சிங்களவர்கள் நியமனம்:கூட்டமைப்பினர் முட்டாள்களாம்!


கரம்பெலியா திட்டம் மற்றும் சில விசேட நிதிகளை கூட்டமைப்பினூடாக கையாள வைத்துவிட்டு சிங்களவர்களை வடக்கிற்கு கொண்டுவரும் திருகுதாள வேலைகளை ரணில் அரசு செய்கின்றது.இதன் மூலம் தமிழரின் குடும்ப பொருளாதாரத்துகு ஆப்பு வைக்கப்படுகிறதென தமிழரசுக்கட்சி முக்கியஸ்தரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான அரியகுட்டி பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

இது அவர்களின் குள்ளநரித்தனம். இதைப் புரிந்தும் கூட்டமைப்பினர் கையாலாக நிலையில் இருக்கின்றனர். கேட்டால் நல்லிணக்கத்துக்குப் பங்கம் என்கின்றனர். நாம் எப்போது திருந்தப்போகின்றோம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் 4 மாவட்டச் செயலகங்களிற்கு ஒரே நாளில் தென்பகுதி இளைஞர்கள் பலர் இரகசியமான முறையில் மீண்டும் சாரதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டச் செயலகங்களில் உள்ள சாரதிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் வெற்றிடத்தினைப் பயன்படுத்தி தென்பகுதி இளைஞர்களை இரகசியமான முறையில் பணிக்கமர்த்தி குறிப்பிட்ட சில காலத்தின் பின்னர் தென்பகுதி இளைஞர்களை அவர்களின் சொந்த மாவட்டத்திற்கு இடமாற்றும் உத்தி நீண்டகாலமாக இரகசியமான முறையில் பின்பற்றப்படுகின்றது.

2018ம் ஆண்டு பிரதமராக இருந்த ரணிலை நீக்கி சட்டவிரோதமாக மகிந்தவை பிரதமராக நியமித்த சமயம் மீண்டும் ரணில் பிரதமராக நியமிக்க எடுத்த முயற்சியின்போது எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் எதிர்காலத்தில் மாவட்ட இளைஞர்களிற்கே இவ்வாறான சாதாரண பணி நியமனம் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கினர்.

இந்த நிலையில் கடந்த 25 ம் திகதி தெற்கைச் சேர்ந்த 7 பேருக்கு வடக்கின் கிளிநொச்சி , முல்லைத்தீவு , மன்னார் , வவுனியா ஆகிய மாவட்டச் செயலகங்களின் சாரதிகளாக நியமிக்கப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

No comments