வலிவடக்கில் காணி பிடிப்பது மஹிந்தவாம்: தமிழரசு சப்பைக்கட்டு!


வலிகாமம் வடக்கில் கடற்படை முகாமுக்காக 232 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் மஹிந்த தரப்பினாலேயே முன்னெடுக்கப்பட்டதாக தமிழரசுக்கட்சி பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது.

வலிகாமம் வடக்கில் இன்று வெள்ளிக்கிழமை நில அளவீட்டுத் திணைக்களத்தால் காணி சுவீகரிப்பிறகான அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், அந்தப் பணி கைவிடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக ஆகியோரினால் நேற்றுக் காலை தனக்கு அறிவிக்கப்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த அறிவிப்பு நில அளவைத் திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாகக் கிடைக்கவில்லை எனவும், திட்டமிட்டபடி இன்று காணி அளவீடு இடம்பெறும் எனவும் திணைக்கள வட்டாரங்கள் கூறியிருந்தன.

232 ஏக்கரில் பெரியளவிலான கடற்படை முகாமை அமைப்பதற்காக நகுலேஸ்வரம், காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் நிலங்களைச் சுவீகரிப்பதற்கு இன்று அளவீட்டுப் பணிகள் இடம்பெறும் என நில அளவைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

தமக்குப் பிரதமரால் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறி இந்தக் காணி சுவீகரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்தநிலையில், இன்று நடைபெறவிருந்த காணி அளவீட்டுப் பணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காணி அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பிரதமர் அலுவலகத்தால் நேற்று காலை தமக்கு அறிவிக்கப்பட்டதாக நாடா ளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

ஆயினும், இன்று திட்டமிட்ட படி அங்கு காணி அளவீடு இடம்பெறும் என நில அளவைத் திணைக்களம் கூறியிருந்த போதும் அளவீடுகள் இன்று முன்னெடுக்கப்படவில்லை.

ஆயினும் தமது பங்காளியான ரணில் காணி பிடிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழரசு தற்போது முன்னர் மஹிந்த இடையில் பிரதமராக பதவியேற்ற போது பிறப்பித்த உத்தரவு பிரகாரமே காணி சுவீகரிப்பு ஆரம்பமாகியிருப்பதாக சப்பைகட்டு கட்டத்தொடங்கியுள்ளது.

No comments