மன்னார் புதைகுழி சந்தேகமுள்ளது:வணபிதா சக்திவேல் அடிகளார்!


மன்னார் மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டிருந்த மனித உடல்கள் ஓர் ஒழுங்கின் அடிப்படையில் காணப்படவில்லை. முறையற்ற விதத்தில் ஒழுங்கீனமாகப் போடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவை எதோவொரு விடயத்தை மறைக்கும் நோக்கில் புதைக்கப்பட்டிருப்பதால் இவ்விடயம் தொடர்பான உண்மை நிலையை அரசாங்கம் கண்டறிய வேண்டும் என வணபிதா சக்திவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெற்ற மன்னார் மனிதப்புதைகுழி மாதிரிகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதிக்கும், நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிக்கும். தொடர்பில்லை எனக்கூறி நழுவிவிட முடியாது என்று கூறியுள்ள அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் இது தொடர்பில் மறு ஆய்வு தேவை என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் காணாமல் போனோருக்கு உண்மையிலேயே என்ன நேர்ந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் வெளியிடப்பட்டுள்ள காபன் பரிசோதனை அறிக்கை குறித்து சந்தேகங்கள் இருக்குமாயின், அதனை மீண்டும் வேறொரு ஆய்வு நிறுவனத்திடம் கையளித்து மீளவும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மீண்டும் அனுப்பப்படுகின்ற நிறுவனத்தின் முடிவு அறிக்கையில் எவ்வளவு தூரம் உண்மைத்தன்மை காணப்படும் என்பதில் சந்தேகங்கள் உள்ளதாகவும் இதனை அரசு தெளிவுபடுத்த மறுத்தால் அரசாங்கம் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலமை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

No comments