தமிழ் செம்மொழி ஆய்வு மைய தலைவராக சமஸ்கிருத விசுவாசி!

தமிழை கொச்சைப்  படுத்தியவருக்கு தமிழ் செம்மொழி ஆய்வு மையத்தின் தலைமைப் பதவி கொடுத்துள்ளது கண்டிக்கத்தக்கதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் என்று இயக்குனர் பொன்வண்ணன் ஆதங்கப்பட்டுள்ளார், இதற்க்கு எதிராக உலகத் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டியுள்ளார்,

இது தொடர்பாக அவர் பதிவு செய்துள்ள கருத்து

தமிழ் இலக்கியம் அனைத்தும் சமஸ்கிருத நூல்களின் தழுவல்”என்று எழுதிய ஒருவரைத் தேர்ந்தெடுத்து தமிழ் செம்மொழி ஆய்வு மையத்தின் - The Central Institute of Classical Tamil (CICT) ‘’தலைவராக’’பதவி கொடுப்பார்களா?
கொடுப்பார்கள்...!
திரு . இரா.நாகசாமி என்பவருக்குக் கொடுத்துள்ளார்கள்..!

சமஸ்கிருத வித்துவான் இராமச்சந்திரனின் மகனாக 1930ல் பிறந்தவர் நாகசாமி. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழியில் முதுநிலைப் பட்டப்படிப்பும்,டெக்கான் கல்லூரியில் தொல்லியல் தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
தொடர்ந்து ,இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் பயிற்சி எடுத்துவிட்டு 1959 முதல் 1963 முடிய சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக (curator) பணியில் சேர்ந்தார்.
அத்தோடு ,1963 முதல் 1966 முடிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும், பின்னர் 1966 முதல் 1988 முடிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநராகவும் இருந்தவர்.
80 வயதை கடந்த அவரின் இந்திய வரலாறு, தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்துக் குறிப்பு அறிஞரான இவரின் வரலாற்றுப் பங்களிப்பும்,தமிழ் மொழிக்கான பங்களிப்பும் மதிக்கத் தக்கதாகத்தான் இருந்தது.....அவர் அந்த புத்தகம் எழுதும் வரை...!

ஆம்...2012ல் ‘’தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தின் கண்ணாடி” (The Mirror of Tamil and Sanskrit)என்ற தலைப்பில் இவர் எழுதிய ஆங்கில நூலில் ‘’தமிழ் மொழி எழுத்து முறை’’ பிராமணர்களிடமிருந்து பெற்றது என்றும்,தொல் காப்பியம், புறநானூறு, அகநானூறு சிலப்பதிகாரம் முதலியவை சமஸ்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்றும்,சங்க இலக்கியங்கள் அனைத்தும் சமயச் சார்புடையவை ,என்றும் பதிவு செய்கிறார்.
இவை எல்லாவற்றையும் விடத் தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலே அன்று என்றும் எழுதியுள்ளார்.
அத்தோடு திருக்குறள் பற்றிய மற்றுமொரு நூலில் நான்கு வர்ணத்தை கொண்டு “திருக்குறளை”கட்டமைக்கும் அவரது செயல் சிறிதும் நாணயமில்லாதது ; கண்டனத்துக்குரியது.
அத்தோடு , தமிழை ஒரு கிளை மொழி ( Dialect) என்கிறார். பழங்குடிகளின் ஒரு கிளைமொழியாக (Dialect) இருந்த தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றுத்தான் செம்மொழியாக வளர்ந்தது என்கிறார்.

அத்தோடு, இன்று நம்மிடம் உள்ள புத்தர்,அசோகர் காலத்தைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களைக் கூட தவிர்த்து விட்டு அதற்கு எதிர்மறையான கருத்துகளையும் பதிவிட்டுள்ளார். மொத்தத்தில் இந்த நூலின் நோக்கம் சமஸ்கிருதத்தை தூக்கிப்பிடிப்பதே ! சமஸ்கிருதத்தை ஒரு மொழியாக மதிக்கிறோம்! ஆனால் அதிலிருந்துதான் தமிழ் பிறந்தது என்ற அவரின் கருத்தை வன்மையாக்க் கண்டிக்கிறோம்!
இந்நூல் வெளிவந்த பின் தமிழ் அறிஞர்கள் பலரும்,இதற்கு எதிரான கருத்துகளை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுக் கண்டனக் குரல் எழுப்பினார்கள் ! எழுப்பி வருகிறார்கள் ..!

இந்த நிலையில் தான்..
இவரது பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2018 ஆம் ஆண்டு”பத்ம பூசண்’’விருதை வழங்கியது. தமிழைத் தாழ்த்தி, சமஸ்கிருதத்தை தூக்கிப்பிடித்த அவருக்கு ‘’பத்மபூசண் பட்டம்’’ கொடுத்த கையோடு .....
இன்று தமிழ் இலக்கியம் அனைத்தும் சமஸ்கிருத நூல்களின் தழுவல் என்று எழுதிய அவரைத் தேர்ந்தெடுத்து தமிழ் - செம்மொழி ஆய்வு மையத்தின் - The Central Institute of Classical Tamil (CICT) ' செம்மொழி ஆய்வு மைய தலைவர் பதவி கொடுத்திருப்பது முரண்பாட்டின் உச்சம்..!

உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் இதற்கு எதிர்ப்பைக் காட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து கையெழுத்திட்டு தங்கள் எதிர்ப்பை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்..!
அதற்கான போராட்டத்தை முன்னெடுத்து பெரியவர் திரு.நாகசாமி அவர்களை பதவி நீக்கம் செய்யும் வரை விடக்கூடாது..!
தேர்தலில் போட்டியிடும் எழுத்தாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இரா.நாகசாமியை பதவியில் அமர்த்திய மத்திய அரசை கேள்வி கேட்க வலியுறுத்துவோம்……!

#GetoutNagasamy

- பொன்வண்ணன்.

No comments