போராடப் போகிறாராம் சுரேன் இராகவன்

வடக்கின் ஆளுநராக நான் இருக்கும்வரை, தமிழர்களது பிரச்சினைக்களுக்காக எல்லா வழிகளிலும் போராடத் தயார் என வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 40ஆவது மனிதவுரிமைகள் மாநாடு ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் அங்கு சென்ற அவர், இன்றைய அமர்வின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

மனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை. எங்களின் மக்களுக்காக எந்தளவிற்கு போராட முடியுமோ அந்தளவிற்கு எல்லா வழிகளிலும் முயற்சிகளை மேற்கொள்வேன். நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. எந்த இடத்தில் அநீதி அதர்மம் நடக்கிறதோ அதற்காகப் பாடுபடுவேன்.

விசேடமாக 83 ஆயிரம் தமிழ் மக்கள் இந்தியாவில் அகதிகளாக வாழ்கின்றார்கள் என்றால் ஒவ்வொரு தமிழனும் அதைப்பற்றிக் கேட்க வேண்டும். அதற்கு அரசியல் தேவையில்லை. வேறு எந்தக் காரணமும் இருக்கத் தேவையில்லை. தமிழனாக, மனிதனாக மட்டும் இருந்தால் போதும்.

தமிழ் மக்களிடையே இருக்கும் முக்கிய பிரச்சினை அரசியல் பிளவு தான் காரணம். இருப்பினும் நான் அதற்குள் வரவில்லை. தயவு செய்து நான் எடுக்கும் முயற்சிகளுக்கு உதவி செய்யுங்கள். கடைசி வரை நான் இருக்கும் வரை தமிழ் மக்களுக்காக என்னால் இயன்றதைச் செய்வேன்.

வடக்கின் ஆளுநராக நான் இருக்கும்வரை, தமிழர்களது பிரச்சினைக்காக எல்லா வழிகளிலும் போராடத் தயார் என்றார்.

No comments