கப்பிற்றல் ரி.வி நிறுவனம் மீண்டும் அடாவடி - மாநகரசபை மௌனம்



கப்பிற்றல் ரி.வி நிறுவனத்தினரால் இன்றும் சட்டத்திற்குப் புறம்பான முறையில் யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கேபிள் ரி.விக்கான மின்கம்பங்கள் நாட்டப்பட்டமை தெரியவந்துள்ளது.

யாழ் மாநகர முதல்வர் இந்தியா சென்றுள்ள நிலையில் திடீரென குறித்த நிறுவனத்தினரால் மின்கம்பங்கள் நாட்டப்பட்டமை மக்களிடையே பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் உள்ளிட்டவர்களுக்கு தொடர்ச்சியாக தகவல்கள் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு பொலிஸார் வரவளைக்கப்பட்டபோதும் பொலிஸாரின் முன்னிலையிலும் மின்கம்பங்கள் நாட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



கடந்த மாதம் குறித்த கப்பிற்றல் ரி.வி நிறுவனத்தால் சட்டத்திற்குப் புறம்பான வகையில் கேபிள் ரி.விக்கான கம்பங்கள் நாட்டப்பட்ட நிலையில் அதனைத் தடுத்து நிறுத்திய யாழ்ப்பாணம் மாநகரசபையினர் குறித்த  கம்பங்களை மீள அகற்றியிருந்தனர். அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலேயே இன்றும் அடாத்தான முறையில் கேபிள் கம்பங்கள் நாட்டப்பட்டுள்ளன.

எனினும் இவற்றினை யாழ் மாநகர துணை முதல்வர் துரைராசா ஈசன் வேடிக்கை பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பிற்றல் ரி.வி மற்றும் வானொலி நிறுவனம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments