ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழர்கள் நிராகரிக்கவேண்டும்

ஒற்றையாட்சி அரசமைப்பை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இந்த உண்மைகளை எமது மக்கள் விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் என்றும் கேட்டுக் கொண்டார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், போர் முடிவடைந்ததற்கு பிற்பாடு தமிழ்த் தேசம் தன்னுடைய இருப்பிற்காகக் போராடிக்கொண்டிருக்கின்றது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த ஒன்பது வருடங்களாக தமிழ்த் தேசத்துடைய இருப்பை இல்லாமல் செய்வதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதில் முதலிலே தமிழர் ஒரு தேசமாக இருப்பதை கைவிட வேண்டுமென்பது தான் அவர்களுடைய முக்கியமான குறிக்ேகாள். தமிழர் தொடர்ந்தும் ஒரு தேசமாக சிந்திக்கின்ற வரைக்கும் எங்களுக்கென்று தனித்துவம் பேசும் இனமாக நாங்கள் தொடர்ந்தும் இருப்போம்.

தமிழ் மக்களை ஏமாற்றி இன்னுமொருமுறை ஒற்றையாட்சி அரசியலமைப்பை எம்மீது திணிப்பதற்கும் கடந்த முறைகளுக்கும் விட இந்த முறை வித்தியாசமாக தமிழ் மக்களுடைய முழுமையான ஆதரவோடு அந்த ஒற்றையாட்சியை நாலாவது முறையாக நிறைவேற்றுவதற்கு முடிவெடுத்திருக்கின்றார்கள். இது தான் இன்றைய அரசியல் யதார்த்தம்.

கடந்த 70 வருடங்களாக மூன்று அரசியல் அமைப்புக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.அந்த மூன்றும் ஒற்றையாட்சி அரசமைப்பாகத் தான் அமைந்திருந்தன.அவற்றை தமிழ்த் தலைவர்கள் நிராகரித்திருந்தார்கள்.ஆனால் இந்த முறை எம்மால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமிழ்ச் சரித்திரத்திலே முதற்தடவையாக அதே ஒற்றையாட்சி அரசமைப்பை நாம் ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றார்கள்.

கடந்த மூன்று அரசமைப்பையும் ஒற்றையாட்சி அரசமைப்பாக நிறைவேற்றிய காரணத்தினாலே தமிழ்த் தரப்புக்கள் நிராகரித்தன.ஆனால் இந்த 4ஆவது ஒற்றையாட்சி அரசமைப்பை ஆதரிக்கிறதற்கான முயற்சிகளை எம்மவர்களாலே மேற்கொள்ளப்படுகின்றது.

மூன்று முறை நிராகரித்து நான்காவது முறை நாங்களாகவே விரும்பி அதை ஆதரித்தால் அதற்குப் பிற்பாடு நாட்டில் இனப்பிரச்சினை இருக்கிறதென்ற பேச்சுக்கே இடமிருக்காது. இது தான் இன்றைக்கு இருக்கக் கூடிய ஆபத்து.   அந்த நிலையிலே வரப்போகின்ற புதிய அரசமைப்புக்கான முயற்சியை தமிழ்த் தேசம் ஒருமித்து அதனை முழுமையாக அடியோட நிராகரிக்க வேண்டும். இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்த்தியாகம் செய்தது எங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.

அந்த உயிர்கள் வீண்போக முடியாது. ஆகவே அந்த ஒற்றையாட்சி அரசமைப்பை நிராகரிக்க வேண்டுமென்பது தான் எங்கள் கடமை. அது தான் எமக்கிருக்கும் பிரதான கடமை.

இன்றைக்கு கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து தயாரித்த ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறிக் கொள்ளும் சூழலிலே இன்றைக்கு தமிழ்த் தேசத்திலே அந்த ஒற்றையாட்சி அரசமைப்பை நிராகரிக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கின்ற ஒரேயொரு தரப்பாக நாங்கள் மட்டுமே இருக்கிறோம் என்றார்.

No comments