உங்கள் கைகளில் இருக்கும் வாக்கும் ஒரு ஆயுதம்தான்; மருத்துவர் அனிதா!

என் பெயர் அனிதா. நான் சில காலம் உங்களுடன் வாழ்ந்திருந்தேன்.  உங்களில் பெரும்பான்மையோர் என்னை  டாக்டர் அனிதா என்று அடைமொழியிட்டு அழைக்கின்றீர்கள். அது உங்கள்  மன சாந்திக்கானதாக இருக்கலாம். உங்களை ஆற்றுப்படுத்திக் கொள்வதற்கான ஒரு போலியான பட்டமாக அது இருக்கலாம். நிறைவேறாமல் போன ஒரு கனவின் மீதியை கற்பனை கருத்தியலாக என் மீது சுமத்துவதாக இருக்கலாம். எதுவென்றாலும் நான் இறந்து விட்டேன். மார்ச் 5-ஆம் தேதி என் பிறந்த நாளில் பலரும் வாழ்த்து தெரிவித்தீர்கள். இதோ இன்னும் சில நாட்களில் செப்டம்பர் 1-ஆம் தேதி வந்து விடும். நான் கொலை செய்யப்பட்ட நாள் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

 எனக்கு மரியாதை செலுத்த அல்லது உங்கள் அன்பை எனக்கு பரிசளிக்க  உங்களில் பலரும் விரும்புவீர்கள்.  இறந்து போனாலும் என் ஆன்மா இன்னும் இங்கேதான் உலவிக் கொண்டிருக்கிறது. நான் தற்கொலை செய்து கொள்ளவில்லை. என்னை அவர்கள் கொலை செய்து விட்டார்கள்.

பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்ற  நான் இப்போது ஏதேனும் ஒரு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணைவியாக படித்துக் கொண்டிருக்க வேண்டும்.  ஆனால், நீட் என்னும் தேர்வால் என்னால் மருத்துவர் ஆக முடியாமல் போனது. அப்போது அவர்கள் என்னை நோக்கி  கேட்ட கேள்வி “ஆனால் மருத்துவர் தான் ஆக வேண்டுமா? அதற்கும் குறைவாக வேறெதுவும் வேண்டாமா?” எனக் கேட்டார்கள்.

தேவாலயத்தில் வந்த ஓசையினூடே  நான் “நோயுற்றவனுக்கே மருத்துவம் தேவை “ என்ற ஒலியை கேட்டிருக்கிறேன். ஆமாம், அது உண்மையல்லவா?  என் சிறுவயது கதை ஒன்றை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.  அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.  2007 சுகவீனமுற்றிருந்த என் அம்மாவுக்கு போதுமான சிகிச்சை இல்லை. தரமான சிகிச்சை பெற்றுக் கொள்ளும் அளவுக்கு பண வசதியும் இல்லை. காற்று கூட கடைசியாக வந்து சேரும் அரியலூரின் ஒதுக்குப்புறமுள்ள எங்கள் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லை. அம்மா இறந்து போவதைத் தவிற வேறு எந்த வாய்ப்புகளும் இல்லை. மூட்டை தூக்கி என்னை படிக்க வைத்த அப்பாவும், அண்ணனும் என்னை டாக்டராக்கிப் பார்க்க ஆசைபப்ட்டதின் பின்னணி இதுதான். நோயுற்றவனுக்கு மருத்துவம் தேவை. அது அனைவருக்கும் கிடைக்கிறதா?
என் ஆன்மா இப்போது அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களாக அவர்கள் மீண்டும் மீண்டும் ஒரு பொய்யைச் சொல்கிறார்கள். வரும் காலங்களில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் வென்று மருத்துவக்கல்வியில் சேர்வார்களாம்.  இந்த செய்தியை நீங்கள் கவனித்தீர்களோ இல்லையோ, நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். என் ஆன்மா அங்கேயே தனித்து, தவித்து சுற்றிக் கொண்டிருக்கிறது.
தமிழக மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்வியில் சேர்வார்கள் என்றால் அது யார்? எத்தை பேர் எங்கு படித்தவர்கள் சேரப்போகிறார்கள்?
என் தாய் போதிய மருத்துவம்
 கிடைக்காமல் இறந்ததில் இருந்துதான் என் மருத்துவக் கனவு உருவாகிறது.  என் கனவு முதல் தலைமுறை கனவு. அது கருவிலேயே நசுக்கப்பட்டது. நான் கொலை செய்யப்பட்டேன். அவர்கள் கையில் உள்ள நீட் என்னும் கொலைக்கருவியோ சத்தமில்லாமல்  கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளி,  கிராமப்புற மாணவர்களை கொலை செய்து விட்டதை மறைத்து விட்டார்கள்.
மூன்று நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி என்று பிரதமர் மோடி சொன்னார். தமிழகத்தில் 22 மருத்துவக்கல்லூரிகள் இந்தியாவில் வேறெங்கும் இல்லாதவகையில் இருப்பதை அவர் மறைத்து விட்டு அந்த பொய்யைச் சொல்கிறார்.  ஆமாம். 22 மருத்துவக்கல்லூரிகள் அளவுக்கு தமிழகம் சாதித்தது யாரால்? அரசுப்பள்ளியில் படித்து கிராமப்புறங்களில் இருந்து வந்த என் போன்ற முதல் தலைமுறை மருத்துவர்களின் பங்கு அதில் இல்லையா?

பின்னர் ஏன் என்னையும் என்னைப் போல சிலரையும் இப்போது பலரையும் அவர்கள் கொன்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் வருகிறார்கள். உங்கள் கைகளிjல் இருக்கும் வாக்கும் ஒரு ஆயுதம்தான் . அவர்கள் மீண்டும் வந்தால் என்னைப் போல  ஆயிரமாயிரம் அனிதாக்கள் கொலை செய்யப்படக்கூடும். என் பெயர் அனிதா நான் சில காலம் உங்களுடன் வாழ்ந்தேன். இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இவர்களை மன்னித்து விடாதீர்கள்!

-அருள் எழிலன்-

No comments