கிளிநொச்சி தேவாலயமும் இலக்கு வைக்கப்பட்டது


உயிர்த்த ஞாயிறன்று கிளிநொச்சி தேவாலயத்திலும் தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது என தகவல் வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி புனித திரேசா தேவாலய பங்குத் தந்தை அருட்பணி ஏ.ஜே.ஜேசுதாஸ் அடிகளார் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அசாதாரண சூழலில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சர்வமத ஒன்றுகூடல் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இந்த ஒன்றுகூடல் இன்று காலை 9.30 மணியளவில் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஒன்றுகூடலில் சர்வ மதத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் கலந்துகொண்டார்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே கிளிநொச்சி புனித திரேசா தேவாலயத்தின் பங்குத் தந்தை அருட்பணி ஏ.ஜே.ஜேசுதாஸ் அடிகளார் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியிலும் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற இருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் எனப் புலனாய்வாளர்களினால் இனங்காணப்பட்டு தேடப்படுவோர் குறித்த விபரங்களை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு பெண் எமது தேவாலத்துக்கு கடந்த 21ஆம் திகதி காலை 5.45 மணியளவில் வந்திருந்தார்.

குறித்த தினம் அதிகாலை வழமைபோன்று தேவாலயத்தின் கதவைத் திறந்து நான் உள்ளே சென்றபோது குறித்த பெண் தேவாலயத்தின் மத்தியில் நின்றிருந்தார். அப்போதைய கூழ்நிலையில் நான் அவரைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கவில்லை. இவ்வாறான நிலையில், எமது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments