சிவலிங்கத்தை உடைத்தது இலங்கை காவல்துறையே!


திருகோணேஸ்வரம் ஆலயத்தில் நிறுவப்பட்ட சிவலிங்கத்தை இலங்கை காவல்துறையே உடைத்தமை அம்பலமாகியிருக்கின்றது.

இந்நிலையில் திருகோணமலைப் பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் செயற்பாடுகள், திருகோணோஸ்வரத்தின் புனிதத்துக்குப் பாதகமாக இருப்பதாக மீண்டும் மீண்டும் நிரூபணமாவதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலை தொடராமலிருப்பதை உறுதிசெய்ய, வெகுவிரைவில் திருகோணமலைக்கு நேரடியாக விஜயம் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் அன்னதான மடத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை, பொலிஸாரால் உடைத்தெறியப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசிச் சீர்செய்யப்பட்டுள்ளது எனவும்,  இந்துசமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிவராத்திரிக்கு மறுநாள், சுவாமி வீதியுலா வருகின்றமையால் திருகோணமலை நகரின் பல வீதிகளை அலங்கரிக்கும் பணிகள் இடம்பெற்றபோது, தற்காலிகமாக நிறுவப்பட்ட சிவலிங்கத்தை, தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியின்றி பிரதிஸ்டை செய்ததாகக் கூறி, பொலிஸார் உடைத் தெறிந்துள்ளமைக் கண்டணத்துக்குரியதெனத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் சுமூக உடன்பாட்டையடுத்து தற்காலிகமாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இருப்பினும், மத அனுஸ்டானங்களில் பிற மதத்தவரின் திணிப்புகள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தான் கடுமையாகப் பணித்ததாகவும் அமைச்சர், மேலும் தெரிவித்தார்.

தலதா மாளிகை போன்ற பௌத்த புனிதத் தலங்களின் கொண்டாட்டங்களை எவ்வாறு பௌத்தர்கள் சுதந்திரமாகக் கொண்டாடுகிறார்களோ, அதேபோன்றே ஏனைய மதத்தவர்களின் புனிதத் தலக் கொண்டாட்டங்களையும் பௌத்தர்கள் மதிக்க வேண்டுமெனவும், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், அனைத்து இனத்தவரையும் மதித்து நடக்கக் கூடியவர்களாக இருக்கவேண்டுமெனவும், அமைச்சர் மனோ கணேசன், மேலும் வலியுறுத்தினார்.

திருகோணமலைப் பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் செயற்பாடுகள், திருகோணமலையின் புனிதத்துக்குப் பாதகமாக இருப்பதாக மீண்டும் மீண்டும் நிரூபணமாவதாகத் தெரியவருகிறதெனவும், இந்நிலை தொடராமலிருப்பதை உறுதிசெய்ய, வெகுவிரைவில் திருகோணமலைக்கு நேரடியாக விஜயம் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

No comments