திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி நிகழ்வுக்காக வைக்கப்பட்ட வீதி வளைவு அடித்துடைப்பு!

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நாளை நடைபெறவுள்ள சிவராத்திரி நிகழ்வுக்காக வீதியில் வைக்கப்பட்ட வளைவு அடித்துடைத்து அகற்றப்பட்டுள்ளது.

பல வருடங்களாக இருந்து வந்த இந்த வளைவு புதுப்பிக்கப்பட்டு மாற்று வேலைகளில் ஈடுபட்ட போது கத்தோலிக்க மதத்தினர் ஒன்றுகூடி குறித்த வளைவினை அடித்துடைத்து பிடுங்கி எறிந்துள்ளனர்.

இதுகுறித்து அங்குகூடியிருந்த கத்தோலிக்க மக்கள் தெரிவிக்கையில் குறித்த வீதியில் அமைக்கப்பட்ட வளைவு குறித்து நீதிமன்றில் வழங்கு உள்ளது. இன்று இதில் கொங்கிறீற் போட்டமையால் எங்களுக்கு கோபம் வந்தது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

காவல்துறையோ இது வீதி அதிகார சபைக்குச் சொந்தமானது. இதில் வளைவு அமைத்தது சட்டப்படி குற்றம் என்று தெரிவித்துள்ளனர்.

ஆலய நிர்வாகமோ இது பல வருடங்களாக இருக்கின்ற வளைவு. நீதிமன்றில் இதுகுறித்து எதுவித வழங்குகளும் இல்லை. வளைவு துருப்பிடித்ததால் புதிதாக இன்று சீரமைக்கப்பட்டது. நாங்கள் கத்தோலிக்க மக்களை மதிக்கிறோம். அவர்கள் இந்த வளைவை பிடுங்கி எறிந்தபோது நாங்கள் அமைதியாக நின்றோம்.

பல இனக்கலவரங்களால் பெரும் அழிவைச் சந்தித்த இனம் எங்கள் இனம். நாங்கள் மதக் கலவரத்தை விரும்பவில்லை என்றனர்.

சம்பவம் நடைபெற்றதை அறிந்தும் குறித்த இடத்திற்கு எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் செல்லவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கதது.

No comments