ஜனநாயகமா அல்லது பாசிஸ ஆதிக்கமா! வைகோ பேச்சு

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விழுப்புரத்தில் போட்டியிடும்  விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜனநாயகமா அல்லது பாசிஸ ஆதிக்கமா?, எது வெல்லப்போகிறது என்பதை நிர்ணயிக்கும் தேர்தலாக  இந்த மக்களவைத் தேர்தல் உள்ளது என்றார்.

கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை அமைக்கவும், தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் இயற்கை எரிவாயு எடுக்கவும் அனுமதி அளித்து அந்தப் பகுதிகளை பாலைவனமாக்குவதற்கு மத்திய பாஜக அரசு முயன்று வருகிறது. அவர்களிடமிருந்து நாட்டைக் காப்பதற்கு ராகுல் காந்தி தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும் என்ற முழக்கத்தை  மு.க.ஸ்டாலின்  முன் வைத்துள்ளார்.
வியாபாரிகள் சரக்கு, சேவை வரிகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை ரூ.2,000 கோடி வராமல் உள்ளது. இதைப் பெற்றுத் தரத் தயாராக இல்லாத அரசுதான்  எடப்பாடி பழனிசாமி தலைமையிலானஅரசு.  பருப்பு கொள்முதலில் ஊழல், பேருந்துகள் வாங்கியதில் ஊழல், நெடுஞ்சாலைத் துறை, குட்கா ஊழல் என தமிழக அரசின் ஊழல் தொடர்கிறது. அமைச்சர்கள், காவல் உயர் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு.
தமிழகத்தில் 4-ஆம் வகுப்புத் தகுதிக்கான வேலைக்கு எம்பிஏ, பொறியியல் பட்டதாரிகள் உள்பட 4,000 பேர் போட்டிபோட்டு விண்ணப்பிக்கும் அவல நிலை உள்ளது. அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்ற பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது. இதேபோல, 15 கர்ப்பிணிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்துத் துறைகளிலும் பாதிப்பு உள்ளது. இதற்கெல்லாம் தீர்வுகாணும் வகையிலும், மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலும் செயல் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் வழங்கியுள்ள திமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.

No comments