என்னை கொல்ல சதி! வேல்முருகன் பகீர் வாக்குமூலம்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தன்னை கொல்ல சதி நடப்பதாகவும் அது வடமாநிலத்தவர்களால் எனவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவைச் சந்தித்த வேல்முருகன், தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் விதி மீறல்களில் ஈடுபடுவதாகவும், அரசியல் காழ்ப்புணர்வோடு எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் புகார் மனு அளித்தார். மேலும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர் சுங்கச்சாவடி சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய வேல்முருகன், “எனது சகோதரரின் ஆடி காரில் நான் சென்றுகொண்டிருந்தேன். அது இந்தியா முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணமில்லாமல் பயணிப்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பணம் செலுத்தி பாஸ் ஒட்டப்பட்ட கார் ஆகும். நான் செல்லும்போது பல இடங்களிலுள்ள சுங்கச்சாவடிகளில் என்னை கட்டணமில்லாமல் அனுமதித்தனர்.
ஆனால், என்னை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு தமிழகத்தில் அலைந்துகொண்டிருக்கும் ஒரு வடமாநில கும்பல், விக்கிரவாண்டி பகுதிக்கு நான் அதிகாலை 3.30 மணிக்குச் செல்லும்போது, அங்கிருக்கும் சுங்கச்சாவடியிலுள்ள வடமாநில கும்பலுக்குத் தகவல் கொடுத்தது. அந்த கும்பல் உருட்டுக் கட்டை, வீச்சரிவாள், பைப்புகளை வைத்துக்கொண்டு, என் வாகனம் டோல்கேட்டை தாண்டிய பிறகு குறுக்கே வந்து என் டிரைவரை தாக்க முயற்சி செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
ஆனால், எனது டிரைவர்தான் தாக்க முயற்சி செய்தார் என்று செய்தி போடுகிறார்கள் என்று குற்றம்சாட்டிய வேல்முருகன், “முன்பு எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அனைத்தையும் திரும்பப் பெற்றுவிட்டனர். வேல்முருகன் பரப்புரையில் ஈடுபட்டால் அரசியல் மாற்றம் ஏற்பட்டுவிடும். ஆகவே தேர்தல் நேரத்தைப் பயன்படுத்தி என்னை தனிமைப்படுத்தி கூலிப்படையை வைத்து கொலை செய்துவிட வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். தமிழக அரசு, காவல் துறை எனக்குப் பாதுகாப்பு வழங்காது. எனவே உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளேன்” என்றும் தெரிவித்தார்.

No comments