பதுங்கினாரா குருகந்த ரஜமஹா விகாரை பிக்கு!


முல்லைத்தீவு நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமான முறையில் பௌத்த விகாரையை நிறுவிய பௌத்த பிக்கு நீதிமன்ற தீர்ப்பினை புறக்கணித்துள்ளார்.

நாயாறு பகுதியிலான சட்டவிரோத பௌத்த விகாரை தொடர்பான வழக்கு இன்று (28) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ் .லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றது. வழக்கின் தீர்ப்பு இன்று வழக்கப்படவிருந்த நிலையில், சட்டவிரோத விகாரை அமைத்த பிக்குவிற்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் மன்றில் முன்னிலையாக முடியவில்லையென்றும் தெரிவித்து பிக்கு நீதிமன்ற அமர்வினை புறக்கணித்துள்ளார்.இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாயாறிலுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பௌத்த பிக்கு அங்கு குருகந்த ரஜமஹா விகாரையென்ற பெயரில் பிரமாண்ட விகாரையை அமைத்திருந்தார். அது தொன்மையான பௌத்த வழிபாட்டிடம் என்றும் உரிமை கொண்டாடினார்.இந்த வழக்கு விசாரணையின் போது, அந்த இடத்தில் 2,000 வருடங்கள் பழமையான விகாரை, யாத்திரிகர் மடம் இருந்ததாக தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
கடந்த தைப்பொங்கல் தினத்தில் பிரதேசமக்கள், நீராவியடி பிள்ளையாருக்கு பொங்கலிட்டபோது, பௌத்த பிக்கு அடாவடியாக செயற்பட்டார். இதையடுத்து, இந்த பிணக்கு தொடர்பாக காவல்துறை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பே இன்று வழங்கப்படவிருந்தது.

பௌத்த பிக்கு சார்ப்பில் ஆஜரான சட்டத்தரணி, வழக்கின் ஒருதரப்பான பௌத்த பிக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிகிச்சைக்கு சென்றுள்ளதன் காரணமாக மன்றில் ஆஜராக முடியவில்லை எனவும் மன்றில் தெரிவித்தார்.

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை ஏப்ரல் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

எனினும் இந்து ஆலயமென்ற பெயரில் அங்கிருந்த தொல்லியல் சின்னங்களை இந்துக்கள் உடைத்துள்ளதாக தற்போது புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் நீதிமன்ற தீர்ப்பினை பிற்போடவே பிக்கு புற்றுநோயென பதுங்கியுள்ளாராவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

No comments