தமிழர்களை ஏமாற்றுகிறார்களா தமிழ்த்தேசியவாதிகள்?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாடு என்ற தனியான நாடு இருந்தது என்பதைத் தமிழ் ஆவண இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. "தமிழகம்" என்று தமிழர் நாடு, அழகாக அழைக்கப்பட்டிருக்கிறது. 

தமிழர்களுக்கு லட்சக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நாடு மட்டுமல்லாமல் மேலும் பல லட்சக்கணக்கான சதுர கிலோ மீட்டர்வரை தென்கிழக்காசிய நாடுகளில் ஆட்சி அமைத்த வரலாறும் ஆவணங்களாக, சாட்சியங்களாக இருக்கின்றன.

தலைமுறை தலைமுறைகளாகத் தலைநிமிர்ந்த வாழ்க்கை, அறிவார்ந்த வாழ்க்கை, வீரம் செறிந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதற்கு தரவுகள் உலகெங்கிலும் கொட்டிக் கிடக்கின்றன.

குமரிக்கண்டத்தைக் கடல் கொள்வதற்கு முன் உலக அளவில் தமிழர்கள் வணிகம் செய்ததற்கான இலக்கிய, அகழ்வாராய்வு, தொல்லியல் சான்றுகள் ஏராளமான அளவில் தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கிடைக்கப் பெற்றுள்ளன.    

ஆங்கிலேயர்கள் இந்திய நிலப்பரப்பில் கால் ஊன்றுவதற்கு முன் தமிழர்களின் வேர்கள் இந்திய நிலப்பரப்பு முழுவதுமே பரவி ஊன்றிக்கிடந்ததற்கு தற்போதும் தரவுகள் உள்ளன என்கிறார் கடல்சார் தமிழியல் ஆய்வாளர் ஒரிசா பாலு. 

தமிழ் மொழிச் சொற்கள் உலகின் ஆயிரக்கணக்கான மொழிகளில் காணக்கிடைப்பதாகக் கூறும் ஆய்வறிஞர்கள் மதிவாணன், அரசேந்திரன் ஆகியோர் தமிழ் மொழியில் இருந்தே அம்மொழிகள் உருவாகியிருக்கக்கூடும் என்றும் கூறி அதற்கான வலுவான ஆய்வுத் தரவுகளை முன்வைக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உலக அளவில் கடலோடி வணிகம் செய்த தமிழர்கள் அக்கால கட்டங்கள் முடிந்து ஆயிரம் ஆண்டுகள் கழித்து பிற்காலத்தில் ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இலங்கை, ஜாவா, மொரிசியஸ், மலேசியா என பல்வேறு தீவு நாடுகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களாக கப்பல்கள் மூலம் கூட்டம் கூட்டமாக கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் கடுமையான உழைப்பாளிகள், விவசாயம் தெரிந்தவர்கள். எடுத்துக்காட்டாக ஒரு கப்பலில் 500 பேர் ஏற்றிச் செல்லமுடியும் என்றால், கப்பலுக்குச் செல்லும் வழியில்  வரிசையாக நிற்க வைக்கப்பட்டு 500 பேர் ஏறியவுடன் அத்தோடு அந்தக் கப்பல் கதவுகள் மூடப்பட்டு அவர்கள் ஜாவா தீவுக்கும், அடுத்த 500 பேர் மொரிசியசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுவிடுவார்கள்.

இதில் தந்தையை பிரிந்த குழந்தைகள், கணவனைப் பிரிந்த மனைவிகள், உற்றார்  உறவினரைப் பிரிந்தவர்கள் என வெவ்வேறு தீவு நாடுகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டனர்.

அங்கே காடுகளாகக் கிடந்த அந்தத் தீவு நாடுகளை வேளாண்மை செய்து சோலைகளாக்கினார்கள் கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தத் தமிழர்கள். 

ஆங்கிலேயே ஆட்சி முடிவுற்று விடுதலை பெற்றபின் மொழி வாரி மாநிலங்களாக இந்தியா 1956 ம் ஆண்டு பிரிக்கப்பட்டது.

அப்போதும் சரி அதற்கு முன்னரும் ஆரியத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் தமிழர்கள்தான் என்பதற்கு பக்தி இலக்கியங்களே மாபெரும் சான்றுகள்.

தமிழர்கள் ஆரியத்தை மட்டுமல்ல, சமணம், பவுத்தம் என பல தாக்குதல்களை எதிர்க் கொண்டவர்கள். பல ஆயிரமாண்டுகளாக எத்தனையோ தாக்குதல் தமிழுக்கு எதிராக நடைபெற்றாலும் அத்தனையும் கடந்து இன்னமும் உயிர்ப்போடு இருக்கும் மொழி தமிழ், இருப்பவர்கள் தமிழர்கள்.

விடுதலை பெற்றபோது அரசுத்துறை, நீதித்துறை, சினிமாத்துறை, பத்திரிகைத்துறை, எனப் பல துறைகளிலும் கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் அதிலும் மிக முக்கியப் பதவிகளில் இருந்தவர்கள் பார்ப்பனர்கள். அவர்களுக்கு உயர் கல்வி எளிதில் கிடைத்தது.

தமிழர்களுக்கு கல்வி உரிமை பெரும்பாலும் மறுக்கப்பட்டதுடன், முடிந்தவரை ஊக்கம் பெறாமல் தடுக்கப்பட்டார்கள். அதிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முழுமையாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்டதுடன் அவர்கள் கல்வி கற்பதற்கு வாய்ப்பே இல்லாதவாறு உடல் உழைப்பு சார்ந்த பணிகளுக்குள் பரம்பரை பரம்பரையாக மூழ்கிக் கிடத்தப்பட்டார்கள்.

தமிழர்களின் உரிமைகள் என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்குமான உரிமைகள். இந்தியத் தேசியம் தங்களை ஒட்டுமொத்தமாக நசுக்கி விடும், தங்கள் தனித்தன்மையைச் சிதைத்துவிடும் என்று சிந்தித்த தமிழர்களே, தமிழர் உரிமைக்குத் தனி இயக்கம் கண்டனர்.

தமிழர்கள் தொடர்ந்து சாதி ஒழிப்பை எப்போதும் வலியுறுத்தி வருபவர்கள். ஒருபடி மேலே சென்ற இராமலிங்க வள்ளல் பெருமான், சாதி, மதமற்ற சமரச சுத்த சன்மார்க்கம் என்ற தனி மார்க்கத்தையே உருவாக்கி, உருவ வழிபாடு வேண்டாம் ஒளி வழிபாடு போதும், எல்லா மதத்தை, சாதிக்குழுக்களை, மொழியைச் சார்ந்தவர்களும் இந்த மார்க்கத்தைப் பின்பற்றினால் சாதி, மதமற்ற உலகு உருவாகும் என்று வலியுறுத்தினார்.


இவரைப்போலவே பல பெரும் தமிழ் ஞானிகள் சாதி, மதமற்ற உலகைப்படைக்கவே வாழ்நாளெல்லாம் அரும்பாடுபட்டனர்.

ஆனால்,  ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்த தமிழர்களின் அறிவு, ஞானம், தொன்மம் ஆகிய அனைத்தும் சமஸ்கிருத மொழிக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு அதன் மூலமான தமிழ் ஓலைச் சுவடிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, அனைத்து ஞானமுமே சமஸ்கிருதத்தில் இருந்து, வடநாட்டில் இருந்து வந்ததே என்று அனைவரையும் நம்ப வைக்கும் மிகப்பெரிய சூழ்ச்சித் தாக்குதலை தமிழ் சந்திக்க நேரிட்டது.

இந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர்கள் ஆரியர்கள் எனும் பார்ப்பனர்களே.  சுமார் ஆயிரம் ஆண்டுகள் நடத்தப்பட்ட இத்தொடர்  தாக்குதலில் இருந்து தமிழை மீளச் செய்தவர் இராமலிங்க வள்ளல் பெருமானார்.

அதாவது தமிழ்ச் சித்தர்கள் காலத்திற்குப் பிறகு வள்ளலார் காலம் வரை சுமார் ஆயிரம் ஆண்டுகள் தமிழின் பின்னடைவுக்காலம். பெருமளவில் தமிழ் கடுமையான சீரழிவுக்கு உள்ளான காலம்.

வள்ளல்பெருமானாரின் வருகைக்குப் பிறகு தமிழ் தலைநிமிரத் தொடங்கியது. ஆரியத்தையும், ஆங்கில ஏகாதிபத்தியத்தையும் கடுமையாகச் சாடினார் வள்ளல் பெருமானார்.

உருவவழிபாடு மறுப்பு, சாதி, மத மறுப்பு என்பதன் அடிப்படையான பெரியாரின் சமூக நீதி என்ற கருத்தே வள்ளல் பெருமானாரின் கருத்துக்கள் அடிப்படையிலானவைதான். 

தமிழின், தமிழர்களின் தலை நிமிர்வு வள்ளல் பெருமான் காலத்தில் இருந்து புதிய ஆற்றல் பெற்றது.

ஆங்கிலேயர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டபின் உருவான இந்திய தேசியம் என்பது ஆரியத்தின் தேசமாகவே இருந்தது, இன்றும் உள்ளது.

ஆங்கிலேயே ஆட்சிக்காலத்திலேயே  விடுதலைப் போராட்டங்களில் தமிழர் பங்களிப்பே முதன்மையானது. சிப்பாய்க்கலகம் இங்கேதான் உருவானது. விடுதலைப்போரின் மிகப்பெரிய எழுச்சி தமிழ் மண்ணில் இருந்தே உருவானது. வேலுநாச்சியார் இங்கேதான் உருவானார்.அன்று முதல் இன்றுவரை தமிழ் மண்ணின் மைந்தர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுவதில் ஒருபோதும் சளைத்ததில்லை.  அடிமைகளாக வாழ ஒருபோதும் உடன்பட்டதில்லை. 

ஆரியத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எதிர்த்து வந்த தமிழர்கள் தமிழ்த்தேசிய அரசியலைக் கைகளில் எடுக்கத் தொடங்கியது ஆரியர்களுக்கும், இந்தியத் தேசியவாதிகளுக்கும் கடும் கோபத்தை உண்டாக்கியது.

குறிப்பாக அண்ணா தனிநாடு கோரிக்கையை முன்வைத்தபோது ஒட்டுமொத்தமாக அதிர்ந்து போன இந்திய தேசிய அரசு திமுகவுக்குத் தடை விதிக்கும் அளவுக்குச் சென்றது.


 பின்னர் அக்கோரிக்கை கைவிடப்பட்டு, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கை பின்பற்றப்பட்டது.

ஆட்சி அதிகாரத்தை ஆரியர்களிடமிருந்து கைப்பற்றுவது ஒன்றே குறிக்கோளாகச் செயல்பட்ட அண்ணா எண்ணியபடியே ஆட்சியைக் கைப்பற்றினார். அதன்பிறகு கருணாநிதி தலைமையிலும், பிறகு எம்ஜிஆர், ஜெயலலிதா என மாறி மாறி திமுகவும், அதிமுகவும் இங்கே ஆட்சி ஆண்டு வருகிறார்கள்.

பொதுவாகவே,  திராவிடம் , இந்திய தேசியம் இரண்டின் கொள்கைகளிலும் பெரிய மாற்றம் இல்லை. இரண்டுமே பல்வேறு மொழி, இனங்கள் ஒன்றுபட்டு ஒரே நாடாக இருக்கவேண்டும் என்பது, ஆனால் தமிழ்த்தேசியம் என்பது தமிழர்கள் அவர்களுக்கான உரிமைகளைப் பெற்ற தேசமாக இருக்க வேண்டும் என்பது. மொழியும், மண்ணும் அடிப்படை. 

தமிழ் முற்றாக அழிக்கப்படுவதையும், தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதையும் கண்ட தமிழ்த்தேசியவாதிகள் தொடர்ந்து இந்திய தேசியத்தை எதிர்த்தே வந்துள்ளனர்.

அவ்வாறு போராடிய தமிழ்த்தேசியவாதிகள் ஒவ்வொருவரும் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட வரலாறே தமிழ்நாட்டில் உள்ளது.

தமிழ்த்தேசிய வரலாற்றில் தவிர்க்கப்படமுடியாத புலவர் கலியபெருமாள் முதலில் பெரியாரியத்தால் ஈர்க்கப்பட்டு அதன்பிறகு பொதுவுடமைக் கருத்தால் ஈர்க்கப்பட்டு நக்சல்பாரிகள் பாதையையும் தொட்டுப்பார்த்தவர் என்றாலும் இறுதியாக தமிழ்த் தேசியம் மட்டுமே இனவிடுதலைக்கும், தமிழர்களின் தலை நிமிர்வுக்கு தீர்வு என்று ஏற்றுத் தமிழ்த் தேசியத்தை நோக்கி தன் இறுதிக் காலங்களில் பயணித்தார்.


                                                        புலவர் கலியபெருமாள்

அவரது பின்பற்றாளர்  பொன்பரப்பி தமிழரசன் பொதுவுடமை கலந்த தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்தார். ஆயுதம் ஏந்தவும் தயார் என்னும் நிலைவரை சென்றவர் தமிழரசன். அவர் உளவுத்துறை சூழ்ச்சியால் பொன்பரப்பியில் பொதுமக்களை வைத்தே கொல்லப்பட்டார். (தாங்கள் கல்லால் அடிப்பது தமிழரசனைத்தான் என்று பொதுமக்களுக்குத் தெரியாது)


ஈழப்போர் ஆதரவுக்காக இந்திய தேசியத்தை கடுமையாக எதிர்த்தனர் தமிழர்கள். பெருஞ்சித்திரனாரின் மகன் பொழிலன் உள்பட பலர் இதற்காக சிறை சென்றனர். 

தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்து அதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களில் பெரும்பாலானாவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டும், தமிழ்த்தீவிரவாதிகள் எனவும் முத்திரை குத்தப்பட்டனர். பல ஆண்டுகள் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர். 
காரணம் இதில் பலர் மிதவாதத்தைவிட தீவிரவாதத்தைக் கைகளில் எடுத்தார்கள்.

பல வேளைகளில் மிதவாதம் பேசுவோர் மீதும் நடவடிக்கைகள் பாய்ந்தன. இப்போது தமிழ்த்தேசிய வாதத்தை முன்வைத்து மேடைகளில் பேசிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்கூட பல முறை கைது செய்யப்பட்டார்.

தமிழ்த் தேசியவாதிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுத்ததில் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளும் சளைத்தவை அல்ல.

காரணம், இந்திய தேசிய அரசின் கட்டுப்பாடு அத்தகையது. தமிழ்த்தேசியத்தை கடுமையாக வெறுக்கும் இந்திய தேசிய அரசு (பாஜக, காங்கிரஸ் என எந்தக் கட்சியாக இருந்தாலும்) தமிழ்நாட்டில் ஆட்சியாளும் எந்த அரசானாலும் தாங்கள் வெறுக்கும் கோட்பாட்டின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில அரசையே கலைக்கும் அளவுக்குக்கூட செல்லும் வகையிலேயே இருந்தது, இருக்கிறது.

தமிழ்த்தேசியம் பேசுவோரை தீவிரவாதிகள் என முத்திரை குத்திய இந்திய தேசிய அரசின் குரலை அப்படியே பெரிய அளவில் திரும்பத் திரும்ப ஒலித்தது தமிழ்நாட்டின் பத்திரிகை, ஊடகங்கள். அதிலும் பார்ப்பனர்கள் நடத்தும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் உலகின் மிகப்பெரிய பயங்கரவாதிகளைப் போல சித்தரித்தது.  

முதலில் இந்திய தேசியத்தோடு இணைந்து விடுதலைப் புலிகளையும், ஈழப் போராட்டத்தையும் கடுமையாக வெறுத்த ஜெயலலிதாவே பின்னர் எழுவர் விடுதலைக்குத் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

 
அதாவது தமிழ்த்தேசியத்தின் மையமான தமிழர் நலனை அவராலும் புறந்தள்ளிவிடமுடியவில்லை. 

ஈழ விடுதலைமைய, தமிழ்த்தேசியத்தை ஆதரித்த காரணத்தால் திமுக எதிர்கொண்ட சிக்கல்கள் ஏராளம். இன்றும் எழுவர் விடுதலை உள்ளிட்ட பல விவகாரங்களில் இந்திய தேசிய அரசின் பார்வை பாஜக, காங்கிரஸ் என எந்தக் கட்சி வந்தாலும் ஒன்றாகவே நீடிக்கிறது.

இதற்குக் காரணம் தமிழ்த்தேசியத்தின் மீதான இந்திய தேசியத்தின் புறையோடிய வன்மம், பகை. 

தமிழ்த்தேசியம் என்பது உலகில் தனித்து வாழ்வதல்ல, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடிப்படையைக் கொண்ட தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த மண்ணில் தலைநிமிர வாழும் உரிமையைப் பெறுவது.

முகவரியின்றி அகதிகளாக உலகெங்கும் அலைந்து திரியாமல் சொந்த மண்ணில் உறவுகளோடு வாழ்ந்து உலகெங்கிலும் வணிகம் செய்து வாழ்வது.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் திராவிட அரசியல் என்று பெயரிட்டு அழைத்துக் கொண்டாலும்கூட அவை தமிழ்த்தேசியத்தின் கோட்பாடுகளை உள்வாங்கித்தான் இங்கே ஆட்சி செய்ய முடிந்தது, முடிகிறது.

- தமிழகத்திலிருந்து விஷ்வா விஸ்வநாத்
-
  

No comments