நாடாளுமன்றில் சரவணபவனைக் கலாய்த்த டக்ளஸ்

தமிழ்த் தரப்பினரின் செயற்பாடுகளைப் பார்க்கின்றபோது, எங்கள் பகுதி மக்களிடையே ஒரு கதை கூறப்படுவதுண்டு. உண்மைக் கதை. அதாவது எமது மண்ணிலே பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதிலும் இதுவும் ஒன்று. எமது மக்கள் தங்களது பணத்தை நம்பிக் கொடுத்து, ஏமாந்து, தாங்களாகவே தற்கொலை செய்து கொண்ட போராட்டம். ஒருவர் ஒரு நிதிக் கம்பனியை ஆரம்பித்தார் சப்ரா என அதற்குப் பெயர் வைத்தார் என்பதால் இந்தக் கதை ‘சப்ராக்காரன் கதை’ என எமது பகுதியில் கூறப்படுவதுண்டு.

அந்த நிதிக் கம்பனி மூலமாக பல கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பிரசுரித்து, எமது மக்களிடமிருந்து பெரும்பாலான நிதியைத் திரட்டிக் கொண்;டு அவர் மாயமாக மறைந்துவிட்டார். இவரைத் தேடியும், தமது பறிபோன பணத்திற்காகவும் போராடிய எமது மக்கள் இறுதியில் எவ்விதமான தீர்வுகளும் எட்டப்படாமல் தற்கொலையும் செய்து கொண்டனர்.

அன்று தென்பகுதியின் ஆட்சியினருடனும், வடக்கிலிருந்த அதிகாரத் தரப்பாருடனும் கூடிக் குழாவி, இந்த மோசடிக் காரர் தன்னைத் தற்காத்துக் கொண்டார். இந்தவகையில் எமது மக்களின் வாழ்நாள் சேமிப்பினை சப்பித் தின்ற அந்த நிறுவனக்காரர் இன்று இந்த சபையையும் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பது வேறு கதை.

எமது மக்களது பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு, தப்பியோடிய அந்த நபர் பிறகு அந்தக் கொள்ளையடித்த பணத்தை வைத்து ஒரு பத்திரிகையையும், வேறு சில தொழில் முயற்சிகளையும் சென்னையிலும், கொழும்பிலுமாக ஆரம்பித்தார். அந்தப் பத்திரிகையில் பணிபுரிகின்ற ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களின் ஊதியங்களிலிருந்தும் ஊழியர் சேமலாப நிதி என அறவிட்டு அவற்றை ஏமாற்றியும், ஊடகவியலாளர்களை அடிமைப்படுத்தியும் வந்த இவர், இன்று முகமூடி அணிந்துகொண்டு, ஊடகப் பேராளி என தனக்குத்தானே மகுடமும் சூட்டிக் கொண்டுள்ளார் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ்ப்பாணம் நூலக எரிப்பிற்கு துணைபோன வரலாற்றைக் கொண்ட இந்தப் பேர்வழி, விளம்பரம் கருதியும், நட்டஈடுகளை குறிவைத்தும், தனது ஊடக நிறுவனத்தை தானே கூலிக்கு ஆட்களை வைத்துத் தாக்கி, அதை வருவோர் போவோருக்கெல்லாம் காட்டி வருகின்றனர்.

கடந்த காலங்களில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களது கொலைகளை செய்திகளாக்கி இலாபம் கண்ட இவர், அந்த ஊடகவியலாளர்களது மரண அறிவித்தல்களை தமது ஊடகத்தில் பிரசுரிப்பதற்குக்கூட பணம் வாங்கிக் கொண்டார். அந்த ஊடகவியலாளர்களைப் பற்றியும், ஊடக சுதந்திரம் பற்றியும் கதைத்து கொண்டு,  தனது ஊடகம் மூலமாக மக்களுக்கு வழிகாட்டுவதாக கூறி வருகின்றார்.

இதை ஏன் நானிங்கு கூறுகின்றேன் என்றால், அந்த சப்ராகாரரின் கதையைப் போலத்தான் இருக்கிறது இன்று இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் செயற்பாடும். எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

அதாவது எமது மக்களின் வாக்குகளைக் கொள்ளையடித்து, அதை வைத்து தென்பகுதி அரசுகளுடன் தங்களுக்கான சலுகைகளை, வரப்பிரசாதங்களை பெற்று, இறுதியில் அதே தமிழ் மக்களை விற்றுத் தின்கின்ற அளவுக்கு வந்தும், தமிழ் மக்களுக்கு வழி காட்டுகின்றோம் எனக் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் பார்க்கின்றபோது, தனது ஊடகத்தின் ஊடாக அக்காலகட்டத்தில் நடந்திருந்த கொலைகளை மூடிமறைத்தும், திசை திருப்பியும், அதற்கு நியாயம் கற்பித்தும் தவறான வழிகளை மக்களுக்குக் காட்டியும், பல்வேறு அழிவுகளுக்கு துணை போயிருந்த இத்தகைய நபர்களும் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டியவர்களாவர். அவர்கள் இன்று தமிழ்த் தேசியத்தைப் போர்த்திக் கொண்டு இங்கேயும் உளாவிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments