குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே நீதியாகும்!
ஈழத் தமிழின அழிப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே அதற்கான நீதியாகும்!
அதனைச் சாத்தியமாக்க, ஐநா மனித உரிமைக்குழு அறிக்கை அடிப்படையில் மேல்நடவடிக்கைக்கு அழுத்தம் தரப்பட வேண்டும் என உலகத் தமிழர்களையும் தமிழக மற்றும் இலங்கை வடக்கு - கிழக்கு மாகாண அரசுகளையும் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
ஈழத் தமிழின அழிப்பு தொடர்பாக, 2002 முதல் 2011ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை ஆராய ஐநா மனித உரிமைக்குழு உத்தரவிட்டது. அந்த விசாரணையின் இவ்வாண்டுக்கான அறிக்கையை கடந்த பிப்ரவரி 22ந் தேதி தொடங்கி இந்த மார்ச் 25ந் தேதி முடியவுள்ள 40ஆவது மனித உரிமைக் கூட்டத் தொடரில் முன்வைத்தார் ஐநா மனித உரிமை ஆணையர் சையத் அல் ஹுசைன். அதில் 2009 ஈழத் தமிழின அழிப்பு, படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவையும் இந்த மனித குல விரோத குற்றங்கள் மீதான விசாரணையில் சிங்கள அரசு காட்டிவரும் அலட்சியப் போக்கும் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு இடைக்கால நீதி வழங்குவதாக உறுதியளித்தபடி சிங்கள அரசு நடந்துகொள்ளாதது கவலையளிப்பதாக அறிக்கை கூறுகிறது. நடைபெற்ற குற்றச் செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க, நீதியையும் நல்லிணக்கத்தையும் ஒருங்கே கொண்டுசெல்ல வேண்டிய கடமை இலங்கை அரசுக்கும் இலங்கை மக்களுக்கும் உள்ளது என்றும், அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது மிக அவசியம் என்றும் வலியுறுத்துகிறது அறிக்கை.
நல்லிணக்க திட்டங்கள் தொடர்பான பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டுசெல்ல குழுக்கள் அமைக்க வேண்டும்; இலங்கையில் ஐநா மனித உரிமை ஆணைய அலுவலகம் திறக்கப்பட வேண்டும்; ராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர் நிலங்களை விடுவிக்க வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக, பன்னாட்டுப் பங்களிப்புடன் கூடிய கலப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்கிறது அறிக்கை.
மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு எதிராகவும்கூட தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்படுகிறது; காவல்துறையின் அத்துமீறல்கள், துன்புறுத்தல்கள், பாலியல் வன்செயல்கள் ஆகியவை தொடர்ந்து நடக்கிறது என்றும் சொல்கிறது அறிக்கை.
இந்தக் குற்றங்களுக்காக, ராணுவத்தின் அனைத்துப் பிரிவினர், உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என வெளிப்படையாகவே எச்சரிக்க வேண்டும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்நிலையில், ஐநா உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்க மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் தேவை என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. அந்த அவகாசத்தை வழங்க பிரிட்டன் சார்பில் பிரேரணை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் தெரிகிறது.
அதேநேரம், ஐநா நிறைவேற்றும் எந்தத் தீர்மானத்தையும் இனி இலங்கை ஏற்றுக்கொள்ளாது; ஐநா தீர்மானத்தை வைத்துக்கொண்டு ராணுவத்தைத் தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்; எமது ராணுவத்தினரிடம் எவரும் நெருங்க முடியாது, அவர்களைத் தொடவே முடியாது என்று கொக்கரித்திருக்கிறார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா.
அதோடு, இனிமேல் ஐநா தீர்மானம் மற்றும் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எவரும் என்னுடன் பேச அனுமதி வழங்காமல் இருக்க உத்தேசித்துள்ளேன்; இந்த விவகாரத்தை அப்படியே மூடிவைத்து விட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இப்படியான திமிர் எங்கிருந்து வந்தது இலங்கை அதிபருக்கு? அது இந்தியாவால் வழங்கப்பட்டதன்றி வேறென்ன?
நாம் கூறுவதெல்லாம், ஐநா மனித உரிமைக்குழுவின் உத்தரவை நிறைவேற்றாத சிங்கள இலங்கையும் அதன் இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல் குற்றவாளிகளும் ஐநா பாதுகாப்பு அவை வழியாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே. பன்னாட்டுச் சட்ட விதிகளின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட ஐநா உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை உலகத் தமிழர்கள், தமிழக மற்றும் இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாண அரசுகள் செய்ய வேண்டும்.
ஈழத் தமிழின அழிப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுதான் அதற்கான நீதியாகும்!
அதனைச் சாத்தியமாக்க, ஐநா மனித உரிமைக்குழு அறிக்கை அடிப்படையில் மேல்நடவடிக்கைக்கு அழுத்தம் தரப்பட வேண்டும் என உலகத் தமிழர்களையும் தமிழக மற்றும் இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசுகளையும் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
Post a Comment