும் குறித்த கொழும்புத்துறை வட்டார உறுப்பினருமான துரைராசா ஈசன் குறித்த விடயத்தை இருதரப்புடனும் பேசி யாழ் மாநகரசபையே தீர்த்துவைக்கும் என யாழ் பொலிசாருக்கு தன்னால் வழங்கிய கடிதத்தை யாழ்ப்பாணம் பொலிஸார் ஏற்க மறுத்துவிட்டதாகவும் குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாநகரசபையின் சித்திரை ஒன்பதாம் திகதிய அமர்வில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சம்பவத்தின் பின்னணி

கொழும்புத்துறை 3 ஆம் குறுக்குத் தெருவில் பாடசாலை மாணவர்கள் கடற்றொழிலாளர்கள் என சுமார் 350 இற்கும் மேற்பட்ட குடும்பங்களால் சுமார் நான்கு வருடங்களாக பயன்படுத்தப்பட்டுவந்த வீதியின் தெற்குப் பக்கத்தினை சிலரது முறைப்பாட்டின் பிரகாரம் காரணம் எதுவும் குறிப்பிடாமல் மூட உத்தரவிடுமாறு கோரி யாழ் மாநகரசபைக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் கடந்த 07.03.2019 அன்று அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் யாழ் மாநகரசபையினால் குறித்த வீதியின் வடக்கு பகுதியினை மூடுமாறு கடந்த 19.03.2019 அன்று காணி உரிமையாளருக்கு கடிதம் மூலம் அறிவித்தல் விடுத்திருந்தது.

எனினும் யாழ் மாநகரசபையின் ஆணையாளரினால் வீதியை மூடுமாறு உத்தரவிடப்பட்ட குறித்த எழுத்து மூல உத்தரவு அனுப்பப்படுவதற்கு முன்பாக சிலரால் வீதியை மூடி கொங்கிறீற் தூண்கள் இடப்பட்டுள்ளது. எனினும் அதனை பொது மக்கள் அகற்றி வீதியை பயன்படுத்திய நிலையில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வீதி அடைக்கப்பட்டதாகவும் அதன் பின்பே வீதியை மூடும் உத்தரவு அனுப்பப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

குறித்த வீதியானது,

கொழும்புத்துறையில் 2015 ஆம் ஆண்டு தனியார் காணி உரிமையாளர்கள் சிலரின் ஒப்புதலுடன் குறித்த காணி ஒன்றினை வீதி அமைக்க காணி உரிமையாளர் ஒருவர் இடம் வழங்கியதன் அடிப்படையில் தொடர்பற்றிருந்த நிலையிலிருந்த இரு வீதிகள் காணி உப பிரிவிடல் ஊடாக காணி உரிமையாளரின் சம்மத்துடன் 2015 - 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் பாவனைக்காக நகர அபிவிருத்திசபையினால்  (கோவை இலக்கம் J/DC/PPC/JMC/422/2015) யாழ்ப்பணாம் மாநகரசபையின் அனுமதியுடன் (வரைபட இலக்கம் 2789/1) இணைக்கப்பட்டு ஒரு வீதியாக்கப்பட்டது.



குறித்த காணி உப பிரிவிடுகைக்கான அங்கீகாரத்தினை (கோவை இலக்கம் SD240/503/6/112/2015) பொ.வாகீசன் வழங்கியிருந்தா்.

அதன் பின்னர் உப பிரிவிடுகை செய்யப்பட்ட ஒழுங்கை வரை யாழ்ப்பாணம் மாநகரசபையினால் தாரிடப்பட்டு வீதியின் ஒரு பகுதி தார் வீதியாகவும் மற்றய பகுதி மணல் வீதியாகவும் பயன்படுத்தப்பட்டுவந்தது.

இந்நிலையில் குறித்த இணைக்கப்பட்ட இரு வீதிகளின் தெற்குப் பக்க வீதியின் எதிர்த்திசையில் வசிப்பவர்கள் எனக் கூறப்படும் ஒரு சிலரினால் இரு மாதங்களுக்கு முன் குறித்த வீதிக்கு குறுக்காக கொங்கிறீற் தூண்கள் இடப்பட்டு வீதி மூடப்பட்டது. எனினும் அப்பகுதி மக்கள் அதனை அகற்றிவிட்டு வீதியைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந் நிலையிலேயே யாழ் மாநகர ஆணையாளரினால் 19.03.2019 அன்று திகதியிடப்பட்டு 2789/1 இலக்க நில அளவை வரைபடத்திற்கு வழங்கப்பட்ட காண உப பிரிவிடல் அனுமதியை இரத்துச் செய்வதாகவும் அவ்வரைபடத்தின் வடக்குப் பக்கத்தில் காண்பிக்கப்பட்ட ஒழுங்கையானது மூடப்பட வேண்டும் எனவும் காணியின் உரிமையாளருக்கு கடிதம் மூலம் உத்தரவிடப்பட்டிருந்தது.

No comments