அரசைக் காப்பாற்ற மீண்டும் மூன்று வருட கால நீடிப்புக் கேட்கும் கூட்டமைப்பு

ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதில் உள்ளடங்கும் விடயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அதனைக் கண்காணிப்பதற்கும் இரண்டு வருடமோ அல்லது மூன்று வருடமோ கால அட்டவணை வழங்கப்படவேண்டும் என்றும் இதுவே மக்கள் சார்பில் மக்கள் பிரதிநிதிகளாக தாங்கள் விடுக்கும் செய்தி என்றும்
தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கைக்கு நெருக்குதல் கொடுக்கும் வகையில் அமெரிக்கா நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் விளக்கமளிப்பதற்கும் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் இலங்கை தொடர்பான விவாதங்கள் குறித்தும் விளக்கமளிப்பதற்காக இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதுபோதே சுமந்திரன் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

“இலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டிருக்கின்றஅறிக்கையை வரவேற்கின்றோம். இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு ஏற்றதாக றோம் தீர்மானத்தை இலங்கை ஏற்கவேண்டும் என்ற கோரிக்கையும் நாங்கள் வரவேற்கின்ற அதேவேளை நாங்கள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிக் கொடுப்பதாக எம்மீது சுமத்தப்படுகின்ற பொய் பிரச்சாரங்களை நாம் நிராகரிக்கின்றோம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நாங்கள் செய்கிறோமோ இல்லையோ ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருக்கின்ற இந்த தீர்மானம் தொடர்ந்து இருக்க வேண்டும். அதனால்தான் இந்த வருடம் ஐநா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தை நாம் வரவேற்கின்றோம். இலங்கை மீதான பார்வை இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் எனவும் நாம் வலியுறுத்துகின்றோம்.



ஆனால் நாம் இவ்வாறு கூறுவதை ஊடகங்களும் நாம் கால அவகாசம் வழங்குவதாக பிரச்சாரம் செய்கின்றன. இது உண்மை தெரிந்தும் வேண்டும் என்று எம்மீது செய்யப்படுகின்ற பொய்ப் பிரச்சாரம்.

இலங்கைக்கு கால அவசகாசம் வழங்குவதற்கு கூட்டமைப்பு இணக்கம் என எழுதுகிறார்கள். அதோடு சில தீவரவாத போலித் தேசியவாதிகளால் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. கால நீடிப்பு என்பது தவறான சொற்பிரயோகம்.

தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக காலநீடிப்பு செய்துவருகிறது நேற்று அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையிலும் இந்த கால நீடிப்பு தொடர்பாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதனால் தான் புதிய தீர்மானத்தில் ஒரு கால அட்டவணை வழங்கப்பட வேண்டும் என நாங்கள் விசேடமாக ஐந்து உறுப்பு நாடுகளை வேண்டிக் கொள்கிறோம்.

புதிய தீர்மானம் நிறைவேற்றப்படுவதை அதை எதிர்க்கும் வகையில் ஒரு குழுவை ஜெனிவாவுக்கு அனுப்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார். துரதிஸ்டவசமாக புதிய தீர்மானத்தை சில தமிழ் தரப்புக்களும் எதிர்க்கின்றனர். இது கால நீடிப்பு வழங்குவதற்கான நடவடிக்கை என்று அரபுகள் குற்றஞ்சாட்டுகின்றன.

மகிந்த ராஜபக்சவும் ஜனாதிபதியும் எதிர்ப்பதோடு மட்டுமல்ல சில தீவிரவாதிகளாக தங்களை காட்டிக் கொண்டு இருக்கின்ற சில போலி தேசியவாத தமிழ் தரப்புகளும் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடுக்க முயற்சி மேற்கொள்கிறார்கள்.
இது பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

இந்த சர்வதேச பொறிமுறையைக் கைவிட செல்லுவது எமது மக்களுக்கு எதிராக ஒரு செயற்பாடு எனவே அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுத்தால் நாங்கள் அதற்கு மாற்று நடவடிக்கை எடுப்போம்” – என்றார்.

No comments